Tuesday 18 November 2014

18.) கனவுகள், வரும்பொருள் உரைக்குமா...?!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               சென்ற பதிவில் கனவு மற்றும் அது சார்ந்த சில புதிரான விஷயங்களைப் பார்த்தோம். இந்த வாரம், அவ்வாறு காணும் கனவுகள் பலிக்குமா? என்பது பற்றிய நிகழ்வுகளைக் காண்போம்.

                நாம் கடந்த பதிவிலேயே ஆபிரகாம் லிங்கன் தனது மரணம் பற்றி கண்ட கனவும், பின்னாளில் அது உண்மையாகவே நடந்த விஷயத்தையும் கண்டோம். இன்றும், அது போன்ற சில விஷயங்களையே ஆராய உள்ளோம்.

                இவை, இன்று நேற்று தொடங்கிய ஆராய்ச்சியல்ல. இத்தகைய கனவுகள் தொடர்பான சம்பவங்களுக்கு ஆதாரமாக, 4000 ஆண்டுகள் பழமையான காகிதம் போன்ற (Papyrus) சுவடி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 'கனவுகளும் அதன் அர்த்தங்களும்' விரிவாக எழுதப்பட்டிருந்தன.


(Papyrus சுவடி)

                அக்காலத்தில், எகிப்தில் 'தெய்வீகக் கனவு'களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். (அதென்ன தெய்வீகக் கனவு?) கலாச்சார வளர்ச்சியடைந்த பண்டைய நாடுகளான எகிப்து, சீனா, கிரீஸ், இந்தியா - இந்த நாடுகளில், நோயாளிகள் கோவில்களுக்கு வந்து, நோய் குணமடையும் வரை தங்கும் ஒரு வழக்கம் இருந்தது. இரவில், ஆலயத்தின் பிரகாரத்திலேயே தூங்க வேண்டும். நோயாளியின் கனவில் கடவுள் வந்து பரிகாரம் சொல்வாராம்(!).

                 கிரேக்க நாட்டில், "ஈஸ்க்யூலேப்பியஸ்" ( Asklepios / Asclepius / Aesculapius) ஆலயத்தில், 'மென்ட்டேஷன் (Mentation) சிகிச்சை' என்ற ஒன்று பின்பற்றப்பட்டது. ('மென்ட்டேஷன்' என்றால் "கோவில் தூக்கம்" என்று அர்த்தம்.) நோயாளிகள், கோவிலுக்கு வந்து, (விலங்குகளைப்) பலிகொடுத்துப் பிரார்த்தனை செய்துவிட்டு (ஆசாரமாக), இரவில் பிரகாரத்தில் படுத்துத் தூங்க வேண்டும். ஈஸ்க்யூலேப்பியஸ் கடவுள் அந்நோயாளியின் கனவில் வந்து சிகிச்சையளிப்பார் என்றும், சிலருக்கு தூங்கும்போது அறுவைசிகிச்சைகள் கூட நடந்துள்ளது என்றும் கூறப்பட்டது(!). (பூசாரிகளில் தேர்ந்த பல மருத்துவர்கள் இருந்ததாகவும், அவர்கள் கடவுளின் பெயரால் இத்தகைய சிகிச்சைகளையும், தூங்கும் நபரின் காதில் மருந்துகளை முணுமுணுத்தல் போன்ற [கனவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்த] செயல்களைச் செய்திருக்கலாம் என மனோதத்துவ நிபுணர்களும், நோயாளி பக்தர்களின் தீவிர நம்பிக்கையே அவர்களைப் பாதி குணமாக்கியிருக்கும் என உளவியல் ஆய்வாளர்களும் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.)


(Asklepios)


