Saturday 28 March 2015

27.) ரஷ்யாவின் ராட்சஸ ரட்சகன் - ரஸ்புடின்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருந்தவாறு எந்தவொரு நோயாளியையும் தொடாமலேயே குணமாக்கிய ஒரு மர்மமான மனிதரைப் பற்றி இப்பதிவில் காணலாம். அவர், ரஷ்யாவின் ஒரு மன்னர் குடும்பத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சாதாரண நிலையிலிருந்து அவ்விடத்தை எட்டிப்பிடித்த ஒரு அசாதாரண மனிதர். அவர்தான் ரஸ்புடின்..!


(ரஸ்புடின்)

           ஏறத்தாழ ஆறரை அடி உயரம், மயக்கும் கண்கள், முறைக்கும் கூரிய பார்வை, அடர்ந்த புருவங்கள், கட்டுமஸ்தான உடல்வாகு, தோள்வரை தொங்கும் தலைமுடி, கரும்புதரில் செம்புக்கம்பிகளை மறைத்து வைத்தாற்போல் வளைவுகளுடைய தாடி, அதனுள் ஒளிந்திருக்கும் உதடுகள், அதிலிருந்து வெளிப்படும் மிரட்டலான  'கணீர்' குரல், அதனுள் பொதிந்திருக்கும்  வசீகரிக்கும் பேச்சுத்திறன். இவை அனைத்திற்கும் மேலாக மிக நீளமான ஆணுறுப்பு. இவைதான் ரஸ்புடினின் அடையாளங்கள். இனி அவரது வாழ்க்கை குறித்து காண்போம்.

           ரஷ்யாவிலுள்ள (Russia) சைபீரியாவின் (Siberia) துரா (Tura) நதிக்கரையோரமுள்ள போக்ரோவ்ஸ்கொயே (Pokrovskoye) எனும் பின்தங்கிய கிராமத்தில், யெஃபிம் யாகொவ்லேவிச் ரஸ்புடின் (Yefim Yakovlevich Rasputin) என்பவருக்கு (ரஸ்புடினின் தாயார் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை!), 3 குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தார், க்ரிகொரி யெஃபிமோவிச் ரஸ்புடின் (Grigori Yefimovich Rasputin) என்கிற முழுப்பெயர் கொண்ட இந்த மர்ம யோகி. ('ரஸ்புடின்' என்பது இவர்களது குடும்பப்பெயர்.) இவர் 1863-க்கும் 1873-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஒரு சில ஆவணங்கள், இவர் 10.1.1869-ல் பிறந்ததாகவும், சில 21.1.1869-ல் பிறந்ததாகவும், சில 22.1.1869-ல் பிறந்ததாகவும் சான்று பகர்கின்றன. இருப்பினும், இவர் பிறந்த உண்மையான தேதி குறித்த தெளிவான ஆவணங்கள் இதுவரையில் மர்மமாகவே இருக்கின்றன. (மர்மம் அவர் பிறந்தது முதலே தொடர்கிறது!) இவரது சிறுவயது வாழ்க்கை எதுவும் பெரிதாகப் பதிவுசெய்யப்படவில்லை. இவரின் மூத்த சகோதரன் டிமிட்ரி; சகோதரி மரியா. ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்த இக்குழந்தைகளுக்கு, பள்ளிப்படிப்பு எட்டாக் கனியானது; வயல் வேலை மட்டுமே அன்றாட பிழைப்பானது. மரியாவிற்கு வலிப்பு நோய் இருந்தது. அவள் அவ்வாறு அவதிப்படும் சமயமெல்லாம் ரஸ்புடின் அருகிலிருந்து கவனித்துக் கொள்வான். ஒரு சமயம் மரியா ஆற்றில் குளிக்க சென்றாள். குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென வலிப்பு வர, நீரில் மூழ்கி இறந்து போனாள். இச்சம்பவம் ரஸ்புடினை வெகுவாக பாதித்தது. சில காலம் கழிந்திருக்கும். ரஸ்புடினும், அவனது அண்ணன் டிமிட்ரியும் ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர். திடீரென ஆற்றில் வெள்ளம் வர, யாரோ ஒருவர் இருவரையும் வெள்ளத்திலிருந்து மீட்டு கரை சேர்த்தார். இருப்பினும் சில நாட்களில் டிமிட்ரி குளிரினால் ஏற்பட்ட நிமோனியாவினால் இறந்து போனான். இச்சம்பவம், ஏற்கனவே சோகம் சூழ்ந்திருந்த ரஸ்புடினை மேலும் தளர்வுறச் செய்தது. கலகலவென்று துள்ளித்திரிந்த சிறுவன் யாரிடமும் சரிவரப் பேசாமல் ஓரிடத்தில் முடங்கிப்போனான். அன்றிலிருந்து சிறுவன் ரஸ்புடினின் செயல்களில் மாற்றங்கள் தென்பட்டன. சிறுவயதுமுதலே ரஸ்புடினிடம் சில அசாதாரணமான அதிசய சக்திகள் இருந்ததாக நம்பப்படுகிறது. ரஸ்புடினின் தந்தை ஓரளவு படிப்பறிவு பெற்றிருந்த காரணத்தால், இரவு நேரங்களில் தனது மனைவி குழந்தைகளுடன் பைபிளைப் படித்து விவரிப்பதில் செலவிட்டார். இவை ஏற்கனவே சக்திகள் இருப்பதாக நம்பப்படும் ரஸ்புடினை மேலும் இறைபக்தி மிக்கவனாக மாற்றியது. இத்தகு மனோபாவமுடையவன், மேற்கண்ட அசம்பாவித சம்பவங்களுக்குப் பின் ஒருவரிடமும் சரிவரப் பேசாமல், எதையோ யோசிப்பதைப் போல வீட்டுக் கூரையையோ, கண்முன் தென்படும் ஏதேனும் ஒன்றையோ வெறித்துப் பார்த்தவாறே இருந்தான். அவ்வாறான சமயத்தில்தான் ஒருநாள், இவனது சக்திகள் குறித்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் சம்பவம் ஒன்று நடந்தேறியது.

