Saturday 21 February 2015

26.) அடுத்த குறி...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவு இதுவரை பதிவிட்ட பதிவுகளின் வரலாற்றிலேயே, மிகக்குறைந்த நாளில் மிக அதிக வாசகர்களால் பார்வையிடப்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. ஒரு நாணயத்தின் இருபுறம் போலவே, இன்பம் மிகும் வேளையிலும், சோகம் சூழ மறப்பதில்லை. எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை, அந்த நாணயம் எப்போதும் செங்குத்தாகவே நிற்கிறது; இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர அனுபவிக்கிறேன். என்ன துன்பம் என்றால், எனது கணினியில் ஏறத்தாழ 5 ஆண்டுகாலம் திரட்டி வைத்திருந்த தரவுகளனைத்தும், நினைவகக் கோளாறால் முற்றிலும் அழிந்துவிட்டன. உண்மையில் எனக்கு எதுவுமே தோன்றவில்லை. முற்றிலும் உறைந்துவிட்டேன்; முழுவதும் உடைந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகால உழைப்பை மீண்டும் மீட்டெடுப்பது என்பது, கனவில் கூட சாத்தியமற்ற ஒன்று. (இதையெல்லாம் ஏன் எங்ககிட்ட சொல்ற-னு நீங்க கேக்கலாம். என்னமோ தோணுச்சு. அவ்ளோதான். அதுக்காக பதிவுகள் எதுவும் பாதிக்காது. பயப்பட வேண்டாம். சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.) கடந்த பதிவின் மூலம் அரிகோவைப் பற்றித் தெரிந்துகொண்ட நண்பர்கள் சிலர், "இப்ப அந்த ஃபிரிட்ஸோட ஆவி என்கிட்ட வந்து, அரிகோகிட்ட கேட்ட மாதிரி என்னையயும் (அரிகோ மாதிரி) யூஸ் பண்ணிக்கவா-னு கேட்டா எவ்ளோ நல்லா இருக்கும்?!" (ஓவர் நைட்-ல ஒபாமா டா..!) என்றெல்லாம் கேட்டார்கள்! அவர்களைப்போல் வாசகர்கள் பலருக்கும் தோன்றியிருக்கலாம். அவர்களுக்காகவே இப்பதிவு. அதோடு, கடந்த பதிவில் நம்முள் ஏற்பட்ட சில வினாக்களுக்காகவும். இதுவும் தாமதமான பதிவாக இருந்தாலும், மின்கலத்தைக் கண்டறிந்த "அலெஸ்ஸாண்ட்ரோ வோல்டா" (Alessandro Volta)-வின் 270-வது பிறந்த நாளன்று (18.2.2015) அன்று தொடங்குவதில் மகிழ்ச்சியே! (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..!) (உண்மையில் மின்கலத்தை முதலில் கண்டுபிடித்தது வோல்டா தானா? அதுகுறித்து இனிவரும் பதிவுகளில் காணலாம்.)

           அரிகோவின் மறைவிற்குப் பின்னும் ஃபிரிட்ஸின் ஆவி மற்றொரு நல்லவரைத்(!) தேடி அலைந்தது. அப்போது சிக்கியவர், அரிகோவின் சகோதரர் "ஆஸ்கார் வைல்ட்" (Oscar Wilde). (ஆஹா... பக்கத்துலேயே இருந்திருக்கானே பா..!) அவரும் அரிகோவைப் போல கத்தியோடு கிளம்ப, முதலில் தயங்கிய மக்கள், அரிகோவிடம் கண்ட அதே வேகத்தையும், கருணையையும் கண்டு நம்பி, வைத்தியத்திற்கு தங்கள் கைகளை நீட்டினர். (தம்பி... பிஞ்சு கை... பாத்து...!) வரிசையும் நீண்டது. அரிகோவைப் போலவே ஆஸ்காரும் ஃபிரிட்ஸின் ஆவியே தன்னை இவ்வாறு செய்யத் தூண்டுவதாகத் தெரிவித்தார். இவரும் வெகு விரைவில், அரிகோவைப் போலவே ஒரு கோரமான கார் விபத்தில் பலியானார். (ஆத்தி...!!!) இது மீண்டும் அவ்வூர் மக்களை சோகத்தில் தள்ளியது.

