Tuesday 11 November 2014

17.) கனவு-நாயகன்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

              நமது கடந்த பதிவில் வெவ்வேறு நபர்களின் வாழ்வில் நடந்த ஒற்றுமையுடைய பதிவுகளைக் கண்டோம். இன்றைய பதிவில் கனவுகளைப் பற்றிக் காண்போம்.

              "உறக்கத்தில் வருவது கனவல்ல; உங்களை எது உறங்கவிடாமல் செய்கிறதோ, அதுவே உண்மையான கனவு. கனவு காணுங்கள்." - ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் (A.P.J.Abdul Kalam) .



              இவ்வாறு தத்துவத்தில் மூழ்கி முத்தெடுக்காமல், தத்தித் தாவி நமது விஷயத்திற்கு வருவோம். காரணம் இன்று நாம் காணவிருப்பது, கலாம் அவர்கள் சொன்ன கனவைப்பற்றி அல்ல; காலம் காலமாக நாம் காணும் கனவுகள் பற்றி.

              சென்ற பதிவில், லிங்கன் தனது மரணத்தைக் கனவில் கண்டதாகவும், அவ்வாறே சில தினங்களில் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு, கனவில் கண்ட காட்சிகள் பலிக்குமா? அல்லது நடக்கவிருக்கும் காட்சிகள்தான் கனவாக வருகின்றதா? (ஒரு முன்னெச்சரிக்கை போல.) காணலாம் இந்த வாரம்.

               'நமது வாழ்வில் நடந்த சம்பவங்களின் நேர்த்தியான தொகுப்பு அல்லது கோர்ப்பே, கனவு' என்பது உளவியலின் தந்தை என்றழைக்கப்படும், சிக்மண்ட் ஃபிராய்ட் (Sigmund Freud)-ன் கருத்து. நமது மனதில் புதைந்துள்ள ஆழ்மன ஆசைகளும், கோபங்களும், பயங்களும் வெளிப்பட ஒரு வடிகாலாக கனவு உதவுகிறது என்பதே அறிவியலின் நம்பிக்கை. மேலும் இத்தகைய கனவுகள் நம் உடலின் மிகச்சிறந்த தொகுப்பாளரான மூளையின் உதவியால் தயாரித்து இயக்கப்படுகிறது. நாம் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது நமது காதுகள் மெலிதாக உணரும் சத்தங்களையும், சூழ்நிலைகளையும், (வாசனைகளைக்கூட!) நமது கனவுலகில் நிஜமான சம்பவம் போல நமது மூளை தொகுக்கிறது.


(சிக்மண்ட் ஃபிராய்டு)


(நிகழ்வுகளின் தொகுப்பு - கனவு)

             இவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை, தனது 'The Interpretation of Dreams' என்ற தனது புத்தகத்தில், தான் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொகுத்துள்ளார், ஃபிராய்டு. இப்புத்தகத்தை தமிழில் நாகூர் ரூமி (Nagore Rumi) என்பவர் 'கனவுகளின் விளக்கம்' என்கிற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.



(நாகூர் ரூமி)


             பெரும்பாலான கனவுகள் மேற்குறிப்பிட்ட 
  • பயம்,
  • கோபம்,
  • ஆசை,
போன்றவைகளில் ஏதேனும் ஒன்றின் வெளிப்பாடாகவே இருக்கும். இவற்றில், பயம் சார்ந்த கனவுகளில் பெரும்பாலும் பேய் சார்ந்ததும், ஒரு உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்றும் நிச்சயம் நம்மில் அநேகர் கனவு கண்டிருப்போம்.




இது அறிவியலின் பார்வையில். இனி நம்மிடையே உலவும் நம்பிக்கைகளின் அடிப்படையில் கனவின் நிலை பற்றிக் காண்போம்.

            உலகில் தோன்றிய ஒவ்வொரு மதத்திலும் கனவு குறித்த ஏதேனும் ஓர் கருத்து நிச்சயம் இடம் பெற்றிருக்கும். துர்க்கனவுகள் வருவதைத்தடுக்க மேலை நாடுகளில் Dream Catcher என்றழைக்கப்படும், அலங்காரப் பொருள் போன்ற ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். (நாம் நம்மூரில் தலையருகே செருப்பு, துடைப்பம், இரும்புப்பொருட்கள் போன்றவற்றை தலையருகில் வைத்துவிட்டு உறங்குவது போல!)