               இது போன்ற தலையீடுகள் ஏதுமின்றி தோன்றிய சில கனவு நிகழ்ச்சிகள், வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளன. அவற்றில் அலெக்ஸாண்டரின் கனவும் ஒன்று. உலகையே ஆள வேண்டும் என கனவு கண்ட இளம் பேரரசன் அலெக்சாண்டர் (Alexander The Great), அதன் ஒரு பகுதியாக பொனீஷிய நாட்டின் "டைர்" (Tyr) நகரத்தின் மீது போர் தொடுத்தார். டைர் வீரர்கள் அலெக்ஸாண்டரின் படையை கடுமையாக எதிர்த்தார்கள். அலெக்ஸாண்டரின் படை சற்று நம்பிக்கை இழந்தது. அன்றைய இரவில், அலெக்ஸாண்டரின் கனவில் "Satyr" (பாதி மனித உடலும், பாதி ஆட்டின் உடலும் கொண்ட ஒரு குட்டிச்சாத்தான் போன்ற கிரேக்கப் புராணக் கற்பனைக் கதாப்பாத்திரம் ['Narnia' திரைப்படத்தில் கூட இக்கதாப்பாத்திரம் வரும்]) ஒன்று தங்கக் கேடயத்தின் மீது நடனமாடுவது போல அக்கனவு விரிந்தது. இதன் அர்த்தம் புரியாத அலெக்சாண்டர் கவலை கொண்டார். "கனவுகளை விளக்குபவர்" எனப் பெயர்பெற்ற அரிஸ்டாந்தர் (Aristander)-ஐ வரவழைத்து கனவைச் சொல்ல, அவர். 'கவலை வேண்டாம் அரசே! இது நல்ல கனவுதான். கடவுளின் சொல் விளையாட்டு. Satyros என்பதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். Sa + Tyros. அதாவது Sa என்றால் உன்னுடையது என்று அர்த்தம். "'டைர்' நகரம் உன்னுடையது; எடுத்துக்கொள்" என்பதே கனவின் அர்த்தம்!' என்றார். அதன்பின் கிடைத்த உற்சாகத்திலும், நம்பிக்கையிலும் போரிட்டு டைரை கைப்பற்றினார் அலெக்சாண்டர். எனவே கனவுகள் மறைமுகமாகவும் ஒரு பொருளை உணர்த்தும் எனக் கூறலாம். (அலெக்சாண்டர் கனவு கண்டதால் போரில் ஜெயித்தாரா? அல்லது கனவின் மூலம் பெறப்பட்ட ஊக்கத்தினால் போரில் வென்றாரா? என்பது வழக்கம்போல சர்ச்சைக்குரிய வாதமாகவே தொடர்கிறது.)
       

(மாவீரன் அலெக்சாண்டர்)
              

(Satyr)


('அலெக்ஸாண்டரின் கனவு' போன்ற கற்பனை ஓவியம்)


('நார்நியா' திரைப்படத்தில் வரும், 'Satyr'-ஐக் குறிக்கும் "Tumnus Faun" எனும் கதாப்பாத்திரம்)

              இது நல்ல கனவு, எனவே ஊக்கம் கிடைத்தது என வைத்துக் கொள்வோம். தூக்கத்தைக் கெடுக்கும் பயங்கரக் கனவுகளும் (Nightmares) இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு ஒரு வரலாற்று உதாரணம், இன்னொரு மன்னரின் வாழ்விலுள்ளது. அவர், "ஜூலியஸ் சீசர்" (Julius Caesar).


(ஜூலியஸ் சீசர்)

              ஜூலியஸ் சீசர் சதிகாரர்களால் கொல்லப்படுவதற்கு முன்னிரவில், அவரது (மூன்றாவது) மனைவி "கல்பூர்னியா" (Calpurnia), சீசரின் உடலெங்கும் துளைகள் ஏற்பட்டு, அவற்றிலிருந்து நீரூற்று போல ரத்தம் தெறிப்பதாகக் கனவு கண்டாள். சீசரிடம் இதுபற்றிக் கூறி செனட் கூட்டத்திற்குச் செல்லவேண்டாமென மன்றாடினாள். அலட்சியப் புன்னகையோடு வெளியேறிய சீசரின் இறுதிகால நிகழ்வுகளை, வரலாறே நமக்குப் பறை சாற்றுகிறது.


(கல்பூர்னியா)


(சீசரின் மரணம்)

             'காரணம் இதுதான். நமக்கு வரும் கனவுகளையோ, அது மறைமுக உணர்த்தும் விஷயங்களையோ நாம் நம்பாமல் அலட்சியப்படுத்துகிறோம், அல்லது அவற்றை பொருட்படுத்துவதில்லை. இதனால் பல நன்மைகளை நாம் இழக்கிறோம்' என, கனவுகள் பலிக்கும் என நம்பும் சாரார் கருதுகின்றனர். 

