Tuesday 21 October 2014

14.) விண்ணிலிருந்து விழும் பொருட்கள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          நமது கடந்த பதிவில் மேலோட்டமாகக் குறிப்பிட்ட 'Fafrotsky' பற்றிய தொடர்ச்சியை, இப்பதிவில் காண்போம். பொதுவாக வானிலிருந்து நீர் மழையாய்ப் பொழியும். அரிதாக ஆலங்கட்டி மழை (நமது பகுதிகளில்) பொழியும். மிஞ்சிப்போனால் விண்கற்கள் அல்லது எரிகற்கள் போன்றவை விழும். அவ்வளவுதான் இயல்பாக விண்ணிலிருந்து விழும் பொருட்கள்; நாமறிந்த வரையில். சரி வானிலிருந்து வேறு ஏதாவது மழைபோல் பொழிந்தால்? "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்" என்பார்கள். அவ்வாறு கொடுக்கும் தெய்வம் காசு மழை பொழியச் செய்தால்?! "என்ன? கதை விடுறியா? என்பதுபோல் நீங்கள் என்னை நோக்கலாம். ஆனால் அத்தகைய வினோத மழைகளும் இப்பூவுலகில் பொழிந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் இந்த வாரம் நனைவோம், வாருங்கள்.

         இத்தகு விண் ஆச்சரியங்கள் தற்காலத்தில் நமது பூமிக்குப் புதிதாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க அறிஞர் "அதானாசியஸ்", ஏதென்ஸ் நகரில் மீன் மழை கொட்டியது பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். பைபிளில் கூட வெட்டுக்கிளி மழை பற்றியும், பாலைவனத்தில் யூதர்கள் பிரார்த்தனை செய்தவுடன், வானிலிருந்து உணவுப் பொருட்கள் விழுந்தன (Manna from Heaven) போன்ற பதிவுகளும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. (இது குறித்த சில திருப்பமான தகவல்களை வரும் பதிவுகளில் காண்போம்)



         தற்காலத்தில், சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழ்ந்த "சார்லஸ் ஃபோர்ட்" என்கிற பத்திரிகையாளர், உலகிலுள்ள, அவ்வளவாக விஞ்ஞானிகள் கண்டுகொள்ளாத ஆச்சரியங்களைக் குறித்து சேகரிக்க ஆரம்பித்தார்.1916-லிருந்து 1932 வரை பல இடங்களுக்குப் பயணித்து, தகவல்கள் சேகரித்தார்.லண்டன், நியூயார்க் போன்ற முக்கிய இடங்களிலுள்ள லைப்ரரிகளிலுள்ள நாளிதழ்களை கவனமாகப் படித்து விஷயங்கள் பல திரட்டினார். அவ்வாறு அவர் திரட்டிய விஷயங்களுள் (ஏறத்தாழ 4 பகுதிகளைக் கொண்ட என்சைக்ளோபீடியாக்கள்) அதிகளவு தகவல்கள், வானத்திலிருந்து விழும் பொருட்கள் பற்றியது. சரி. அப்படி எந்த மாதிரி மழை தான் பொழிந்திருக்கிறது என்று பார்த்தால், பட்டியல் நீள்கிறது. அவை,
  1. தவளை மழை,
  2. மீன் மழை,
  3. சிவப்பு மழை,
  4. சிலந்திவலை மழை,
  5. சில்லறை மழை,
  6. குருவி மழை,
  7. வாத்து மழை,
  8. காய்கறி மழை,
  9. பனிப்பாறை மழை,.....
          இது, இதுவரை பெய்த இத்தகைய வினோத மழைப் பொழிவுகளில், எனக்குக் கிடைத்த மிகக்குறைந்த வகைகள் பற்றிய பட்டியல் மட்டுமே. இனி, இதில் சிலவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
தவளை மழை:

          இது பற்றிய ஒரு உதாரணத்தை கடந்த பதிவின் இறுதியில் கண்டோம். மேலும் சில, இங்கே.



மீன் மழை:

           22.2.1994-ல் ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியிலுள்ள டன்மாரா என்கிற சிற்றூரில், ஆயிரக்கணக்கான மீன்கள் மழையாகப் பொழிந்தன. அவற்றில் முக்கால்வாசி மீன்கள் வாலை ஆட்டியவாறு உயிரோடிருந்தன. அப்பகுதி மக்கள் செய்தியறிந்து வந்து மீன்களை அள்ளிக்கொண்டு சென்றனர், சமைப்பதற்கு! அதே இடத்தில் ஒரு வாரம் கழித்து மீண்டும் மீன் மழை. சென்ற வாரம் 3 அங்குல மீன்கள். இந்த வாரம் 6 அங்குல மீன்கள். (என்ன ஒரு முன்னேற்றம்..?!)