           ரஸ்புடின் வாழ்ந்த ஊரில், அக்காலத்தில் திருட்டு அதிகம் நிகழும். ஒருமுறை ரஸ்புடினின் தந்தை வளர்த்துக்கொண்டிருந்த குதிரை காணாமல் போனது. (அழகர்சாமியோட குதிரை இல்ல மக்களே...!) 'இனி பிழைப்புக்கு என்ன செய்யப் போகிறோமோ?!' என கவலையுற்றவராய், குதிரையை கண்டுபிடிக்கும் நோக்கில் தனது நண்பர்களுடன் வீட்டின் வெளிப்பகுதியில் வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் கட்டிலில் கால்மேல் கால் போட்டவாறு படுத்துக்கொண்டு, வழக்கம்போல் வீட்டுக்கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ரஸ்புடின் திடீரென எழுந்து வெளியில் சென்றான். நேராக அவன் தந்தையிடம் சென்று, "குதிரையைத் திருடியவன் யாரென்று ஏன் வீணாகக் குழம்பிக்கொண்டிருக்கிறீர்கள்? இதோ உங்கள் அருகிலேயே இருக்கும் இவன்தான் குதிரையைத் திருடியது. இப்போது இங்குவந்து உங்களுடன் குதிரையைத் தேடுவதுபோல், நல்லவனாக நாடகமாடுகிறான்" என்றான். திடீரென படுக்கையிலிருந்து எழுந்துவந்து தனது நண்பனை இவ்வாறு சொல்லியதை சற்றும் எதிர்பாராத ரஸ்புடினின் தந்தை, ரஸ்புடினைக் கண்டித்து வீட்டினுள் அனுப்பிவிட்டு, அவன் சுட்டிக்காட்டிய நண்பரிடம், "அவன் சின்னப் பையன். ஏதோ தெரியாமப் பேசிட்டான்!" என்பதுபோல கூறி, மன்னிப்புக் கேட்டு அனுப்பிவைத்தார். அந்த நபருக்கும் திடீரென ரஸ்புடின் இவ்வாறு கூறியதும் வியர்த்துக் கொட்டியது. அனைவரும் சென்றதும் வீட்டினுள் சென்று மகனிடம் விசாரித்தார். "அவர்தான் திருடினார் என்று நீ பார்த்தாயா? எதை வைத்து அவ்வாறு நீ கூறினாய்?" என அதட்ட, "நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு அவர்தான் என்று தெரியும்" என்றான் அழுத்தமாக. முதலில் மகனின் பேச்சில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பின்னர் 'ஒருவேளை இவன் கூறுவது உண்மையாக இருந்தால்?' என்கிற எண்ணம் துளிர் விட, அந்த குறிப்பிட்ட நபரை ரகசியமாகக் கண்காணித்தார்; ஆச்சர்யம்! உண்மையில் குதிரையைத் திருடியவன் ரஸ்புடின் சுட்டிக்காட்டிய அதே ஆள்தான். மீண்டும் மகனிடம் கேட்டார், எவ்வாறு இதைக் கூறினாயென. "எனக்குத் தெரியவில்லை. என் மனதினுள் தோன்றியது, கூறினேன்" என்று விளக்கினான் ரஸ்புடின். இதன்பின் தன்னை சுற்றியுள்ளவர்களின் எதிர்காலம் குறித்து குறி சொல்லத் தொடங்கினான். இதன் முன்னரும் தனது உள்ளுணர்வை ரஸ்புடின் வெளிப்படுத்தியிருந்தாலும், இச்சம்பவத்தின்பின்தான் ஊராரால் திரும்பிப் பார்க்கப்பட்டா(ன்/ர்), ரஸ்புடின்.