           அவரைத் தொடர்ந்து, அரிகோவின் இன்னொரு சகோதரரான "எடிவல்டோ வைல்ட்" (Edivaldo Wilde) கையில் கத்தியோடு புறப்பட்டார். இவருடைய முடிவும் விரைவாகவே நெருங்கியது. இவரும் ஒரு மோசமான கார் விபத்தில் பலியானார். (இவருமா..?!) இவ்வாறாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு ஃபிரிட்ஸின் ஆவி பீடித்ததும், அவர்கள் மூவரும் சொல்லி வைத்தாற்போல் அடுத்தடுத்த கார் விபத்துகளில் பலியானதும் ஊர் மக்களிடையே பீதியையும், ஆச்சர்யத்தையும் ஒருசேர வரவழைத்தது. (ஊருக்கு நல்லது பண்றவங்க கார்ல போறத பாத்திருக்கேன்.. ஆனா இப்படி கார்-ல 'போறவங்க'ள இப்பதான் பாக்குறேன்...!) (இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் அரிகோவால் ஆட்கொள்ளப்பட்டதாகவும், பின் இருவரும் சேர்ந்தே விபத்தை சந்தித்ததாகவும் கூறுவர். எப்படியோ, இருவரும் ஆட்கொள்ளப்பட்டனர்; இருவரும் கார் விபத்தில் இறந்தனர்.)

           அடுத்ததாக ஃபிரிட்ஸால் ஆட்கொள்ளப்பட்டவர், பிரபல மகப்பேறு மருத்துவரான "டாக்டர்.எட்சன் க்யூரோஸ்" (Dr.Edson Queiroz). (அப்பாடா... ஒருவழியா இந்த ஃபிரிட்ஸு ஒரு உண்மையான டாக்டர புடிச்சிட்டாரு பா..!) இவரும் அரிகோவை நினைவூட்டும் வகையில், முரட்டுத்தனத்துடன் கூடிய, நுணுக்கமான பல அறுவை சிகிச்சைகளை செய்தார். இவருடைய முடிவும் மிக விரைவில் நெருங்கியது. (ரைட்டு... நெக்ஸ்ட்டு...!) ஒருநாள், அவரது எதிரி ஒருவன் கத்தியால், எட்சனை சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்தான். (கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு-ங்கறது இதுதானா..?!)

           அதன்பின் "ரூபன்ஸ் ஃபாரியாஸ்" (Rubens Farias) என்பவரை ஆட்கொண்டது. (இப்ப இவர பிடிச்சுது கெட்ட நேரம்...!) கடந்த இருபது வருடங்களாக, டாக்டர்.ஃபிரிட்ஸின் ஆவி இவர்மூலம்தான் மருத்துவசேவை செய்து வருகிறது. பிரேசிலின் பாம் சக்ஸஸோ-வைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரான இவரிடமும் அரிகோவிடம் வந்தது போன்றே மக்கள்கூட்டம் மொய்க்கிறது. இவர் அரிகோவிடமிருந்து சற்றே மாறுபட்டவராக, நவீன உபகரணங்களையும் உபயோகிக்கிறார். (ஆனாலும் ரத்தம் வருவதில்லை!) ஜெர்மன் வாடை வீசும் போர்த்துக்கீசிய மொழியில் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் இவர்மீதும் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. நாளொரு சர்ச்சைகள் கிளம்பினாலும் அதுகுறித்து ரூபன்ஸோ, அவரை நம்பி வரும் மக்களோ பொருட்படுத்துவதில்லை. கூட்டத்தினரின் வரிசை அனுமார் வால்போல் நீண்டுகொண்டுதான் செல்கிறது. (சரி, அனுமாருக்கு வால் எப்டி அவ்ளோ நீளத்துக்கு நீண்டுது..?! அதெல்லாம் உண்மையா..?! அதுகுறித்து எதிர்கால பதிவுகளில்..!) சமீபத்திய பேட்டி ஒன்றில் ரூபன்ஸ் கூறியதாவது, "இப்போது டாக்டர்.ஃபிரிட்ஸின் ஆவி என்னைத்தான் கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. இதுவரை டாக்டர்.ஃபிரிட்ஸ் உபயோகித்த(!) அனைத்து மனிதர்களும் வலிமிகுந்த துர்மரணத்தையே சந்தித்துள்ளனர். நானும்கூட அதற்குத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்." (அதானே பாத்தோம்..! எப்பா... யாருப்பா அங்க, அரிகோ என்கிட்ட ஹெல்ப் கேட்டா சந்தோஷப்படுவேன்-னு சொன்னது...?!) 


(நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் ரூபன்ஸ் ஃபாரியாஸ்)

           சரி, இத்தனைக்கும் காரணமான அந்த ஃபிரிட்ஸ் யார்? அரிகோவே ஒருமுறை ஃபிரிட்ஸ் தன்னைப் பற்றிக் கூறியதாக சொன்ன தகவல்கள் இதோ. (ம்...ஃபிளாஷ்பேக் ஆரம்பம்...!) முதல் உலகப்போரின்போது ஜெர்மானிய இராணுவத்தின் ஜெனரலாகவும், மருத்துவராகவும் பணியாற்றியவர் டாக்டர்.அடால்ஃப் ஃபிரிட்ஸ் (Dr.Adolf Fritz). இவர் 1861-ல் ஜெர்மனியிலுள்ள (Germany) முனிச் (Munich) நகரில் பிறந்தார். இவர் பிறந்த சமயத்தில், இவரது தந்தை ஆஸ்துமாவால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவரை சோதித்த மருத்துவர், நல்ல காலநிலையுள்ள இடத்திற்குப் புலம்பெயர்ந்தால் குணமாக வாய்ப்பிருப்பதாக ஆலோசனை கூறினார். இதன் காரணமாக, 4 வயது நிரம்பிய ஃபிரிட்ஸுடன், அவரது குடும்பம் அருகிலிருந்த போலந்து (Poland) நாட்டிற்குக் குடிபெயர்ந்தது. பின்னர், சில ஆண்டுகளில் ஃபிரிட்ஸின் பெற்றோர் காலமானார்கள். இதன்பின் தனது சொந்த முயற்சியால் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார்.


(ஃபிரிட்ஸின் கற்பனை உருவக ஓவியம்)

           ஒருநாள், ஒரு மோசமான சம்பவம் ஃபிரிட்ஸின் வாழ்வில் நடந்தது. இராணுவ மேஜர் ஒருவர், உடல்நிலை மோசமாக இருந்த தனது மகளை தோளில் சுமந்தவாறு ஃபிரிட்ஸின் வீட்டை அடைந்து, அவளுக்கு முதலுதவி ஏதேனும் அளித்து காப்பாற்றுமாறு வேண்டினார். ஃபிரிட்ஸ் அப்போது இராணுவத்தில் மருத்துவராக இருந்தாலும், அவர் பட்டம் பெற இன்னும் ஒரு மாதம் இருந்தது. ஃபிரிட்ஸ் தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளை மேற்கொண்டபோது, ஏற்கனவே அபாய கட்டத்திலிருந்த அப்பெண் இறந்து போனாள். இதனால் கோபமடைந்த அந்த இராணுவ மேஜர், தனது மகளை ஃபிரிட்ஸ் கொலை செய்துவிட்டதாகக் களேபரம் செய்ததோடு, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஃபிரிட்ஸை சிறையிலடைத்தார். (தானா போற உயிர, தடியால அடிச்சுக் கொன்னுட்டீங்களே அண்ணே..!) சிறையில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டார். தினமும் சொல்லமுடியாத அவலங்களும், சித்ரவதைகளும் அவரை சூழ்ந்தன. இதற்குமேல் அடி, உதைகளைத் தாங்கமுடியாது என வெகுண்டெழுந்தவராய், 1914-ல் சிறையிலிருந்து தப்பிய பின், எஸ்டோனியாவை (Estonia) அடைந்து, அங்கு 1918 வரை வாழ்ந்ததாகவும், டாக்டர்.ஃபிரிட்ஸ் தன்னிடம் கூறியதாக அரிகோ கூறியிருந்தார். (அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து, அரிகோ தெரிவித்ததாகத் தெரியவில்லை.) இவ்வாறாக அரிகோ கூறிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு டாக்டர்.ஃபிரிட்ஸ் என்றொருவர் இருந்தாரா? என ஜெர்மானியக் கோப்புகளிலும், ஆவணங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. ம்ஹும்...ஒரு தகவலும் இல்லை. அப்படியானால், அப்படி ஒரு நபரே இல்லையா? அது அரிகோவின் கற்பனையா? என்றால், அப்படி சொல்வதற்கும் சாத்தியம் இல்லை.ஏனெனில், அவ்வாறு மறுப்பதற்குக் காரணங்கள் பல உண்டு.

