Tuesday 23 September 2014

10.) காரணகர்த்தாவும், சூத்திரதாரியும் ...!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          கடந்த வாரம் ஒரு பதிவராக எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத வாரம். காரணம் பல இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது, இந்திய அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானியான திரு.சுந்தரராமன் (விண்வெளி ஆராய்ச்சியாளர், பெங்களூர்) அவர்கள், எனது பதிவுகளைப் பார்வையிட்டபின், என்னை அலைபேசிமூலம் தொடர்புகொண்டு பாராட்டினார். அவர், பிரபல எழுத்தாளர்கள் திரு.சுஜாதா, திரு.புஷ்பா தங்கதுரை மற்றும் 'தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம்' என வர்ணிக்கப்படும் திரு.யூகி சேது போன்றவர்களின் நண்பரும் கூட. மேலும் ஒரு தலைமை விண்வெளி ஆராய்ச்சியாளர், நான் எழுதும் விண்வெளி விஷயங்களைப் பற்றிப் பாராட்டுவதென்பது, "வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது போல". (இதுக்கு என்ன அர்த்தம்-னு என்கிட்ட கேக்காதீங்க, அதைச் சொல்றதுக்கு "யாத்ரீகன்"-னு ஒருத்தன் சீக்கிரம் வருவான்! அவன் வர்ற வரைக்கும் கொஞ்சம் காத்திருங்க.)

[இவ்விஞ்ஞானியின் தொடர்பு ஏற்பட காரணமாக இருந்த, நான் பணிபுரியும் அறக்கட்டளையின் நிறுவனரும், இயக்குனருமான திரு.சிவராஜா அவர்களுக்கும், அவரது ரத-சாரதி திரு.திருப்பதி அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.]

          இரண்டாவது காரணம், எனது சமீபத்திய பதிவு, கடந்த ஒரு வார காலத்தில், இருநூறு முறைகளுக்கு மேல், சராசரியாக பத்து நாடுகளில் பார்வையிடப்பட்டுள்ளது. இதுவரையிலும் எனது பதிவுகள் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து ஐநூறு முறைகளுக்கு மேல் பார்வயிடப்பட்டுள்ளது. ஆஸ்காரையும் மிஞ்சும், (எனது எழுத்தின் ஆர்வலர்களின்) விருது இது.

          {முன்பெல்லாம் பதிவர்கள் மட்டுமே, கருத்துகளை எனது பதிவில் வெளிப்படுத்த வசதி இருந்தது. தற்போது G-Mail கணக்கு இருந்தாலே போதுமானது என்ற அளவில் வசதிகள் மாற்றப்பட்டுள்ளது. இருந்தும் கருத்துப் பதிவுகளும், கலந்தாய்வுக் கேள்விகளும் வந்தபாடில்லை என்பதே என் ஒரே கவலை!}

          இது என் பத்தாவது பதிவு. ஒரு பதிவராக என்னை நீங்கள் அனைவரும் அங்கீகரித்த பின் உணர்ந்த ஒரு உண்மை, "பின் தூங்கி முன் எழுவது, பத்தினிகள் மட்டுமல்ல. பதிவர்களும் தான்!" ஆனாலும் கூட நீங்கள் தரும் ஆதரவுகளும், எதிர்பார்ப்புகளும், உச்சத்திற்கு என்னைக் கொண்டு சென்றாலும், அச்சத்திற்கும் உட்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் எதிர்பார்ப்புகள் வீண்போகாது என நம்பலாம். உங்களின் ஆதரவுடனும், கடவுளின் ஆசியுடனும் (அப்படி ஒருவர் இருந்தால்) இன்றைய பதிவுகளைத் தொடர்கிறேன்.