           அன்றிலிருந்து சற்று மரியாதைகளைப் பெற்ற ரஸ்புடினின் வாழ்வு மீண்டும் தடம் மாறியது. பதின்வயது ரஸ்புடின் ஊருக்கு அடங்காத இளைஞராக வளர்ந்தார். பொய் சொல்வது, ஏமாற்றுவது, திருடுவது எல்லாம் கை வந்த கலையாகியிருந்தது. தீய நண்பர்களுடன் மட்டுமே சேர்க்கை. எல்லாவற்றுக்கும் மேலாக குடிப்பழக்கம், பெண்கள் சகவாசம் வேறு. இத்தனை தீய பழக்கவழக்கங்களுக்கும் முத்தாய்ப்பாக, அவரது 18-வது வயதில், ஒரு குதிரையைத் திருடிய வழக்கில் சிக்கி,  அதற்கு தண்டனையாக அவரது ஊரிலிருந்து 400 கி.மீ. தொலைவிலுள்ள 'வெர்கொடுர்யே' (Verkhoturye) எனும் ஊரிலுள்ள குருமார்களுக்கு 3 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து பணிவிடைகள் செய்யவேண்டுமென தீர்ப்பளித்து அனுப்பிவைக்கப்பட்டார். ஒருநாள் இரவில் திடீரென விழித்த ரஸ்புடின், மகிழ்ச்சி பொங்க சத்தமாக சிரித்தார். என்னவென விசாரித்த மதகுருமார்களிடம், "சொன்னால் நம்புவீர்களா எனத் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கு முன்புதான் கன்னி மேரி எனது கண்களுக்கு பேரொளி வடிவில் காட்சியளித்தார்" என உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இதன்பின் ரஸ்புடினின் இறைபக்தி மேலும் அதிகரித்தது. "இனி நான் திருமணம் செய்யப்போவதில்லை, இறை சேவையில் ஈடுபடப் போகிறேன்" என தெரிவித்தார். (இருப்பினும், பின்னாளில் பிராஸ்கோவியா என்கிற பெண்ணை மணமுடித்து 3 குழந்தைகளைப் பெற்றதும், அக்குழந்தைகளில் இருவருக்கு தனது உடன்பிறந்தவர்களின் நினைவாக டிமிட்ரி, மரியா என பெயரிட்டதும், வேறு சில பெண்களுக்கும் காதலனாக இருந்ததும், மற்றொரு பெண்ணின் குழந்தைக்கு தகப்பனானதும் தனிக்கதை.) (ரொம்ப நல்லாயிருக்கு ராஜா உன் வொர்க்கு...!)