           உதாரணத்திற்கு, 'நோயாளிகளிடம் அவர்களின் நோய் பற்றி விசாரிக்காமலேயே எவ்வாறு உங்களால் சிகிச்சையளிக்க முடிகிறது?' என்கிற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, அரிகோ, "நோயாளி என் அருகில் வந்தவுடனேயே, அவருக்கு என்ன நோய், என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்பதை டாக்டர்.ஃபிரிட்ஸ், எனது இடது காதில் கூறுவார் (அல்லது கேட்கும்). நானும் அவர் சொல்வதுபோலவே செய்வேன். (ஏன்?அவரு வலது காதுல சொல்லமாட்டாரா-னுலாம் கேக்கக்கூடாது... ஏன்-னா எனக்கு அதுக்கு பதில் தெரியாது..!) சமயங்களில் கூட்டத்தினரின் இரைச்சலால் அவர் கூறுவது என் காதில் விழாது. அதுபோன்ற சூழ்நிலைகளில்தான் அமைதியாக இருக்கும்படி மக்களிடம் கோபப்படுவேன். எனக்கு ஜெர்மானிய மொழி தெரியாததால், அவர் என்னுடன் போர்ச்சுக்கீசிய மொழியில்தான் உரையாடுவார். சிலர் ஜெர்மன் மொழியில் சந்தேகம் கேட்கும்போது அவர் கூறுவதை நான் கிளிப்பிள்ளை போல, திரும்பக் கூறுவேன். சில முக்கியமான, பிரச்சனைக்குரிய நோயாளிகளை அணுகும்போது மட்டுமே, நான் அவரால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டு சுயநினைவை இழக்கிறேன்." என்றார்.

           ஒரு கற்பனைக் கதாப்பாத்திரத்தை அரிகோவாக உருவாக்கியிருந்தால், அவர் செய்யும் அறுவைசிகிச்சையின்போது ரத்தம் வராத அதிசயம், நோயாளிகளுக்கு வலிக்காத ஆச்சர்யம், அவர்களிடம் நோய் குறித்து ஏதும் கேட்காமலேயே சாதாரண மருந்துகளால் அவர்களின் தீரா நோய்களைத் தீர்த்துவைத்த வினோதம், இத்தனைக்கும் அவர் சல்லிக்காசுகூட வாங்காத அபூர்வம் போன்றவை மர்மங்கள் சூழ்ந்த மர்மங்களாய் வேர்விட்டு நின்றன. எனக்கு இதையெல்லாம் தாண்டி மேலெழுந்த கேள்விகள் என்னவெனில்,