          'பகுத்தறியும் ஒரு விஞ்ஞானி, கடவுள் பற்றிப் பேசுகிறானே?' என்கிற கேள்வி உங்களுள் எழலாம். காரணம் இருக்கிறது. ஏனெனில், இத்தனை நாட்கள் கடவுளின் தேவையற்ற தன்மையை ஆராய்ந்த காரணத்தால், நம்மோடு வாழும் கடவுள் நம்பிக்கையுள்ள நண்பர்கள் பலருக்கும் 'நான் எந்த பக்கம்?' என்கிற சந்தேகம் சமீப காலங்களில் எழுந்துள்ளது. உங்களுக்கு எது சவுகரியமாகப் படுகிறதோ, அதில் என்னைப் பொருத்திக்கொள்ளுங்கள். சரி, இன்றைய பதிவில், 'கடவுள் என்றோரு சக்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உண்டா?' எனக் காண்போம். (வழக்கம் போல இதிலும் நான் எதையும் "தீர்ப்பு" போல சொல்லவில்லை. யதார்த்தமான கருத்துப்பதிவு மட்டுமே. முடிவுகள் உங்கள் விருப்பத்திற்கே விடப்படுகிறது)

          முன்னரே குறிப்பிட்டபடி, இது எனது பத்தாவது பதிவு. "10", இவ்வெண்ணிலுள்ள இருவேறு துருவ எண்கள், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் இரும எதிர்நிலைகளைக் குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதாவது, ஒளி - இருள், மேடு - பள்ளம், விஞ்ஞானம் - அஞ்ஞானம் ('மெய்ஞானம்', விஞ்ஞானத்தின் எதிர்ப்பதம் அல்ல) அதுபோல, விஞ்ஞான விளக்கங்களுக்கும் அப்பாற்பட்ட சில மர்மமான, அமானுஷ்ய விஷயங்களும் நம் உலகில் உலவுவது விஞ்ஞானப்பூர்வமாகக் கூட மறுக்க முடியாத உண்மை.

           உதாரணமாக, நமது சூரியக்குடும்பத்தை எடுத்துக்கொண்டோமானால், புதனிலிருந்து(Mercury) செவ்வாய்க் கிரகம் (Mars) வரை பாறைகளால் ஆன கோள்கள். வியாழனிலிருந்து நெப்டியூன் வரை வாயுக்களால் ஆன கோள்கள். இரண்டையும் சமகூறாய்ப் பங்கிட்டதைப் போல(!) நடுவில் விண்கற்களின் வளையம் (Asteroid Belt). ('இதில் புளுட்டோ வரவில்லையே!' என நீங்கள் கேட்கலாம். அது இவ்விரு பிரிவிலும் சேராத, பனிக்கட்டிகளால் ஆன கோள். 'இது ஒரு கோளின் தகுதியைப் பெற்றிருக்கவில்லை' எனப் பலமுறைப் புறக்கணிக்கப்பட்டு, பல சர்ச்சைகளைத் தாண்டி இன்று ஒருவாறாக, "கோள்" என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.)


(சூரியக்குடும்ப உறுப்பினர்களின் உண்மையான அளவுகள், ஒரு ஒப்பீடு)
(Family Photo)


(Asteroid Belt)

          ("போன பதிவுல செவ்வாய்கிரகவாசி, அது இது-னு 'பில்டப்' பண்ணிட்டு, இன்னைக்கு வண்டிய எங்க ஓட்டிட்டு போற?"-னு நீங்க கேக்குற நியாமான கேள்வி எனக்கு கேக்குது. ஆனா, அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கிறது அவசியம்னு எனக்குத் தோணுச்சு!)

          நான் முன்னரே குறிப்பிட்ட இரும-எதிர்நிலைகள் பிரபஞ்சத் தோற்றத்திற்கு முன்னரே கூட இருந்திருக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கை. காரணம், பிரபஞ்சம் தோன்றும் வரை அங்கு அப்படி ஒன்று இல்லை, அதாவது "௦". அதன்பின் பிரபஞ்சம் இருந்தது, அதாவது "1". இந்த இரட்டை எதிர்நிலை மட்டுமே அனைத்திற்கும் அடிப்படை. அதனால்தான் ஃபிபோனாசி வரிசை (Fibonacci Series)-யிலிருந்து, இன்று கணினியின் மூலமான இருமக்குறியீடுகள் (Binary Codes) வரை சகலமும் இவ்விரு எண்களில் அடங்கும்.