(மதகுருக்களுடன் மதகுருவாக ரஸ்புடின்)


(குழந்தைகளுடன் ரஸ்புடின்)

           இல்லத்திலிருந்து வெளியே வந்த பின், ரஸ்புடின் 'க்ளிஸ்டி' (Khlysty) எனும் தடை செய்யப்பட்ட ஒரு ரஷ்ய கிறிஸ்தவப் பிரிவில் இணைந்தார். 'அதிகப் பாவங்கள் செய்வதன்மூலமும், அதற்கான மன்னிப்பைக் கோருவதன் மூலமும் கடவுளை அடையலாம். ஒழுங்கற்ற வாழ்க்கையே கடவுளை அடையும் பாதை' என்பது போன்ற கோக்குமாக்கான கொள்கைகளைக் கொண்ட அப்பிரிவு, தீய பழக்கங்களில் திளைத்திருந்த தனது கடந்த காலத்தின் பசுமையான நினைவுகளை ரஸ்புடினுக்கு நினைவூட்டியதே, அவர் இப்பிரிவில் இணையக் காரணம். ஏற்கனவே அவர்களின் கொள்கைகள் ரஸ்புடினுக்குக் கை வந்த கலையாதலால், விரைவிலேயே அப்பிரிவின் மதகுருவாக உயர்ந்தார் ரஸ்புடின். (என்ன ஒரு முன்னேற்றம்...!)


(ரஸ்புடின் - ஜெர்மோகென் - லியாடர் ஆகியோரின் கையொப்பங்கள்)

           பின் அப்பிரிவிலிருந்து வெளியேறி, ரஷ்யாவில் புகழ்பெற்றிருந்த மகாரி எனும் துறவியிடம் சீடராக சேர்ந்தார். அவர் ரஸ்புடினிடம், "இந்த யாத்திரையை ஒரு வகையில் கடவுளின் முன்னறிவிப்பாக எடுத்துக்கொள். உனக்குக் கிடைத்துள்ளது மிகப்பெரிய வாய்ப்பு, இதை நல்ல முறையில் கையாண்டு, மீண்டும் உனது ஊருக்குச் செல்லும்போது மனிதப்புனிதராகச் செல்" என ஆசீர்வதித்தார். அதன்பின்னர், காடு, மேடு, மலை என எங்கெங்கோ அலைந்து திரிந்து, இறுதியில் தனது சொந்த ஊருக்கே திரும்பினார், ஒரு மகானாக! மது, புகை, மாமிசம், அவ்வளவு ஏன் இனிப்பு சாப்பிடுவதைக்கூட நிறுத்தியிருந்தார். (அவருக்கு அப்போ சுகர்-லாம் இல்லப்பா...!) முகத்தில் ஓர் தீர்க்கம், பேச்சில் அமைதி, நடவடிக்கைகளில் நிதானம், மயக்கும் உடல்மொழி, பெரும்பாலானே நேரங்கள் பிரார்த்தனையில் இருப்பது என முழுவதுமாக மாறியிருந்தார், பலரின் கொள்கைகளிலும் ஊறிப்போன அந்த பைத்தியக்காரத் துறவி. (அவர பைத்தியம்னு நான் சொல்லலீங்கோ... ஆய்வாளர்கள் அப்டிதாங்கோ செல்லமா சொல்றாங்கோ...!) "இத்தனை காலம் நான் இந்த உலகில் இருந்தேன். இப்போது நான் இந்த உலகோடு இருக்கிறேன்" என அவர் உதிர்த்த பல தத்துவ முத்துக்கள், மக்களை மயிர்க்கூச்செரியச் செய்தன. திருடனாகவும், அயோக்கினாகவும் ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட ரஸ்புடின், தற்போது 'சக்திவாய்ந்த சாமியார்' (!) என்ற நிலைக்கு மக்களால் உயர்த்தப்பட்டார். அவர்களது அந்நம்பிக்கையையும் மெய்யாக்கும் நாள் விரைவிலேயே வந்தது.

           தன்னால் வருங்காலத்தில் நிகழ்வதைக் கூற முடியும், தீராத நோய்களைக் குணப்படுத்த முடியும், கடவுளுடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியும் என பல்வேறு நம்பமுடியாத அடையாளங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டார். (இதன்பின்னர்தான், மேற்குறிப்பிட்டவாறு திருமணம், குழந்தைகள், எல்லாம்!) பின், 1901-ல் 'இறைவனின் கட்டளைப்படி' (!) புனித யாத்திரை மேற்கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு உற்றார், உறவினர், குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் விடுத்து கிளம்பினார். கிரீஸ், ஜெருசலேம் என நீண்ட பயணம் 1903-ல் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்-கிற்கு அவரை இட்டுச்சென்றது. அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த முதல் ரஷ்யப்புரட்சியின் காரணமாக, எங்கும் கலவரம்; அமைதியின்மை. அச்சமயம் எங்கிருந்தோ வந்த 'அமைதியின் தூதுவர்' போல மக்களின் மனநலத்தையும், உடல்நலத்தையும் தனது அமைதியான பேச்சுக்கள் மூலமும், பிரார்த்தனைகள் மூலமும் தீர்த்துவைத்து, அவ்வூரில் புகழ்பெறத் துவங்கினார். அவரால் குணமடைந்த/பலனடைந்த மக்கள் சிலரின் கண்களுக்கு அவர் கடவுளாகவே தோன்றினார்.


