Tuesday 25 November 2014

19.) கனவுணர்த்திகள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               கடந்த பதிவில் கனவில் தோன்றும் சில புதிரான விஷயங்களையும், அது சார்ந்த மனிதர்களையும் பற்றி விவாதித்தோம். அவ்வாறான கனவுகள், எதேச்சையாக நமது மனதைத் தீண்டுவது போலவும், அதிலிருந்து நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது போலவும் அமைந்திருந்தது. இன்றைய பதிவில், அத்தகைய கனவுகளை, அதாவது நமக்கு எது நாளை தேவைப்படுமோ, அதை இன்றே கனவாகக் காண்பது என்பது சாத்தியமா? அவ்வாறு நிகழ்ந்திருக்கின்றனவா? போன்றவற்றைக் காண்போம்.

                 ஒரு இடத்திற்குச் செல்கிறோம். அந்த இடத்தை எப்போதோ இதற்கு முன் பார்த்த ஒரு உணர்வு. அங்கு இதற்கு முன் ஏற்கனவே வந்து சென்றது போல, அல்லது வசித்தது போல ஒரு உணர்வு. நிச்சயம் இது நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதை ஆங்கிலத்தில் "தேஜா-வூ" (Deja Vu) என்றழைக்கின்றனர். (அதேபோல், நாம் இதற்கு முன் சென்ற ஒரு இடத்திற்கு செல்கிறோம். ஏற்கனவே சென்ற இடமாக இருந்தாலும், அவ்விடம் நமக்குப் புதியது போலத் தோன்றும். [அவ்விடத்தில் மாறுதல்கள் ஏதும் செய்யப்பட்டிருக்காவிட்டாலும்!]. முன் கண்டவற்றின் எதிர்மாறான இப்பண்பு "ஜமாய் வூ" (Jamais Vu) என்றழைக்கப்படுகிறது.{'நண்பன்' திரைப்படத்தில் கூட இது பற்றி விளக்கும் ஒரு காட்சி வரும்}) இவ்வுணர்வு இடத்திற்குத் தான் பொருந்தும் என்றில்லை; மனிதர்கள், வாசனைகள் என நினைவில் பதியத் தகுதியுள்ள அனைத்திற்கும் பொருந்தும்.

                 ஆனால் நான் கூறவரும் இவ்வுணர்வானது, மேற்கூறிய இவ்விரு உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டது. உதாரணமாக, நாளை நீங்கள் எங்கே செல்வீர்கள் என்பதை இன்றே  திட்டமிடுவீர்கள்; அத்திட்டமானது, உங்களுக்கு எங்கு செல்லப்போகிறோம் என்று தெரிந்திருக்கும் வகையில் செல்லுபடியாகும். ஒருவேளை, நீங்கள் எங்கு செல்லப்போகிறீர்கள் என்று தெரியாவிட்டால்? உங்கள் திட்டம், ஒரு முன்னெச்சரிக்கை அட்டவணையை முன்னெடுத்துச் செல்லுமேவொழிய, திட்டவட்டமான ஒரு திட்டமாக இருக்காது. (உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல்ல) அதிலும், நீங்கள் எங்கு செல்வீர்கள் என்பது உங்களுக்கே தெரியாத பட்சத்தில், நாளை நீங்கள் எங்கு செல்வீர்கள், என்ன செய்வீர்கள், என்ன நிகழும் போன்றவற்றை, உங்கள் திட்ட அட்டவணையையே காணாத ஒருவர் மிகச் சரியாகக் (தனது கனவில் கண்டதாகக்) கூறினால்(!), அதை என்னவென்பீர்கள்?! ('ஜோசியம்!!!' என்று சிரிப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்)

                 'உண்மையில் அப்படி ஒருவர் இருக்கிறாரா?' என்றால், 'ஆம்' என்பதே பதிலாக இருக்கும். அவர் ஆருடம் கூறும் ஜோசியக்காரர் அல்ல. தொலைக்காட்சிப் பழுதுநீக்குனராகப் (TV Repairman) பணியாற்றிய கிறிஸ்டோஃபர் ராபின்சன் (Christopher Robinson) இத்தகு விந்தையான சக்தி பெற்ற, உதாரண புருஷராகத் திகழ்கிறார்.