          மேலும் சில, பட விளக்கங்களுடன்.



பனிப்பாறை மழை:

          ஆலங்கட்டி மழை (Hail Storm) பார்த்திருப்போம். மக்கள் மீது கல் எறிவது போல் பனிக்கட்டிகள் விழுந்தால்? அவ்வாறு பாறை போன்ற பனிக்கட்டிகள் பெய்யத்தான் செய்திருக்கின்றன. 1800-ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை (ஒரு யானை அளவு!), கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரெங்கப்பட்டினத்தில் விழுந்தது. இதை சார்லஸ் ஃபோர்டும், நேரில் வந்து பேட்டி எடுத்தும், விசாரித்தும் உறுதிப்படுத்திக் கொண்டார்.


(ஆலங்கட்டி மழை)


(சிறிய பனிப்பாறை மழை)
காய்கறி மழை:

          1971-ல் பிரேசில் நாட்டின் 'ஜோவோ பெஸ்ஸோ' எனும் ஊரில் நான்கு லாரிகள் கொள்ளுமளவிற்கு அவரைக்காய்கள் மழையாகப் பொழிந்தன. (நம்ம நாட்டுல காய்கறி விளையுறதுக்குக் கூட மழையைக் காணோம்...!)

சில்லறை மழை:

          பிரிட்டனில் மான்செஸ்டர் அருகேயுள்ள செயின்ட் எலிசபெத் தேவாலயத்தின் அருகே 28.5.1981-ல் சில்லறை மழை (Pennies) பொழிந்தது. பாதிரியார் கிரகாம் மார்ஷலுக்குக் கிடைத்த தொகை மட்டும் ஏறத்தாழ 2 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள்! (நம்ம ஊர்லலாம் இப்படி பெய்யமாட்டேங்குதே..!)

சிலந்திவலை மழை:

         பிரான்சிலுள்ள 'ஓலோரோன்' என்கிற ஊரில் 17.10.1952-ல், பலமீட்டர் நீளத்திற்கு வெள்ளியைப்போல் மின்னும் மெல்லிய நூல்கள், மெதுவாக கீழே விழுந்து சில நொடிகளில் மறைந்தன. ஒருவேளை வேற்றுகிரகவாசிகளின் வாகனக் கழிவோ? (நம் ஊர் வாகனப்புகை போல), என பலர் விழிபிதுங்கி நிற்கையில், ஒருவகை சிலந்தியின் (பலூன் சிலந்தி) வலைதான் அவ்வாறு மழையாகப் பொழிந்தது என விளக்கப்பட்டது.


         அதெப்படி சிலந்திவலை மழையாகக் கொட்டும். இது மட்டுமல்ல, இதற்கு முன் கூறப்பட்ட வினோத மழைகளுக்கும் காரணங்களாகக் கூறப்பட்ட சில விளக்கங்கள் என்னவெனில்,
  • விமானங்களிலிருந்து விழுந்திருக்கலாம்,
  • புயல் காற்றினால் சேகரிக்கப்பட்டு மழையாகப் பொழிந்திருக்கலாம்,
  • வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம்.
           இதில் முதல் இரண்டு கருத்துகள், 'இயற்கை சக்தி' (Natural); கடைசி கருத்து 'இயற்கையையும் மீறிய சக்தி' (Super Natural)

            மேற்கூறிய முதல் காரணம் (விமானங்கள்) நம்பப்படக் காரணம், 1995-ல் பிரிட்டனின் எடின்பரோ நகரில் "பிரவுன்" வண்ணத்தில் மழை பொழிந்தது. சோதனையில் அது மனிதக் கழிவு (!) எனத்தெரிந்தது. (குருநாதா...என்ன குருநாதா உங்களுக்கு வித்தியாசமான ஐட்டமா எறிஞ்சிருக்காங்க...!!!)

             இதேபோல், கனடாவில் பொழிந்த நீலவண்ண பனிக்கட்டியை சோதனை செய்தபோது, அது கழிவறைகளில் சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்படும் ஒருவகை கிருமி நாசினியுடன் கூடிய மனித சிறுநீர் எனத் தெரியவந்தது. (இதப்படிக்கிற உங்களுக்கே இவ்ளோ கோபம் வருதே. அதை சோதனை பண்ணினவன் நிலைமைய கொஞ்சம் நெனச்சுப்பாருங்க!)

             ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த நேரத்தில் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என ஆய்வறிக்கைகள் கைவிரித்தன. ஒருமுறை இதுபோன்ற ஒரு மழை (!) பொழிந்தபோது ஒரு விமானம் பறந்தது. அது இறங்கியதும் சோதனையிட்டனர். ஆனால் அதன் கழிவறையில் எவ்வித கோளாறும் இல்லை. (அப்போ எவன் பாத்த வேலை டா இது..??!!)