(இயேசுவைப் போல் சித்தரிக்கப்பட்ட ரஸ்புடின்)

         பின்பொருநாள் இவர் செய்த ஒரு அற்புதம் இவரை மேலும் புகழேணியில் ஏற்றியது. ரஷ்ய பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த பீட்டர் நிக்கொலவிச் - மிளிட்சா தம்பதியினர் வளர்த்து வந்த நாய் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்க, தனது வாரிசின் உயிருக்கு நேர்ந்த ஆபத்தைப் போல பாவித்து, தனது செல்வாக்கையெல்லாம் பயன்படுத்தி, எத்தனையோ மருத்துவர்களை வரவழைத்து வைத்தியம் பார்த்தும், சுருண்டு கிடந்த நாய் புரண்டுகூட படுக்கவில்லை. பின்னர், ரஸ்புடினை சந்தித்து, தங்கள் நாயைக் குணப்படுத்துமாறு வேண்டினார் பீட்டர். முன்னரே ரஸ்புடினைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் நட்பு பாராட்டியிருந்தார், பீட்டர். இதனால் ரஸ்புடினும் அழைப்பை ஏற்றார்.

         நேரே அவர்களின் பங்களாவிற்குச் சென்ற ரஸ்புடின், அங்கே எழுந்து நிற்கக் கூட திராணியற்றுப் படுத்திருந்த நாயின் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். இதற்கு முன் அதற்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள், இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த நாய் உயிர் வாழும் என தேதி குறித்துவிட்டு சென்றிருந்தனர். படுத்திருந்த நாய் மெல்ல தலையைத் தூக்கி ரஸ்புடினைப் பார்த்தது. (ஆமா, இதுவரைக்கும் வந்தவன் எல்லாம் ஊசியக் குத்திட்டு, மருந்தக் குடுத்துட்டு, இன்னும் 2 மாசத்துல செத்துருவேன்-னு சொல்லிட்டு போயிட்டானுங்க. இப்போ இவரு வந்து உக்காந்து போஸ் குடுக்குறாரு..!) பின் மீண்டும் தலையை சாய்த்துப் படுத்துக்கொண்டது. சரியாக அரைமணிநேரம், இடைவிடாமல் பிரார்த்தித்தார் ரஸ்புடின்; அருகில் பிரபு பீட்டரும், அவரது மனைவியும் பவ்யமாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அசையாமல் படுத்திருந்த நாய் தற்போது கண்களை நன்றாகத் திறந்து சுற்றியிருக்கும் அனைவரையும் பார்த்தது. (நான் இப்போ எங்க இருக்கேன்...?!) வாலை ஆட்டியவாறு, சற்று சிரமப்பட்டேனும் எழுந்து நிற்க முயன்றது. இதைக்கண்டு பிரபுவும், அவரது மனைவியும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார்கள். மறுநாள் எழுந்து நின்றது; பால், பிஸ்கட் உண்டது. 2 மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் என மருத்துவர்களால் கைவிடப்பட்ட நாய், பின்னர் ஓராண்டு காலம் உயிர் வாழ்ந்தது. ஊர் முழுக்க இதைப் பற்றி ஆச்சர்யத்தோடு பேசித் தீர்த்தனர், நாயைக் கைவிட்ட மருத்துவர்கள் உட்பட! இவ்வாறு பிரார்த்தனைகள் மூலம் ஒரு நோயாளியைத் தொடாமல் ரஸ்புடின் குணப்படுத்தும் விஷயம் ரஷ்யாவை அப்போது ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னரின் காதுகளையும் அடைந்தது.