(கிறிஸ்டோஃபர் ராபின்சன்)

                  தற்போது லண்டனில் வசித்துவரும் ராபின்சன், ஸ்காட்லாந்து யார்ட் (Scotland Yard), எம்.ஐ.5 (M.I.5) போன்ற உளவுத்துறைகளின் நம்பிக்கைக்குரிய மாயக்கண்ணாடியாக செயல்பட்டுவருகிறார். அவர் கனவில் கண்டதை வைத்து அவ்வுளவு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில், அந்நிறுவனங்களும் பல வழக்குகளுக்கு சுமூகமான உடனடித் தீர்வுகள் கண்டுள்ளன. இவர், இரட்டை கோபுர இடிப்பு, டயானாவின் மரணம் போன்ற பலவற்றையும் முன்னரே கணித்துக் கூறியவர். (அதாவது, கனவில் கண்டு கூறியவர்) இருப்பினும், ஒரு சாதாரண மனிதரின் வார்த்தை எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை. [இதற்கு,

  • "இவனும் நம்மைப் போன்ற சாதாரண மனிதன் தானே, இவன் என்ன கடவுளா?(!) இவன் சொல்லி நாம் ஏன் கேட்க வேண்டும்? இவன் கனவு கண்டால் நடந்துவிடுமா?" என்பது போன்ற அகங்காரம்,
  • "கனவில் கண்டவையெல்லாம் பலிக்காது. எனக்கும் நிறைய கனவுகள் வரும், அவையெல்லாம் பலிக்கவா செய்கின்றன?" என்பது போன்ற அவநம்பிக்கை,
  • "கனவுதானே" என்பது போன்ற அலட்சியம்,

எனப் பல காரணங்களைக் கூறலாம்.] (ஆனால் இப்போது பிரபலமாகிவிட்டார்.)


(பத்திரிகையில் ராபின்சன் பற்றிய செய்தி)

                  (அறிவியலின் கூற்றுப்படி, கனவு என்பது "ரெம்" (REM - Rapid Eye Movement) எனப்படும் தூக்கத்தின் ஒரு படிநிலையில் ஏற்படும் ஒரு நிகழ்வு (REM Sleep). அத்தகைய நிலையில் நமது கண்களில் அசைவு தெரியும். அச்சமயத்தில் அவ்வாறு கனவு காணும் (அல்லது கண்விழிகள் மூடியவாறு அசையும்) மனிதரை எழுப்பிவிட்டால், (அதாவது தொடர்ச்சியாக, பலமுறை) அம்மனிதனுக்கு பைத்தியம் பிடிக்க வாய்ப்புகள் அதிகமாம். (வேணும்னா, உங்க வீட்டுல யாராவது தூங்கும்போது இதை ட்ரை பண்ணி பாத்துட்டு, எனக்கு ஒரு ரிபோர்ட் அனுப்புங்களேன்!!!) காரணம், எங்கோ படம் பார்த்துக்கொண்டிருக்கும் மனதை, காலில் கயிறு கட்டி வெடுக்கென இழுப்பதுபோன்ற செயல் அது. ('ப்ரெண்ட்ஸ்' பட வடிவேலு ஞாபகம் வந்தால், நான் பொறுப்பல்ல!) மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் கனவுகள் வரும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எலிகள் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போலவோ, அல்லது எங்கோ ஓடுவது போலவோ கனவு காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். (ஆமா. இந்த ரெண்டையும் விட்டா, அது வேற என்ன சாதனை பண்ணிடப் போகுது?!) [கூடுதல் தகவல் : ஒரு நாயை 3 நாட்களுக்குத் தொடர்ச்சியாக, தூங்கவிடாமல் செய்தால், அந்நாய் இறந்துவிடுமாம்!] (தூக்கம் மிக முக்கியம் அமைச்சரே!)


('ரெம்' நிலையில் மூளையின் செயல்பாடு)

                 'இத்தகைய முன்னுணர்வை உரைக்கும் கனவுகள், எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை; அவைகள் கிறுக்கல்களாகவோ, மங்கலான உருவமைப்புகளாகவோ, மறைமுக அடையாளங்களாகவோ கூட இருக்கலாம்', என்பது ராபின்சன் போன்றோரின் கருத்து.


(முன்னுணர்வை உணர்த்தும் கனவு போன்ற கற்பனை ஓவியம்)

                  ராபின்சனைப்பற்றி முன்பொருமுறை, Discovery Channel-ல் "Stan Lee's Super Humans" என்கிற நிகழ்ச்சியின் தொடரில் விளக்கப்பட்டது. (அந்நிகழ்ச்சியின் காணொலிக் காட்சி (Video), கீழே இணைக்கப்பட்டுள்ளது) அதில், மறுநாள் எங்கு செல்லப்போகிறோம் என்பதைத் தெரிவிக்காமலேயே, ஒரு தனியறையில் தங்கச் செய்கின்றனர். அவரது கனவின் மூலம் செல்லப்போகும் இடத்தை அறிய வேண்டும் என்பதே சோதனை. இவரும் நமது கடந்த பதிவில் கண்ட இராமனுஜனைப் போல, இரவில் அரைத்தூக்கத்தில் எழுந்து (உருண்டு), தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார் (கிறுக்கிக்கொண்டார்).