              அடுத்ததாக புயல் காற்று நீர்நிலைகளைக் கடந்து வரும்போது மீன், தவளை போன்ற உயிரினங்களை மழையாகப் பொழியச்செய்கிறதோ, என்கிற நோக்கில் ஆய்வு செய்யப்பட்டது. காரணம், புயல், சமயங்களில் ஆடு மாடுகளைக் கூட அலேக்காகத் தூக்கும் வல்லமையுடையது. (ஆனால், மீன், தவளை போன்றவற்றை மட்டும் எப்படி தனித்தனியாக சேகரித்து மழை போல பொழிய வைக்க முடியும்?!)



         இந்தக்கருத்தையும் முறியடிக்க ஒரு சம்பவம் நடந்தது. 1986-ல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே 1000 மைல்களுக்கு அப்பால் கைரிபட்டி (காரியாபட்டி இல்ல) எனும் தீவுகளுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் வழிதெரியாமல் நடுக்கடலில் 4 மாதங்கள் சிக்கிக்கொண்டனர். அரசாங்கமும் அவர்களைத் தேடும் படலத்தைக் கைவிட்டது. அங்கு சுறாமீன்கள் மட்டுமே உலவும் எப்படியோ போராடி, சுறா மீன்களை வேட்டையாடி, அத்தனை நாட்கள் பச்சையாக உண்டு உயிர் பிழைத்தனர். ஒரு நாள் மூவரும் மண்டியிட்டு, "கடவுளே, சுறா மீன் எங்களுக்கு அலுத்துப் போய் விட்டது. வேறு எதாவது சாப்பிடத் தரமாட்டாயா?" என அச்சூழலிலும் தமாஷாக வேண்டினர். ஒருமணிநேரம் கழித்து சடசடவென மீன் மழை பொழிந்தது. அவையனைத்தும் தேர்ந்த மீனவர்களால் கூட பிடிக்க இயலாத கருப்பு நிறமுடைய, கடலுக்கடியில் 800 அடி ஆழத்திற்குக் கீழ் வசிக்கக்கூடியவை. இது நடந்த இரு தினங்களுக்குள் அவர்கள் அதிர்ஷ்டவசமாக ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டனர். அப்போது இவர்கள் கையோடு கொண்டு  சென்ற மீன்களைப் பார்த்து அக்கப்பலிலிருந்த அனைவரும் அதிசயித்தனர். ஒரு புயல் கடலின் 800 அடி ஆழத்தில் வாழும் மீனை உறிஞ்சி எடுத்து, தேக்கி பின் மழையாகப் பொழிய வைக்க முடியுமா? (அதுவும் அவர்கள் பிரார்த்தித்த அதே நேரத்தில்!) இது, 'புயல்' கருத்தை வலுவிழக்கச் செய்தது. ('பிரார்த்தனைகள் பலிக்குமா?' என்பது பற்றியும் வரும் பதிவுகளில் காண்போம்)

         அத்தோடு, முன்னர் கண்ட சிலந்திவலை மழை போல், 28.10.1988-ல் இங்கிலாந்தின் ஆங்கிலக் கால்வாயை ஒட்டிய ஓர் ஊரில் முப்பது சதுர மைல் அளவிற்கு, ஐம்பதடி உயரத்தில் சிலந்திவலை நூல்கண்டாலான பிரம்மாண்ட மேகம் மிதந்துகொண்டிருந்தது. "அந்த அளவிற்கு சிலந்தி வலைகள் பிய்ந்து, பின்று ஒன்றுபட்டு, ஒரு மாபெரும் உருண்டையாக மாறி எப்படி மிதக்கமுடியும்?" என இன்றுவரை விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். "ஒருவேளை அமேசான் போன்ற அடர்ந்த காடுகளிலுள்ள லட்சக்கணக்கான சிலந்திவலைகளின் தொகுப்பாக இருக்குமோ?" என கேட்கத் தோன்றினாலும், "எவ்வாறு அந்த சிலந்திவலைகள் மட்டும் சேகரிக்கப்பட்டன?", "அவ்வாறு திரட்டப்பட்ட உருண்டையிலிருந்து எவ்வாறு ஒவ்வொரு நூலாகப் பிரிந்து மழையாகப் பொழியும்?" போன்ற எதிர்க்கேள்விகள் ஆராய்ச்சியாளர்களை இன்னும் குழப்புகின்றன.

          அப்படியெனில் இது வேற்றுகிரகவாசிகளின் செயலா? என நோக்கும்போது, கிடைத்தது ஒரு விஷயம்.