(Dream Catcher)

             கிரேக்க மதத்தில் கனவுக்கென்றே "மார்ஃபியஸ்" (Morpheus) என்றொரு கடவுள் உண்டு. அவ்வாறான கடவுள்கள் நமக்கு கனவின் மூலம் செய்திகளையோ, தீர்க்கதரிசனம் போன்ற வரும்முன் உரைக்கும் விஷயங்களையோ கூறுவார் அல்லது காட்டுவார் என்பது உலகெங்கும் பரவலாகக் காணப்படும் ஓர் நம்பிக்கை.


(Morpheus)


(புகழ்த்துணை நாயனாரின் கனவில் சிவபெருமான்)

              இந்துமத புராணங்களில் இவ்வாறான கனவில் கடவுளின் தரிசனங்களும், தகவல்களும் பற்றிய விஷயங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ மதத்திலும் கடவுள் ஒருவரது கனவில் வந்து நாளை நான் உன் வீட்டிற்கு விருந்துண்ண வர எண்ணுகிறேன் எனக் கூறியதாகவும். இஸ்லாமிய மதத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கனவில் ஒரு பாத்திரத்திலுள்ள பாலை நான் அருந்துகிறேன்; எந்த அளவிற்கு என்றால், அது என் நகக்கண்கள் வழியாக வெளியேறும் அளவிற்கு என உமர் (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார். இதற்கு அவர் ஞானம் பெற்றதாக கனவிற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, கனவுகளும் விளக்கங்களும் எவ்வாறோ நம்மூடே பின்னிப்பிணைந்துவிட்டன. இவ்வாறான விளக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், விளக்க இயலாத விநோதங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது "This Man" மர்மம்.

             அதென்ன 'திஸ் மேன்' மர்மம்? முன்பின் தெரியாத ஓர் மனித உருவம், உங்களின் கனவில் அடிக்கடி வருகிறது; கனவுலகில் நீங்கள் இக்கட்டில் இருக்கும்போது உதவுகிறது; வருத்தப்படும்போது ஆறுதல் சொல்கிறது; ஆனால் அவ்வுருவம் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை. இதே கனவு தினமும் தொடர்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

              அதே போல் ஒரு உருவம் உங்களுக்கு தெரிந்த  ஒருவரின் கனவில் வந்து அச்சுறுத்துகிறது, மிரட்டுகிறது, தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறது; ஆனால், யாரென்று தெரியவில்லை.

              இப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து அம்மனிதனை, நீங்கள் கனவில் கண்ட அதே உருவத்தை படமாக வரைகிறீர்கள். இரண்டும் அச்சுஅசலாக ஒன்றாக இருக்கிறது! அதெப்படி ஒரே உருவம் இருவர் கனவிலும் வர இயலும்? உறவினர் அல்லது தெரிந்தவரின் முகம் என்றால் கூட ஒருவாராக ஏற்றுக்கொள்ளலாம். இது முற்றிலும் தெரியாத நபரின் முகம். யாராக இருக்கும்? 'சரி, ஏதோ ஒரு சிலருக்கு ஒன்றாக தோன்றியிருக்கிறது, அவ்வளவுதானே' என இதை சாதாரணமாக விட இயலவில்லை. காரணம், அவ்வுருவ ஓவியத்தை இணையத்தில் பரவவிட்டதும், இவ்வுருவத்தை நானும் என் கனவில் கண்டிருக்கிறேன், என பலர் வாக்குமூலம் அளித்தனர். அத்தோடு தாங்கள் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஓவியங்களையும் ஆதாரமாகக் காட்டினர் (அவைகளும் ஒத்திருந்தன!). [அவர்கள் பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், பலகட்ட விசாரணை என்பதைத் தாண்டி, (ஒரு விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருப்பார்களோ? என எண்ணத்தோன்றினாலும்) 'அந்த கனவில் தோன்றுபவன் நான்தான்' என யாரேனும் கூறினால், அதை விளம்பரம் எனக் கருதலாம். ஆனால் அவர்கள், தாங்களும் அவ்வுருவத்தைக் கனவில் கண்டதாகவே கூறுகிறார்கள்.] மேலும், அவ்வுருவம் கனவில் அவர்கள் பலருக்கும் உற்ற நண்பனைப்போல் உதவியதாகவே அவர்கள் தெரிவித்தனர். யார் அந்தக் கனவு-நாயகன்?