  1. ஏறத்தாழ 1918-லேயே எப்படியும் ஃபிரிட்ஸ் இறந்துவிட்டார். அதே ஆண்டு பிறந்த அரிகோவையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக கண்டுபிடித்து, (அதற்கு முன் ஒருவரை உபயோகித்து, பின் அந்த நபரின் சுயநலம் காரணமாக பிரிந்தாலும்) உபயோகித்துக் கொண்டார். ஆனால், அரிகோவைத் தேர்ந்தெடுக்கும் முன் உலகிலுள்ள அனைவரையும் கண்காணித்துவிட்டுதான் அரிகோவை இறுதியாகத் தேர்ந்தெடுத்ததா, ஃபிரிட்ஸின் ஆவி? 
  2. அரிகோவின் இறப்புக்குப் பின் அவர் வாழ்ந்த அதே பிரேசிலில்தான் நல்லவர்கள் இருந்தார்களா? ஃபிரிட்ஸின் ஆவி என்ன (என்னை விட) சோம்பேறியா? (ஏன், என்கிட்ட "ஃபிரிட்ஸ் என்கிட்ட உதவி கேட்டா நல்லாயிருக்கும்"-னு சொன்ன என் நண்பர்கள் நல்லவங்க இல்லையா...? நீங்க கவலைப்படாதீங்க நண்பர்களே, எப்படியும் ரூபன்ஸுக்கும் மத்த மூணு பேரோட நிலைமை வர வாய்ப்பிருக்கு... அப்டி வந்தா, உங்களில் யார் அடுத்த அரிகோ-னு, ஃபிரிட்ஸ முடிவு பண்ண சொல்லிருவோம்..! அநேகமா அவரோட 'அடுத்த குறி' உங்கள்-ல ஒருத்தரா இருந்தா, உங்கள மாதிரியே நானும் சந்தோஷப்படுவேன்... கண்டிப்பா அவர் என்னைய தேர்ந்தெடுக்க மாட்டாரு... ஏன்னா, நான் நல்லவன்-னு பொய் சொல்ற அளவுக்கு கேட்டவனும் இல்ல, கெட்டவன்-னு உண்மைய ஒத்துக்குற அளவுக்கு நல்லவனும் இல்ல-னு அவருக்கே தெரியும்... அப்டியே வந்தாலும், இப்டி எதாவது பேசி குழப்பிடுவேன்... ஸோ, டோன்ட் வொர்ரி...! உங்களுக்கு எந்த கார்-னு 'சம்பவத்துக்கு' அப்புறம் பதிவு போடுறேன்...!!!)
           இதில் இரண்டாவது கேள்விக்கான பதிலைமட்டும் என்னால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. அதன்படி, எப்படியோ அரிகோவை ஃபிரிட்ஸின் ஆவி தேர்ந்தெடுத்துவிட்டது. அதன்மூலம் அரிகோவின் சுற்றுவட்டாரமும் உலகளவில் பிரபலமடைந்துவிட்டது. திடீரென ரஷ்யாவிலோ, ஜப்பானிலோ நான்தான் இனி அடுத்த அரிகோ என்பதுபோல் யாரேனும் கத்தியைத் தூக்கினால் நம்புவது கடினமாக இருக்க வாய்ப்புகளதிகம். (இப்பவே நம்ப மாட்டேன்குறாங்க...! இந்தியாவுல யாரவது இப்டி கெளம்பியிருந்தா, ஒண்ணு அவர ஜெயில்ல வச்சிருப்பாங்க, இல்லேனா அவர சுத்தி உண்டியல் வச்சிருப்பாங்க..!) ஒருவேளை அவருக்கேற்றவர் அருகில் இருக்கும்போது உலகத்தை முழுவதும் சுற்றுவதற்கு சற்று யோசித்திருக்கலாம்.

           இங்கு அரிகோ கண்ட கனவைப் பற்றி விளக்கியாகவேண்டும். அவர் தான் விரைவில் மரணிக்கப்போவதாகவும், அதற்கு அறிகுறியாக கனவில் கருப்பு சிலுவையும் ஒரு சம்பவமும் வருவதாகக் கூறியிருந்தார். கனவில் வரும் அச்சம்பவம் பற்றி அரிகோ கூறியதாக, நமது கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது, "நண்பர் ஒருவர் எனது காரை (இரவல்) வாங்கிச் செல்கிறார். அக்கார் ஒரு பெரும் பள்ளத்தில் தலைகீழாய் உருண்டு விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகிறது. ஆனால், அக்காரை ஓட்டிச்சென்ற நண்பர் எவ்வித காயமுமின்றி தப்பிவிட்டார்." நாம் கனவு பற்றிய பதிவுகளைப் பார்த்தபோது, "கனவுகள் மறைமுகமாகவும் சில விஷயங்களை உணர்த்தும்" என்பது குறித்துப் பார்த்திருந்தோம். அதன்படி, அரிகோவின் கனவில் வந்த கார், அரிகோவின் உடலாகவும், அதை ஓட்டிச்சென்ற நண்பர், டாக்டர்.ஃபிரிட்ஸாகவும் இருக்க வாய்ப்புள்ளது (கனவின் இலக்கணப்படி).