(Stan Lee's Super Humans நிகழ்ச்சியில், ராபின்சன், டேனியலுடன்)


(ராபின்சனின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்)

                    மறுநாள் அவர்கள், ராபின்சனை அவர்கள் முன்னரே திட்டமிட்டு, ராபின்சனுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அவர் கனவில் கண்டதாகக் குறிப்பேட்டில் குறிப்பிட்டிருக்கும் அடையாளங்களுடன் அவ்விடம் பலவாறாக ஒத்துப்போகிறது. இத்தகு திறன் "முன்னுணர்வு" (Premonition) எனப்படுகிறது.


(Christopher Robinson on Stan Lee's Super Humans Program)
  1. இவரை "நாஸ்ட்ராடாமஸ்" (Nostradamus) போன்ற தீர்க்கதரிசிகளின் (Prophet) வரிசையிலும் சேர்க்க இயலாது. காரணம் அவர் (நாஸ்ட்ரடாமஸ்), விழித்திருக்கும்போதே இத்தகு எதிர்கால நிகழ்வுகளை, தன்னை மறந்து குறிப்பிடுபவர். (இவருக்கோ கனவில் தான் வருகிறது)
  2. இவரது சக்தியை ஞானதிருஷ்டி (Precognition), புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வான வரும்முன் உணர்தல்(ESP - Extra-Sensory Perception) போன்ற எவ்வகையிலும் மேற்கூறிய காரணத்தால் சேர்க்க முடியவில்லை.

(இவைகளைப் பற்றி இனிவரும் பதிவுகளில் காணலாம்.)

                   எதற்க்கெடுத்தாலும் மேலை நாடுகளை, பகுத்தறிவின் சிகரம்போல் மேற்கோள் காட்டும் பலருக்கும், இப்பதிவைக்கண்டவுடன் சந்தேகம் வலுக்கலாம்; நம்பிக்கையின்மை அதிகரிக்கலாம். (சந்தேகம் - நம்பிக்கையின்மை, இவை இரண்டின் பொருளும் ஒன்றாகத் தோன்றினாலும், இவற்றுள்  வித்தியாசங்கள் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்) உண்மையில், நமது நாட்டை விட இத்தகு அமானுஷ்ய விஷயங்களிலும் (Paranormal) , அற்புத சக்திகளிலும் (Miracles, Wonders, Super Powers, etc.) மேலை நாடுகளே அதிக ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டுள்ளன.

                     அதுவும் இன்று நேற்று அல்ல. சோவியத் ரஷ்யாவின் (USSR - United States of Soviet Russia) அதிபராக இருந்த ஜோசஃப் ஸ்டாலினும் (Joseph Stalin), ஜெர்மெனியின் (Germany) சர்வாதிகாரியாக இருந்த அடால்ஃப் ஹிட்லரும்(Adolf Hitler) இது போன்ற அசாதாரண திறமைகளிலும், சக்திகளிலும் நம்பிக்கை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராயவும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். (அவற்றைப் பற்றியும் இனி வரும் பதிவுகளில் காணலாம்)

                      சரி இவ்வாறான அற்புதங்கள், ராபின்சனைத் தவிர வேறு எவருக்கேனும் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா எனத் தேடும்போது, வரலாறு நம்மை 1970-களுக்கு அழைத்துச் செல்கிறது. "கில்ப் ராக்கன்" என்றழைக்கப்பட்ட ப்ரிட்டிஷ்காரருக்கு, இத்தகைய கனவுகள் அதிர்ஷ்டத்தை வாரிவழங்கிய வரலாற்று நிகழ்வுகள் தான் அவை. அவருக்குக் குதிரைப் பந்தயம் என்றால் உயிர். ஒரு பந்தயத்தை விடமாட்டார். தூக்கத்தில்கூட குதிரைகள்தான் அவர் கனவில் வந்தன. (ஹும்...நம்ம கனவுல ஒரு கழுதைகூட வரமாட்டேங்குது..! ஒருவேளை அப்டி வந்தா, நமக்கு அதிர்ஷ்டம் வந்துடுமோ-னு வரமாட்டேங்குதா? ஆமா, அப்டி பாத்தா, கழுதைய தினமும் நேர்ல பாக்குற சலவைத் தொழிலாளி மட்டும்தான், இந்த உலகத்துலேயே ரொம்ப அதிர்ஷ்டக்காரனா இருக்கணும்..இங்க என்ன அப்டியா இருக்கு...?! சரி, நாம நம்ம கதைக்கு வருவோம்.)