சிவப்பு மழை:

           சமீபத்திய ஆண்டுகளில் கேரளா, இலங்கை போன்ற நாடுகளில் பெய்த சிவப்பு நிற மழை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவற்றின் சிவப்பு நிறத்திற்குக் காரணம், ஒரு சில பாக்டீரியாக்கள் என காரணங்கள் விளக்கப்பட்டாலும், ஒரு சில தகவல்கள் சற்று உதறலைக் கொடுத்தது. ஆம். அதில் ரத்த சிவப்பணுக்கள் காணப்பட்டன. இதில் இன்னுமோர் அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில், அந்த சிவப்பணு, தற்போது பூமியில் கண்டறியப்பட்டுள்ள எந்தவொரு உயிரினத்தின் ரத்த மாதிரியுடனும் ஒத்துப்போகவில்லை என்பதே!



          'உங்களுக்குத் தெரிந்தவர்களை இடி தாக்கியிருக்கிறதா?'  எனக்கேட்டால், பெரும்பாலும் பதில், "இல்லை" என்றுதான் வரும். அதற்காக 'உலகில் இடி தாக்கி உயிர் இழப்பவர்களே இல்லை' என்பது பொருள் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். "இதெல்லாம் செல்லாது செல்லாது...நாங்க நம்ப மாட்டோம்" என்று சொல்பவர்களுக்கு ஏதாவது மனிதன் வானத்திலிருந்து குதித்தால்தான் உண்டு.


          இப்போதும்கூட குதிக்கிறார்கள்; பாராசூட்டின் உதவியோடு! சரி. 'அப்படியெனில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு உண்மையா?' (இதத்தானய்யா ஆரம்பத்துல இருந்து கேக்குறோம்-னு நீங்க கோரஸ் பாடுறது எனக்குக் கேக்குது) அடுத்தவாரம், நமது பூமிக்கு வந்து, நம்மோடு வாழ்ந்து மறைந்த வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்போம்.

          தற்போது மழைக்காலம் வேறு; எதுவேண்டுமானாலும் மழை போல் விழலாம். எதற்கும் தயாராக இருங்கள்! அடுத்தவாரம் 'அவர்களை' அழைத்து வருகிறேன்; காத்திருங்கள்.

அதுவரை நன்றிகளுடன்,
                       - அயலான்.



துணை நின்ற நூல்:

மனிதனும் மர்மங்களும் - மதன்.


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Rain_of_animals
http://thebiggeststudy.blogspot.in/2012_08_01_archive.html
http://en.wikipedia.org/wiki/Red_rain_in_Kerala
http://thewatchers.adorraeli.com/2012/11/18/sri-lanka-red-rain-mistery-solved/


Photo Courtesy : Google.

4 comments:

  1. இந்த பதிவில் எழுத்தாளர் மதன் அவர்கள் எழுதிய "மனிதர்களும் மர்மங்களும்" புத்தகத்தின் தாக்கம் தெரியிகிறதே?....இருந்தாலும் பரவாயில்லை அருமையான பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நண்பருக்கு..!

      தங்களின் வருகை குறித்து மகிழ்ந்தேன்... உங்களது மனம்திறந்த விமர்சனத்திற்கு எனது நன்றிகள்...அது உண்மையில் மதன் எழுதிய "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தின் தாக்கத்தில் எழுதிய நமது பதிவுகளின் கோர்வைதான்...அதன் காரணமாகவே, இப்பதிவின் இறுதியில் 'துணை நின்ற நூல்', என அதன் ஆதார நூலையும் குறிப்பிட்டிருந்தேன்...மேலும், எனது இதன் தொடர்சிப்பதிவில், மதன் அவர்களுக்கு வெளிப்படையாகவே நன்றி கூறியிருக்கிறேன், அத்தகைய புத்தகத்தின் வாயிலாக நம்மைப் போன்றவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக...! இதன் தொடர்ச்சியையும் தொடர்ந்து படிக்குமாறும், என்றும் உங்கள் வருகையைப் பதிவுசெய்யுமாறும், அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...! நன்றி...!! இத்தகைய ஊக்கங்களே, நாளை எனது பதிவில் ஆக்கங்களாகின்றன...!!!

      Delete
  2. மீன் மழை,
    ,
    சூறைக்காற்றுடன் மீன்களும் வானில்மேகக்குட்டங்களுடன் சிக்கி பின்னா் மழையுடன் பூமியை அடைவதாக செய்திகள்ள வந்தது

    ReplyDelete
    Replies
    1. ஆமா... ஆனா, அது ஒரு சாத்தியக்கூறா இருக்க வாய்ப்புண்டு-னு சொன்னாங்களே தவிர, இதுதான் காரணம்-னு ஆணித்தரமா நிரூபிக்கல.

      Delete