           இதுபோன்ற ஆவிகள், இத்யாதிகள் மூலம்தான் இத்தகைய சக்தி பெற்று சராசரி மனிதர்கள் அற்புதம் நிகழ்த்த முடியுமா? வேறு ஏதேனும் வழிகளுண்டா? இவரைப்போல் வேறு அமானுஷ்ய மனிதர்கள் இருக்கிறார்களா? என்று பார்த்தால், பட்டியல் நீள்கிறது. அவர்களுள், இத்தகைய வரலாற்றில் தவிர்க்க முடியாத, என்னை ஈர்த்தவர்களுள் ஒருவரான ஒரு அமானுஷ்ய நபரைப்பற்றி அடுத்த பதிவில் காண்போம். அரிகோவாவது நோயாளிகளை மருத்துவ முறைகளால் குணப்படுத்தினார் (அறுவைசிகிச்சை, மருந்து எழுதித்தருதல் போன்று). ஆனால் நாம் அடுத்து காண இருக்கும் நபர், நோயாளிகளை தொடாமலேயே குணப்படுத்தியவர். யார் அவர்? ["மார்வெல்" (Marvel) வரிசை ஹாலிவுட் (Hollywood) படங்களில், அடுத்த பாகத்தின் துவக்கத்தை முந்தைய பாகத்தின் இறுதியில் காட்டி விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிற வைப்பார்கள். அதுபோல், இந்த பதிவின் முதல் அடுத்த பதிவின் மையக்கருவின் மங்கலான புகைப்படம் பதிவின் இறுதியில் இணைத்தே பதிவிடலாம் என விரும்புகிறேன். அதன் துவக்கமாக, அடுத்த பதிவில் காண இருக்கும் நபரின் மங்கலான புகைப்படம், இதோ.இதைத் தொடரவா, அல்லது முன்னர் செய்ததுபோல் அடுத்த பதிவை ரகசியமாக வைக்கவா, என்பது குறித்து வாசகர்கள் கீழேயுள்ள கருத்துப் பகுதியில் குறிப்பிடவும்.] அவரைக் காண காத்திருங்கள்.



அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.


{ஒரு கொசுறுத் தகவல். ஃபிரிட்ஸ் சிறையிலிருந்து தப்பி புகலிடம் சேர்ந்த எஸ்டோனியா, ஐரோப்பாவிலுள்ள ஒரு சிறு நாடு. இங்கு வாழும் மக்கள் பேசும் மொழி, "எஸ்டோனியன்" (Estonian). சமூக வலைத்தளமான ட்விட்டரின் (Twitter) புரிதல்படி, தமிழின் (Tamil) இன்னொரு பெயர் "எஸ்டோனியன்"...! அதேபோல், எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது. அரிகோ, பார்ப்பதற்கு ஒரு அயல் நாட்டவரைப் போலவே தோன்றவில்லை; ஒரு இந்தியரின் முக சாயலில்தான் தோற்றமளிக்கிறார்...!}


(இப்பதிவிற்காக, தனது மடிக்கணினியை கொடுத்து உதவிய எனது நண்பன் திரு.பாலாஜி -க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.) - அயலான்.


ரூபன்ஸ் ஃபாரியாஸ் குறித்த காணொளிக்கு, காண்க:


துணை நின்ற நூல்கள்:
  1. அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள் - குன்றில் குமார்.
  2. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - முகில்.

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

3 comments:

  1. என்னவோ ஆவி,பேய்,கடவுள் இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை...
    அப்புறமு இழந்த fileகளை computer வித்துவான்களிடம் கொடுத்தால் மீட்டெடுத்து தருவார்கள் என நினைக்கிறேன்..!
    எனக்கும் fileகள் அழிவது பின் கவலைப்படுவது ஆகியவற்றில் நல்ல அனுபவம் உண்டு..!

    ReplyDelete
    Replies
    1. //என்னவோ ஆவி,பேய்,கடவுள் இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை//

      எனக்குமே தாங்கள் மேற்கூறிய அனைத்திலும் நம்பிக்கை இல்லை... இருப்பினும், எனது தேடுதலுக்கான விடையை அடைய இவைகளை கடந்து செல்லவேண்டியுள்ளது...!

      //இழந்த fileகளை computer வித்துவான்களிடம் கொடுத்தால் மீட்டெடுத்து தருவார்கள்//

      நிச்சயமாக அவர்கள்தான் எனது 'அடுத்த குறி'...!

      //எனக்கும் fileகள் அழிவது பின் கவலைப்படுவது ஆகியவற்றில் நல்ல அனுபவம் உண்டு//

      'இனிமேலாவது backup எடுத்து வச்சுக்கோ' என என் நண்பர்கள் எனக்குக் கூறியதை உங்களுக்கும் நினைவுகூர்கிறேன்... ! (and, Join the Club...!!!)

      தங்களின் கருத்துப் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே...! :)

      Delete
  2. அடுத்த முறை போரடிக்காதவாறு தர முயற்சிக்கிறேன் நண்பரே...!

    ReplyDelete