                      அதிகாலையில் ஒருநாள், அரைத்தூக்கத்திலிருந்த கில்ப் ராக்கனின் மனக்கண்ணில் "ட்யூபர் மோர்" என்ற பெயருடைய குதிரை முதலில் வருவதாகத் தோன்றியது. உண்மையில் அப்படி ஒரு குதிரை ஓடி, நாம் அதில் பணம் கட்டி, அது ஒருவேளை ஜெயித்தும் விட்டால்? ஆவலுடன் மறுநாள், நாளிதழ்களை வாங்கி, எல்லா பந்தயக் குறிப்புகளையும் பார்த்தார். ம்ஹூம். அப்படி ஒரு பெயருடைய ஒரு குதிரையும் ஓடவில்லை. வெறுத்துப்போய் பேப்பரைத் தூக்கியெறிய நினைத்தபோது, ஒரு குறிப்பிட்ட பந்தயத்தில் "ட்யூபர் ரோஸ்" என்கிற குதிரை ஓடுவதாக வெளியாகியிருந்த செய்தி, ராக்கனின் கண்களில் பட்டது. இரண்டிலும் பொதுவான பெயராக இருந்த "ட்யூபர்"-ன் மேல் பாரத்தைப் போட்டு, அக்குதிரை மீது பணம் கட்டுவோம் என, அதுகுறித்து விசாரித்தார்.

                      அந்தக்குதிரைக்கு சான்சே இல்லை (ODDS 100-க்கு 6) எனப்பலரும் பலவாறாக பயமுறுத்த, ராக்கனுக்கும் உள்ளூர உதறல்தான். இருப்பினும், அவர் அவரது கனவு கைவிடாது என ஏனோ அழுத்தமாக நம்பினார். ஆச்சர்யம்! அந்த பந்தயத்தில், ட்யூபர் ரோஸ் முதலாவதாக (முதன் முறையாக) வந்து, ராக்கனுக்கு சில லட்சங்களை அள்ளித்தந்தது. அவர் உட்பட பலரும், அதை ஏதோ அதிர்ஷ்டம் என்ற அளவிலேயே நம்பினர். ஆனால், அவரை குதிரைக்கனவுகள் கண்ணயரும்போதெல்லாம் துரத்தின. அவற்றில் வரும் குதிரைகள் மிகச்சரியாக ஜெயிக்கவும் செய்தன. விளைவு, ராக்கன் விரைவில் கோடீஸ்வரன் ஆனார். பலமுறை அவரது நண்பர்களுக்கும் ஆலோசனை அளித்து, அவர்களும் லட்சாதிபதி ஆக உதவினார். (ம்க்கும்...அவரு நல்ல மனுஷன்..கூட இருந்தவங்களுக்கு சொல்லி உதவிருக்காரு... நம்மாளுங்க அடிசுக் கேட்டாலும் சொல்லமாட்டாங்க..!!!)

                      ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு இக்கனவுகள் அவருக்கு பலித்தன. இறுதியாக 1972-ல் "நியூடர்ன்" (New Turn) என்கிற குதிரை அவர் மனதில் தோன்ற, அதில் பணம் கட்டித் தோற்றார் ராக்கன். அந்த குதிரையின் பெயர் மட்டுமல்ல, அன்றிலிருந்து ராக்கனின் வாழ்கையும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்தது. அதன் பிறகு பணம் கட்டிய எந்தவொரு போட்டியிலும் ராக்கன் வெற்றிபெறவில்லை. (இந்த ராக்கன் ஜெயிக்ககூடாதுன்னு எவனோ செய்வினை வச்சுட்டான்...!!!) அந்த சக்தி(!) ஏனோ அவரை விட்டுப் போய்விட்டது.

                       இதுபோன்ற மனம் சார்ந்த சக்திகள் (Psychic) (பேருலாம் கொஞ்சம் "லூஸ் மோகன்" டயலாக் மாதிரியும் இருக்கும் [சைக்கிக்(!)]).  முதியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக, 1980-களில் "எர்னஸ்டோ ஸ்பினெல்லி" (Ernesto Spinelli) என்கிற மனோதத்துவ ஆராய்ச்சியாளர், வெவ்வேறு வயதுடைய 1200 நபர்களிடம் நடத்திய "டெலிபதி" (Telepathy)  தொடர்பான சோதனையின் அடிப்படையில் தெரிவித்தார். ஏனோ அத்தகு திறன்கள் (சக்திகள் போலத் தோன்றினாலும்) வளர வளர மழுங்கிப் போகின்றன. (இன்னும் பரிணாமத்துல எதையெல்லாம் இழந்தோமோ...?!)