       அச்சமயம் ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் வம்சத்து அரசரான இரண்டாம் நிக்கோலஸிற்கும் (Tsar Nicholas - II), அரசி அலெக்சாண்ட்ரா செரீனாவிற்கும் (Alexandra Tsarina) முதலில் பிறந்த நான்கும் பெண் குழந்தைகள். ஆள்வதற்கு ஆண்வாரிசு இல்லாமல் போய்விட்டதே என வருந்திய ரஷ்ய நாட்டுக்கும், அதை ஆண்டுகொண்டிருந்த ராஜாவுக்கும், ராணிக்கும் கவலையைத் தீர்ப்பதுபோலப் பிறந்தது ஐந்தாவதாக ஓர் ஆண்குழந்தை. அக்குழந்தைக்கு அலெக்ஸி எனப் பெயரிட்டு பேணி வளர்த்தனர். மகிழ்ச்சியினுள்ளும் மறைந்திருக்கும் சோகமாய் அக்குழந்தையின் உடன் பிறந்தது, 'ஹீமோஃபீலியா' (Hemophilia) என்றழைக்கப்படும் ரத்த உறைதிறன் குறைபாடு. இந்நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்; நிற்காது! முடிவில், ரத்தம் முழுவதும் வெளியேறி மரணத்தில் வீழ்வர், இந்நோயாளிகள். அலெக்ஸியின் கொள்ளுப்பாட்டியான, பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிற்கும் (Victoria) இந்நோய் இருந்தது. அவரின் மரபில் பிறந்ததால், அலெக்ஸியும் இந்நோயால் தாக்கப்பட்டிருந்தான். (இந்நோய் அலெக்ஸி மட்டுமல்லாது, ஐரோப்பிய அரச மரபினர் பலரையும் தாக்கி சோகத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.) இவ்விஷயம் வெளியில் தெரியாமல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வந்தனர். அலெக்ஸி பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டார். இருப்பினும் ஒருநாள் உடல்நிலை மோசமானது. அரசரும் அரசியும் மனமுடைந்து போயினர். (அக்காலத்திய) எம்மருத்துவமும் கைகொடுக்கவில்லை. அச்சமயத்தில், அரசியின் தோழியான அன்னா (Anna), "அரசியாரே, எனக்குத் தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார். தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார். அவரை அழைத்துவந்தால் நிச்சயம் நமது இளவரசரை குணமாக்கலாம் என நம்புகிறேன்" என்று ஆறுதலும், ஆலோசனையும் சொல்ல, ரஸ்புடினுக்கு அரசியிடமிருந்து ரகசிய அழைப்பு விடுக்கப்பட்டது. (வைத்தியம் பார்க்கத்தான்...!)


(அரசர் நிக்கோலஸும், அரசி விக்டோரியாவும் தங்கள் 4 மகள்களுடனும், அலெக்ஸியுடனும்)

       ஆறரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்துடனும், கருப்புநிற உடையுடனும் அரசவையில் நுழைந்தார், ரஸ்புடின். இளவரசரைப் பார்த்தார்; அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். காக்கா உட்கார பனம்பழம் விழவில்லை; பனைமரமே விழுந்தது. இளவரசர் அலெக்ஸி குணமடையத் தொடங்கினார். அரசனும் அரசியும் ரஸ்புடினைக் கொண்டாடினார்கள். இந்நிகழ்வு குறித்து, அரசர் நிக்கோலஸின் மூத்த மகளான 'அனஸ்தாசியா ரோமனாவ்' (Anastasia Romanov) தனது நாட்குறிப்பேட்டில் பதிவுசெய்திருப்பதாவது : "அலெக்ஸியின் கண்களுக்குக் கீழே கருவளையம் படர்ந்திருந்தது. அவனது கால்கள் வீங்கியிருந்தன. இவற்றைக்கண்டு மருத்துவர்கள் செய்வதறியாது நின்றிருந்தனர். தங்களுக்குள் கிசுகிசுவென்று பேசிக்கொண்டனர். அப்போது நான் அங்கிருந்து எனது அறைக்குள் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டேன். பின்னர், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலிருந்த ரஸ்புடினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அநேகமாக நள்ளிரவு அல்லது அதன்பிறகே அவர் அரண்மனைக்கு வந்ததாகத் தெரிகிறது. பின் மறுநாள் காலை என்னை எழுப்பி, அலெக்ஸியின் அறைக்குச் சென்று பார்க்குமாறு கூறினார்கள். அங்கு நான் சென்று பார்த்தபோது, என் கண்களை என்னாலேயே  நம்பமுடியவில்லை. அலெக்ஸியின் நோயுடனான போராட்டம் முற்றிலும் குணமாகியிருந்தது. அவன் கண்கள் பிரகாசமாக இருந்தது. தனது பாதங்களை தரையில் ஊன்றி எழுந்து நின்று பிரார்த்தனை செய்தான். அவர் அலெக்ஸியை தொடாமலேயே குணப்படுத்தியது எனக்கு மேலும் ஆச்சர்யமளித்தது; அவர் என் கண்களுக்கு கடவுளாகவே காட்சியளித்தார்." இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார், அனஸ்தாசியா.