          'அனைத்தும் தோன்றும் முன்னரே கணிதம் இருந்தது' என்கிற கணிதவியலாளர்களின் கருத்துகளை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒரு மனிதனின் உயிர் மூலக்கூற்றின் (DNA) ஒட்டுமொத்த நீளத்திற்கும், பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவிற்குமான தொடர்பை முந்தைய பதிவுகளிலேயே பார்த்தோம். அதனினும் ஓர் ஆச்சர்யமான விஷயம், "விட்ருவியன் மனிதன்" (Vitruvian Man) என்றழைக்கப்படும் ஓவியம் கூறும் சூசகமான உண்மை.


(Vitruvian Man)

         கி.மு.முதலாம் நூற்றாண்டளவில் ரோமாபுரியில் வாழ்ந்த கணித அறிஞரான "விட்ருவியஸ்" (Vitruvius) என்பவர் "மனிதன் கணித அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கலாம்" என்கிற கருத்தை முன் வைத்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு, 15-ம் நூற்றாண்டில், இத்தாலியில் வாழ்ந்த பன்முகத் திறமையாளரான, "லியோனார்டோ டாவின்சி" (Leonardo DaVinci) என்பவர் ஓவியமாக வரைந்து, விட்ருவியசின் கருத்திற்கு வலுசேர்த்தார். இவ்வோவியத்தின்படி, ஒரு மனிதனின் அதிகபட்ச அசைவுகளை, ஒரு வட்டம், ஒரு சதுரம் - இவற்றினுள் அடக்கிவிடலாம். இது, "மனிதன் கணித அடிப்படையில் உருவானவனோ?" என்கிற கேள்வியை நம்முள் எழுப்புகிறது.


(Vitruvius)


(Leonardo DaVinci)

          மேலும் நம்மைச் சுற்றிலும் காணப்படும் இயற்கையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களிலும் இக்கணிதத்துவம் இருப்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக, சூரியகாந்திப் பூவின் விதைகள் அமைந்துள்ள விதம், நத்தை ஓட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம், பிரபஞ்ச சுழற்சி போன்றவை மிக முக்கியமான, அதே சமயம் சாமானியராலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய விஷயம். இந்த "ஃபிபோனாசி வரிசை"யை கி.பி. 12-ம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த, "லியோனார்டோ ஃபிபோனாசி" (Leonardo Fibonacci) என்பவர் கண்டறிந்தார்.


(Leonardo Fibonacci)


(நத்தை ஓட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்)


(சூரியகாந்திப் பூவின் விதையமைப்பு)


("குழந்தை கருவாக இருக்கும் அமைப்பு" மற்றும் "பிரபஞ்ச சுழற்சி" போன்றவை ஃபிபோனாசி வரிசையில் வரையப்பட்ட வரைபடத்தை ஒத்திருப்பதைக் காட்டும் ஒரு ஒப்பீடு)

          இவைமட்டுமல்லாது, சூரியக்குடும்பத்தின் கோள்கள், சூரியனிலிருந்து அமைந்திருக்கும் தொலைவின் அளவுகளில் மறைந்துள்ள ஃபிபோனாசி தொடர்கள் பின்வருமாறு,


(இதில் 'AU' என்று குறிப்பிடப்படும் அலகு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவை அடிப்படை அளவாகக் கருதும் ஒரு தூர அளவை முறையாகும்.)