            இவரைப்பற்றி நான்கு விதமான யூகங்கள் உலவுகின்றன. அவை,
  1. கடவுளாக/இறைத்தூதராக இருக்கலாம்,
  2. வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாம்,
  3. மனிதர்களின் பொதுவான முக அமைப்பாக இருக்கலாம்,
  4. கனவுகள்/எண்ணங்களில் ஊடுருவும் சக்திபெற்ற ஓர் மனிதனாக இருக்கலாம்,
             இவ்வாறான 'லாம்'களின், முதல் இரு யூகங்களில் முதலாவது, நாம் முன்னரே கண்ட விஷயங்களின் அடிப்படையில் உருவானது. ஒருவேளை கடவுள் அவரது உண்மையான ரூபத்தைக் காட்டாமல், ஒரு மனித உருவில் வருகிறாரோ?! என்றும், வேற்றுகிரகவாசிகள் மனிதர்களைத் தொடர்புகொள்ள இவ்வாறாக முயற்சிக்கின்றனரோ?! என்றும் கருத்துகள் காரணங்களாக்கப்பட்டன.


              மூன்றாவது யூகத்தின்படி, சில ஆய்வாளர்கள் குழு, இம்முகம் ஒரு பொதுவான கண்கள், மூக்கு, புருவங்கள், வாய் போன்றவற்றைப் பெற்றுள்ளது, (பாத்தா அப்படி ஒன்னும் தெரியலியே!) என விளக்கம் கொடுத்தனர். மேலும் இம்முகம் எவ்வித மனித குலத்தொடும் ஒப்பிடவியலாத பொதுவான முகம் எனக் குறிப்பிட்டனர். அதாவது இம்முகம், 'மங்கோலாய்டுகள்' (Mongoloids) என்றோ, 'நீக்ரோக்கள்' (Negroes) என்றோ, அல்லது இது போன்ற உலகின் எவ்வகை மனித இனத்தோடும் ஒத்துப்போகாது எனக் கூறினர்.


              நான்காவது கருத்து சற்று சுவாரஸ்யமானது! நம்மைப்போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு மற்றொரு மனிதனின் மனதினுள் அல்லது கனவினுள் ஊடுருவும் சக்தி கிடைத்திருந்தால்?! இத்தகைய அற்புத ஆற்றல் நிரம்பியவர்களை ஆராய்ச்சியாளர்கள் "Dream Surfer"-கள் என்றழைக்கின்றனர். ஆனால், இதுவரையில் அப்படி ஒரு மனிதன் விஞ்ஞானத்தின் கண்களில் அகப்படவில்லை. (உங்க யார் கனவுலயும் வந்தா சொல்லுங்க.)

             (இதே கருத்து, "Inception" படத்தில் காட்டப்பட்டிருக்கும்.)


              இதன்மூலம் நான் முன்வைக்கவிரும்பும் கேள்வி, அவ்வாறான சக்தியுள்ள மனிதர்கள் இருக்கிறார்களா? (உதாரணமாக, நமது கடந்த பதிவில், லிங்கன் தனது மரணம் பற்றிக் கனவில் கண்டது!) இவ்வாறான முடிவிற்கு நான் வரக் காரணம், நாம் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கண்ட, ஃபிராய்டு அவர்கள் கூட, "நான் பெரும்பாலான கனவுகளுக்குக் காரணம் கண்டுபிடித்திருந்தாலும், சில கனவுகள் இன்னும் விளக்க இயலாத புதிர்களாகவே உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, உண்மை என்ன? அல்லது என்னவாக இருக்கும்? காணலாம் அடுத்தவாரம்; காத்திருங்கள் அதுவரை.

அதுவரை நன்றிகளுடன்,
                     - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy : Google & Facebook.

7 comments:

  1. கனவுகளைப்பற்றி அலசுவதால் என்னுடைய கனவையும் பகிரலாமென நினைக்கிறன்.