             சரி. இவ்வாறான கனவுகளை முறையாகப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமாக ஏதேனும் சாதித்த மனிதர்கள் யாரேனும் உண்டா எனத் தேடினால், நிச்சயம் இருக்கிறார்கள் என்றே வரலாறு பதிலளிக்கிறது! அவர்களுள் மிக முக்கிய உதாரணம், "சர். ஐசக் நியூட்டன்" (Sir. Isaac Newton).


(சர். ஐசக் நியூட்டன்)

             தனது மனதில் எழும் பல குழப்பமான கேள்விகளுக்கு, கனவில் தான் நியூட்டனுக்கு விடை கிடைக்குமாம். அவற்றை அரைத்தூக்கத்தில் குறிப்பெடுத்துக்கொள்வாராம். அவ்வாறு கனவின் மூலம் பெறப்பட்ட விடைகளும், மிகச்சரியாக இருப்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சம்!

            சரி. இவர் அக்கேள்வி பற்றிய சிந்தனையோடு உறங்கச் சென்றிருப்பார், அதனால் அவரது ஆழ்மனம் விழித்திருந்து விடை கண்டுபிடித்திருக்குமா? எனப் பார்த்தால், அவ்வாறும் இல்லை. காரணம், ஒருமுறை  இவ்வாறாக நடந்திருந்தால் ஒருமனதாக இக்கருத்தை நம்பியிருக்கலாம். ஆனால், நியூட்டனுக்குப் பலமுறை இவ்வாறு நடந்துள்ளது. 

            இவராவது கேள்விக்கான பதிலை கனவில் கண்டார். நமது மண்ணின் மைந்தர் ஒருவர், கேள்வி-பதில் இரண்டையுமே கனவில் தான் கண்டாராம்! அவர், "ஸ்ரீனிவாச இராமானுஜன்" (Srinivasa Ramanujan).


(ஸ்ரீனிவாச இராமானுஜன்)

              இராமானுஜன் எப்போதும் தனது தலையருகில் ஒரு நோட்டுப் புத்தகமும், ஒரு பென்சிலும் வைத்திருப்பாராம். அதில், தன் கனவில் வரும் சமன்பாடுகளையும், சில புதிரான கணித விவரங்களையும், தேற்றங்களையும், சிக்கலான கணிதங்களையும், அவற்றின் தீர்வுகளையும் அரைத்தூக்கத்தில் கிறுக்கி வைப்பாராம். மறுநாள் விழிக்கும்வரை அது நினைவில் இருக்குமோ, இருக்காதோ என்கிற நியாயமான சந்தேகம்தான் இதற்குக் காரணம். இவரது நோட்டுப்புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான தேற்றங்கள், இன்னும் மேலைநாட்டு கணித அறிஞர்களின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், இவர் தனது குறிப்பேடுகளில் தேற்றம் - அதன் விடை, ஆகிய இரண்டை மட்டுமே பெரும்பாலும் குறித்துவைத்துள்ளார் (யாரோ கூறி இவர் எழுதியது போல!). (நாம ஸ்கூல் படிக்கும்போது படிச்ச Maths Solution Book மாதிரி) ஆனால், அவற்றுக்கு பல வழிகளில் முயன்று விடை கண்டறிந்தால், அட்சரசுத்தமாக அவர் எழுதிய விடைதான் வருகிறது. பக்கங்கள் பல தாண்டி கண்டறியப்படும் கணித விடையை, கேள்வியின் பக்கத்திலேயே பதிலாக அவரால் எவ்வாறு எழுத முடிந்தது?! இத்தனைக்கும் மேல், அவர் காலத்திற்குப் பின் உருவாகிய சில தேற்றங்களும், அவரது தேற்றத்தை நிரூபிக்கப் பயன்பட்டவயே! உண்மையில் இராமானுஜன் விந்தையான மனிதர்! (நமக்கு கணக்குதான் புரியமாட்டேங்குதுனா, கணக்குல சாதிச்ச ஆளும் அதுக்கு மேல இருக்காரு!) 