           மேலும், நமது வளிமண்டலத்தில் காணப்படும் மந்தவாயுக்களின் அணு எண்ணிற்கும், அதற்கு ஏற்ற (அருகாமை) ஃபிபோனாசி வரிசையில் வரும் எண்ணிற்குமான ஒற்றுமை பின்வருமாறு,



          இவ்வாறாக எங்கும் கணிதம்,எதிலும் கணிதமாய்; தூணிலும் துரும்பிலும் இருப்பதாக நம்பப்படும் கடவுளுக்கு அடுத்த நிலையில், கணிதம் நம் வாழ்வியலோடு பிணைந்துள்ளது.

           அதேபோல், மனிதன் உருவாக ஒரு விந்தணுவும், கருமுட்டையும் இணைய வேண்டும். உலகிலேயே மிகச்சிறிய செல் "விந்தணு", மிகப்பெரிய செல் "கருமுட்டை". இவ்விருவேறு துருவங்கள் இணைந்தே நம் மனித இனம் தழைக்கிறது. இவ்விரு செல்களின் இருபரிமாணத் தோற்றங்களும் கூட பார்ப்பதற்கு "1" மற்றும் "௦" போல தோன்றுகிறது.


(விந்தணு - [Sperm])


(கருமுட்டை - [Ovum])

          எல்லாவற்றுக்கும் மேலாக, பைபிளின்படி, "கடவுள் உலகை ஆறு நாட்களில் படைத்தார்", என குறிப்பிடப்பட்டுள்ளது. "அது என்ன கணக்கு,ஆறு நாட்கள்?" என ஆராய்ந்தால், "6" ஒரு "ஆதர்ச எண்" (Complete Number). அதாவது ஒரு எண்ணை அந்த எண்ணைத் தவிர்த்து, அதைவிடக் குறைந்த எந்தெந்த எண்களாளெல்லாம் முழுமையாக வகுபடுமோ, அவ்வெண்களின் கூட்டுத் தொகை, நாம் தேர்ந்தெடுத்த எண்ணிற்குச் சமமாக வந்தால், அவ்வெண், "ஆதர்ச எண்" எனப்படும். ('ஒரு மண்ணும் புரியல'-னு நீங்க புலம்புறது எனக்கு கேக்குது!)கீழே கொடுக்கப்பட்டுள்ள படவிளக்கம், உங்களை தெளிவு படுத்தும் என நம்புகிறேன்.


          இது மட்டுமல்ல, இன்னும் பல ஆதர்ச எண்கள் இருந்தாலும், மிகச்சிறிய மதிப்புடைய ஆதர்ச எண் "6" மட்டுமே. 100 வரையிலான எண்களுக்குள் காணப்படும் மற்றுமொரு ஆதர்ச எண், "28". (இதுக்கு, நீங்க கணக்கு போட்டு பாருங்க!)

  "இயற்கையாகவே, இவ்வாறான ஒரு சூழ்நிலை, யாதொரு புற காரணிகள் அல்லது சக்தியின் துணையின்றி  உருவாக வாய்ப்புள்ளதா?" 

           பதில், "நிச்சயமாக" இல்லை; "யூகமாக" வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்பதே.

          அப்படியெனில்,
  • இந்த அளவிற்கு கணித முறைப்படி பிரபஞ்சத்தை இயக்கும் காரணகர்த்தா யார்? (அப்படி ஒருவர் இருக்கிறாரா?)
  • இத்தனை உயிர்களையும் ஏதோ ஒரு கணக்கீட்டைப் பயன்படுத்தி உருவாக்கிய சூத்திரதாரி யார்? (அவ்வாறு ஒருவர் இருக்க வாய்ப்புண்டா?)
  • கடவுளா? கடவுளராய்ப் பார்க்கப்படும் நம்மை விட மேம்பட்ட ஓர் உயிரினமா? (இவையனைத்தும் சாத்தியமா?)
காணலாம் அடுத்த வாரம்; காத்திருங்கள் நம்பிக்கையுடன்.

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy: Google & Facebook.


2 comments:

  1. காத்திருக்கிறேன் ஆவலுடன்........

    ReplyDelete
  2. நன்றி...ஏமாறமாட்டீர்கள் நிச்சயமாக...!

    ReplyDelete