    எனக்கு நினைவு தெரிந்து 2006லிருந்து இன்றளவும் அந்த ஒரு கனவு வந்துகொண்டு தான் இருக்கிறது. அழகா அப்படியே தரையிலிருந்து மேலே கெளம்பி பறவைங்க ஆகாயத்தில் பறக்கும் உயரத்துக்கு நான் பரப்பதுபோலவும் மிதப்பதுபோலவும், நீரின் மேலே பரப்பதுபோலவும் கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட கிராவிட்டி படத்துல ஸ்பேஸு அவங்க மெதபாங்களே அதுமாதிரி. தண்ணியில நீந்துற மாதிரி ஆகாயத்துல நீந்துவன்(கனவுலதான்).

    இதனால் என்னால் பறக்க முடியுனு நினைச்சு கிணற்றில் குதித்து பறக்க முயற்சித்திருக்கிறேன்(சிரிக்காதிங்க). ஆனால் பறக்க முடியலை .

    இந்த கனவுகள் எனக்கு ஏன் வரணும்...?
    எனக்கு ஏதேனும் செய்தியை உணர்துகின்றதா..?
    வாழ்க்கையில எதையாவது அச்சிவ் பண்ணனுங்கற ஆசையா...?
    என்னால் அதை சரியாக புரிஞ்சிக்க முடியலையா…?

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்தைப் பகிர்ந்தமைக்கும், தங்கள் வருகைக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்... நமது பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு, இது உங்கள் மனதின் அடிமன ஆசையாக இருக்கலாம்..(பறப்பதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது..?!) எனது கணிப்பின்படி, நீங்கள் இயற்பியலில் ஆர்வம் உள்ள நபராக இருக்க வேண்டும். புவியீர்ப்பைப் போன்ற ஒரு பறக்கும் சூழல் நீரில் நீந்தும்போது ஓரளவிற்கு உணரலாம் என்கிற உங்களின் சிந்தனையைப் பாராட்டுகிறேன்..! (நல்லவேளை, "சக்திமான்" காப்பாத்துவார்னு மொட்ட மாடில இருந்து ட்ரை பண்ணாம போனீங்க...!!!)

      இது உங்களின் அடிமன ஆசையாக இல்லாத பட்சத்தில், இது பூர்வ ஜென்ம பந்தமாக இருக்கக்கூட வாய்ப்புள்ளது..அதற்கான ஆதாரங்களையும் சில ஆராய்ச்சியாளர்கள் காட்டுகின்றனர்... ஆனால், அவற்றில் எனது நம்பிக்கை எந்த அளவு எனப் பார்த்தால், ஒரு ஆராய்ச்சியாளனாக அதை ஏற்றுகொள்வதில் சற்றுத் தயக்கம் இருக்கிறது..ஏனெனில் அதை நான் உணர்ந்ததுமில்லை, அனுபவித்ததுமில்லை..ஆனால், அது பற்றிய பதிவுகளை இனிவரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம்...!

      உங்கள் கனவின் காரணம் இதுதான் என வெறும் தகவல்களை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு, என்னால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. வேண்டுமென்றால் சொல்லுங்கள், உங்களை வைத்து நான் ஆராய்ச்சி செய்துகொள்கிறேன்...!!!

      Delete
    2. முன் ஐென்மத்தில் பறவையாக இருந்ததன் பதிவு. எனக்கும் பறப்பது போல் கனவு வந்துள்ளது.

      Delete
  2. DREAM SURFER
    NAAN ORUVANIDAM INTHA SAKTHI PAARTHIRUKKIREN
    THISSI TRUE NANBA

    ReplyDelete
    Replies
    1. Nice nanba... avar kuriththa thagavalgalai anuppa iyalumaa..??!! :)

      Delete
  3. நானும் சில சமயங்களில் மாடியில் இருந்து கீழே விழுவது போல கண்டு உள்ளேன். விழும்போது ஏற்படும் உணர்வு கனவில் ஏற்படும் இது எதனால்

    ReplyDelete
  4. Coin Casino - Login, Play & More - CasinoNow
    Online Casino Powered By CoinCasino! 메리트 카지노 주소 ➤ No Download ✓ Unlimited Bonus ✓ Best Online Casinos ✓ Play Hundreds 인카지노 of Slots 카지노 from your

    ReplyDelete