(எர்னஸ்டோ ஸ்பினெல்லி)

                      இருப்பினும், குழந்தைகள்தானே என எண்ணி நம்மில் பலர் அவை கூறும் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதில்லை. அத்தகைய அலட்சியத்தின் விளைவுக்கு உதாரணம், இதோ.

                      1966-ஆம் ஆண்டு, அக்டோபர் 21-ம் தேதி பிரிட்டனிலுள்ள அபெர்ஃபேன் (Aberfan) கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, தனது கனவில் கருப்பு மேகங்கள் தனது பள்ளியை மூடுவது போலவும், ஆனால் அதற்கு சிறிதும் அஞ்சாமல் தான், தனது சக தோழிகள் இருவரின் கைகளைக் கோர்த்தவாறு நின்றிருப்பதாகவும் தனது தாயிடம் தெரிவித்தாள். (இதே நம்ம வீடா இருந்தா, 'இதுக்குத்தான் தூங்கும்போது கண்ட கருமத்தயெல்லாம் பாக்காதனு சொல்றேன்'-னு அடி கொன்னுருப்பாங்க...!) அதற்கு அவளது தாய், 'எதையும் எண்ணி குழம்பாதே' என அறிவுறுத்திவிட்டு, வழக்கம்போல பள்ளிக்கு அனுப்பினாள். மறுநாள் காலையில், அச்சிறுமியின் பள்ளிக்கருகிலிருந்த நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், அப்பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளனைவரும் உயிரிழந்தனர்; அச்சிறுமி உட்பட! (ஒருவேளை நிலக்கரி அப்பள்ளியை மூடும் காட்சி, சிறுமியின் கனவில் கருப்பு மேகம் சூழ்வது போலத் தெரிந்திருக்கலாம்!) இதுபற்றி தகவல் சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர், அவ்விபத்தில் இறந்த குழந்தைகளின் கல்லறையைப் பார்வையிட சென்றபோது, ஒரு இடத்தைப்பார்த்து உறைந்து போனார். அங்கு,சிறுமி குறிப்பிட்டிருந்த சக தோழிகளின் சமாதி, அச்சிறுமியின் சமாதியின் இருபுறமும் (தற்செயலாக) அமைந்திருந்தது. (கைகளைக் கோர்த்ததுபோல!) இங்கு அச்சிறுமியின் முன்னுணர்வு புறந்தள்ளப்படக் காரணம், அவள் சிறுமிதானே என்கிற அலட்சியம் மட்டுமே.


(அபெர்ஃபேன் பேரழிவு பற்றி சிறுமியின் கனவு : ஒரு கற்பனைப் படம்)
[உண்மையில் இது நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் கருப்பு வெள்ளை படம்]


(அபெர்ஃபேன் பேரழிவு)

                      இத்தகைய கனவுகள் அல்லது சக்திகள் உண்மையா? கனவுகள் இவ்வாறு தானாக வரும் முன் உரைக்கும் ஆற்றல் கொண்டவையா? அல்லது வெளிப்புற, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் (கடவுள், ஆவிகள், வேற்றுகிரகவாசிகள்) செயலா? அல்லது நம்முள் இப்படி ஒரு சக்தி உறங்கிக் கிடக்கிறதா? ஆராய்வோம் அடுத்த வாரம்.

அதுவரை நன்றிகளுடன்,
                       - அயலான்.



துணை நின்ற நூல்:

  1. மனிதனும் மர்மங்களும் - மதன்.

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/D%C3%A9j%C3%A0_vu
http://www.spiritoday.com/premonition-man-christopher-robinson-interview-on-precognitive-dreams/
http://www.discoveryuk.com/web/stan-lees-superhumans/videos/?video=stan-lees-superhuman-future-man
http://en.wikipedia.org/wiki/Rapid_eye_movement_sleep
http://en.wikipedia.org/wiki/Premonition_(disambiguation)
http://www.counselling.org/training-development/tutors-trainers/professor-ernesto-spinelli/
http://en.wikipedia.org/wiki/Aberfan_disaster


Photo Courtesy: Google.


Video Courtesy : YouTube.

No comments:

Post a Comment