(அனஸ்தாசியா)

       ஆனால் இதை, ரஸ்புடினின் சக்தியில் நம்பிக்கையற்றவர்கள் நம்புவதாயில்லை. 'அவர் இதை அறிதுயில் (Hypnotism) நிலையில் (இதுகுறித்து எதிர்கால பதிவுகளில் காணலாம்) செய்திருக்கலாம்' என்றும். 'அது நோயை போக்காது; நோயின் தாக்கத்தைக் குறைக்கும்' என்று ஒரு சாராரும், 'அவர் அட்டைப் பூச்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அட்டைப்பூச்சியின் உமிழ்நீர் ரத்தத்தை உறைய வைக்கும், ஆனால், இச்சிகிச்சை நோயை மேலும் மோசமாக்கும்' என மற்றொரு சாராரும் வரிந்துகட்டிக்கொண்டு ரஸ்புடினை வசைபாட, ரஸ்புடினிலிருந்து மன்னர்வரை ஒருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. காரணம் இளவரசர் குணமாகிவிட்டார் என்பதே நிஜம்.


(ரஸ்புடின்)

       அன்றுமுதல் ரஸ்புடின் ஜார் மன்னரின் அரசவையின் வழிகாட்டியாகவும், மதகுருவாகவும், ஆலோசகராகவும் மாறினார். அன்றிலிருந்து தும்முவதாக இருந்தாலும் ரஸ்புடினை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள ஆரம்பித்தார் நிக்கோலஸ். இது, அங்கு முன்னர் மன்னரை ஆட்டுவித்துக்கொண்டிருந்த, திருச்சபையைச் சேர்ந்த மதகுருமார்களிடம் அனலைக் கிளப்பியது. எங்கிருந்தோ வந்த சாமியார், மன்னரை ஆட்டுவிப்பதா? ஜார் மன்னரின் ஆட்சியில், ஒரு சாமான்யனின் அதிகாரம் வேர்விடுவதா? என புழுங்கிய மந்திரிகளாலும் ரஸ்புடினின் இப்புகழை சகிக்க இயலவில்லை. எத்தனையோ எதிர்ப்புகளையும், வதந்திகளையும் ரஸ்புடினுக்கு எதிராகக் கிளப்பியும் கூட மன்னரிடத்தில் ரஸ்புடினின் செல்வாக்கு சரியவில்லை. ரஸ்புடினும் இதுகுறித்து கவலைப்படவும் இல்லை; அலட்டிக்கொள்ளவும் இல்லை. 'ஒருவனுக்கு நாணயமற்றவர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புமானால் அவன் வளர்கிறான் என்று அர்த்தம்' என்பதை அறிந்திருந்தார் ரஸ்புடின். இத்தகு இக்கட்டான சூழ்நிலையில் தன்னை தீர்க்கதரிசியாக பிரகடனப்படுத்திக் கொண்டு, அவரது எதிர்ப்பாளர்களின் வயிற்றெரிச்சலில் நெய்க்குடத்தை உடைத்தார். இவ்வாறான நிலையில்தான் ஜார் மன்னரின் அரசவைக்கு வந்தார் மற்றோர் தீர்க்கதரிசி. அவர், சீரோ/செய்ரோ. (Cheiro)


(செய்ரோ)