               மேலும், இராமானுஜனின் காலத்தில் கடல் தாண்டிச் செல்வதென்பது, (அவரது குடும்ப வழக்கப்படி) தீட்டாகக் கருதப்பட்டது. (எவன் இப்டிலாம் கிளப்பி விட்டான்-னு தெரியல!) இதன் காரணமாக, இங்கிலாந்து செல்ல இராமானுஜன் தயங்கினார்; அவரது குடும்பத்தினரும் அவ்வாறே தடுத்தனர். அச்சமயம் 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்' (Madras Board Trust)-ன் தலைமைக் கணக்கராக இருந்த நாராயண ஐயர்-ன் கீழ்தான், இராமானுஜன் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த நாராயண ஐயரின் உறுதி, இராமானுஜனையும், அவரது குடும்பத்தாரையும் குலதெய்வத்திடம் உத்தரவு கேட்க ஒருமனதாக சம்மதிக்க வைத்தது. அவர்களது குலதெய்வம், நாமக்கல்லில் உள்ள நரசிம்மப் பெருமாளும், நாமகிரித் தாயாரும்.

               நாராயண ஐயரும், இராமானுஜனும் 3 நாட்கள் கோவிலில் தங்கியிருந்தனர். திடீரென ஒருநாள் நடு இரவில் கண்விழித்த இராமானுஜன், "உத்தரவு கிடைத்துவிட்டது" என்றார். உண்மையிலேயே கடவுள் கனவில் வந்து சொன்னாரா? அல்லது அவர் மனம் அவ்வாறு தன்னை திருப்திப்படுத்திக் கொண்டதா? தெரியவில்லை. மேலும், 'எப்படி இத்தகைய சிக்கலான கணக்குகளுக்கு உங்களால் விடையை மட்டும், அதுவும் மிகச்சரியாகக் குறிப்பிட முடிகிறது?' என்று நண்பர் ஒருவர் இராமானுஜனிடம் கேட்டதற்கு, "என் கனவில் நாமகிரித் தாயார் தோன்றி, அத்தகைய கணக்குகளையும், அதற்கான விடைகளையும் கூறுவார், நான் குறித்துக் கொள்வேன்" எனத் தெரிவித்திருக்கிறார்! (ஹும்.நமக்கு ஒரு சாமியும் கனவுல வந்து பாடம் நடத்த மாட்டேங்குது!)

               இத்தகைய புதிருக்கான விடைக்கு, நமது பதிவில் எங்கேனும் தொடர்பிருப்பது போல் தோன்றுகிறதா எனத் தேடினால், இருக்கிறது என்பதே எனது பதில். ஆம். ஒரு பதிவில், 'கணிதம் மனிதர்கள் தோன்றும் முன்னரே இருந்திருக்கும்' என்ற அறிஞர்கள் கருத்தைப் பதிவிட்டிருந்தேன். ஒருவேளை அது உண்மையாக இருந்தால், அவ்வாறு இருக்கும் கணிதம் மனித மனதை ஒரு நிலையில் அடைகிறது எனக் கொள்ளலாம். அது தற்செயலாகவோ, அல்லது கடவுள் மூலமோ அல்லது இறந்த முன்னோரது ஆன்மா / ஆவி மூலமோ அல்லது வேற்றுகிரகவாசி போன்ற நம்மைவிட மேம்பட்ட உயிரினம் மூலமாகவோ (அவரவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப மாறுபட்டு) இருக்கலாம். 

               இவ்வாறு தூங்கும்போது வரும் கனவுணர்த்திகள், நாம் கண் மூடினாலே வந்தால் எப்படி இருக்கும்? அவ்வாறு இருக்க வாய்ப்புண்டா? அவ்வாறு நடந்திருக்கிறதா? உங்களுக்கு வரும் கனவு உங்களைப் பற்றி மட்டும்தான் இருக்குமா? உங்களைச் சார்ந்தவர்களையோ, முற்றிலும் அறிமுகமில்லாதவர்களையோ பற்றி இருக்காதா? இல்லை அவ்வாறு நிகழ்ந்திருக்கிறதா? இன்னும் பல புரியாத பல கேள்விகளோடும் குழப்பங்களோடும் காத்திருங்கள் அடுத்தவாரம் வரை.

அதுவரை நன்றிகளுடன்,
                     - அயலான்.



துணைநின்ற நூல்கள்:
  1. கடவுள் - சுஜாதா.
  2. மனிதனும் மர்மங்களும் - மதன்.
  3. கணிதமேதை இராமானுஜன் - பத்ரி சேஷாத்ரி.


மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy : Google.

6 comments:

  1. இந்த பதிவையும் இதற்க்கு முந்தைய பதிவையும் ஒரே பதிவாக எழுதியிருக்கலாமே... இரண்டுமே கனவு எனும் "காட்சிப்பிழை" பற்றித்தானே....? (சீக்கிரமா முடிஞ்சிடுரா மாதிரி ஒரு ஃபீலிங், அதுக்காகத்தான் சொன்னேன்...)

    சரி விசயத்துக்கு வரன்....

    ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் (John Forbes Nash) என்பவருக்கும் யாரோ ஒருவர் கணிதவிளக்கம் தருவதாக ஒரு "காட்சிப்பிழை" தோன்றுமாம்(Hallucination). "ஐன்ஸ்டைன்" கூட Thought Lab என்று ஒரு பதம் குறிப்பிடுகிறார்.

    மேலும் எங்கோ படித்த ஓர் செய்தி. நாம் இதுவரை கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களெல்லாம் எங்கோ ஒரு இடத்தில் (Mind Space) இருந்தவைதானாம். இதுபோல் இன்னும் நிறைய இருக்கலாமாம். ஆனால் அவையெல்லாம் எல்லோருக்கும் தங்களைக் காட்டிக்கொள்வதில்லையாம். ஆப்பிள் கீழே விழுவது குறித்து யாரும் சிந்திக்கவில்லை, 'நியூட்டன்' சிந்தித்ததில் விளைவாக 'புவியீர்ப்பு விசை' தன்னை அவருக்குக் காட்டிக்கொண்டதாம். எனக்கும்கூட அப்படியொரு "சிந்தனை" உண்டு. அவ்வகையில் ஒருவேளை எனக்கும் விடை கிடைக்கலாம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயலும்போது எனக்குப் "பைத்தியக்காரன்" என்றொரு பெயரும் மக்களிடையே இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும், தொடர்தலுக்கும், கருத்துப் பதிவிற்கும்..(இதையெல்லாம் ஒரேடியா சொல்ற, பதிவ மட்டும் பிச்சு பிச்சு சொல்றனு நீங்க நெனைக்குறது, எனக்கு கேக்குது..!) நான் எனது ஒவ்வொரு பதிவிலும், வரப்போகும் பதிவுகளில் அங்கம் பெறும் ஒரு கதாப்பாத்திரத்தை மறைமுகமாக குறிப்பிட்டிருப்பேன். அத்தகைய கதாப்பாத்திரங்களுள் ஒன்று மட்டும் ஒரு பதிவில் வருமாறு பார்த்துக்கொள்வதால், சில சமயங்களில் பதிவு விரைந்து முடிந்துவிடுகிறது...!

      மேலும், Hallucination பற்றி இனி வரும் பதிவுகளில், ஆவிகள் குறித்து குறிப்பிடும்போது, குறிப்பிட இருக்கிறேன்..அதுவரை அது தொடர்பான விஷயங்கள் Suspense-ஆக இருக்கட்டுமே...!

      நீங்கள் குறிப்பிட்ட அந்த Thought Lab பற்றிய விஷயங்களை மேலோட்டமாக முன்னரே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்..விளக்கமாக இனி வரும் பதிவுகள் ஒன்றில் எதிர்பார்க்கலாம்..

      //ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் (John Forbes Nash) என்பவருக்கும் யாரோ ஒருவர் கணிதவிளக்கம் தருவதாக ஒரு "காட்சிப்பிழை" தோன்றுமாம்(Hallucination). // அந்த யாரோ ஒருவர், எவராக இருக்கும் என்பது குறித்த தேடலும், இனி வரும்...! வழக்கம்போல் எதிர்பார்ப்புகளுடன் காத்திருங்கள்...!!!

      Delete
  2. Replies
    1. Thank you... I'll surely try to make worthy information for your waiting...!

      Delete
  3. Mapla epayo paducha niabagam. .kanavu black and whitela than irukumam. .athu unmaya??

    ReplyDelete
    Replies
    1. Sollikuranga mapla...but nalla nyabagapaduthi patha, naamalum kanavu kandirukom, adhula mostly colourful kanavuthan kandamadhiri nyabagam iruku...perumbaalanavangalaala avanga kanvula enna satta potrundhanganu kooda sariya solla mudiala...and..kanavae paadhi perukku nyabagam varaadhappo, idhellam enga nyabagam irukka poguthu...so, idhellam vachu, kanavu Black & White la than varum nu sollirukanga...avlothan..imaginationku apperpatta kanavu epdi irukanumnu paaka thonuchuna, "VAN HELSING" padathoda flash back (intro la varumae) adha patha podhum...!!!

      Delete