       எதிர்காலத்தில் நிகழ இருப்பவற்றை நிகழ்காலத்தில் சொல்லவல்ல திறன்/சக்தி கொண்டவர்களே தீர்க்கதரிசிகள். என்னதான் ரஸ்புடின் பல்வேறு மதபிரிவுகளைக் கடந்திருந்தாலும், மனப்பக்குவமின்றி அவருள் இருந்த தீய-ரஸ்புடின் விழிப்புடனே இருந்தான். நமக்குப் போட்டியாக இன்னொரு தீர்க்கதரிசியா?! என்கிற ஆணவத்தோடும் கோபத்தோடும் அவையில் நுழைந்தார், ரஸ்புடின். அரசர் நிக்கோலஸின் அழைப்பின்பேரில் ரஷ்யாவிற்குச் சென்றிருந்த செய்ரோ, (இவரைப் பற்றி விரிவாக எதிர்கால பதிவுகளில் காணலாம்) அரசவையிலிருந்த ஒவ்வொருவரின் கைகளையும் பார்த்து, அவர்களின் எதிர்காலத்தைக் கூறி, பின்னர் அரசர் நிக்கோலஸின் கைரேகையையும் பார்த்து ஜோதிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் அரசவையினுள் அதிரடியாகப் புகுந்தார். நடுவகிடெடுத்த தலைமுடி, அடர்ந்த தாடி, உயரமான உருவம், தரையைத் தொடும் கறுப்பு அங்கி, கையில் சிலுவை, அதிரவைக்கும், அதிகாரம் நிறைந்த அழுத்தமான குரல், தீர்க்கமான கண்கள், மிரட்டும் பார்வை. இவை மட்டுமே செய்ரோவிற்குப் போதுமானதாக இருந்தது, வந்திருப்பது ரஸ்புடின்தான் என்பதை உணர்ந்துகொள்ள.

       'நம்மையும் மீறி ஒருவன் இங்கே எதிர்காலத்தைக் கணிக்க வந்திருக்கின்றானா?' என்கிற ஏளனமான தொனியில் சீரோவை ஏறிட்டார் ரஸ்புடின். அமைதியாக ரஸ்புடினைப் பார்த்து, "உங்கள் கைகளைப் பார்க்கலாமா?" என்றார் செய்ரோ. உள்ளூர தயங்கினாலும், வெளியில் அதனைக் காட்டிக்கொள்ளதவராய் சமாளித்தார். சிலநேர விதண்டாவாதங்களுக்குப் பின், முறைத்தவாறு கைகளை நீட்டினார் ரஸ்புடின். கைகளைப் பார்த்த சீரோ ஒரு கணம் உறைந்துபோய் நின்றார். 'இது மனிதனின் கையா? இல்லை சாத்தானின் கையா?!' என ரஸ்புடினின் சுயரூபத்தையும், அவரால் ரஷ்யாவின் மன்னராட்சியில் வருங்காலத்தில் வீசப்போகும் புயலையும் கைரேகையில் கண்டுணர்ந்து, அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என சற்றுத் தயங்கியவாறு விழித்துக் கொண்டிருந்தார், செய்ரோ. "எனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. விதியை நிர்ணயிப்பவனின் விதியைப் பற்றி நீ சொல்லப் போகிறாயா?! இம்மக்களின் எதிர்காலம், ஏன், அரசரின் எதிர்காலம் கூட என் கைகளில்தான் உள்ளது" என கர்ஜித்தார் ரஸ்புடின். ('நான் சாகணும்னாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும்; நீ சாகணும்னாலும் அதையும் நான்தான் முடிவு பண்ணனும்'ங்கற ரேஞ்சுக்கு 'அஞ்சான்' பட டயலாக்கெல்லாம் அப்போவே பேசிருக்காரு மனுஷன்!) "ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். அதை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் சவுகரியம்" என்றார் செய்ரோ, அமைதியாக. "நீ சொல்லப்போவது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கப் போகிறது. இருந்தாலும் நீ என்னதான் சொல்லப்போகிறாய் எனப் பார்க்கலாம்!" என ஏளனமாகப் பேசினார், ரஸ்புடின். சற்றே அமைதியான புன்னகையுடன், "அடிமட்டத்திலிருந்து இந்த அதிகார நிலைக்கு வந்தவர் நீங்கள். ஆனால், இவ்வதிகாரமெல்லாம் தீயவற்றுக்குத்தான் வழிவகுக்கின்றன. மேலும் சொல்லவா?" என ரஸ்புடினை ஏறிட்டார், செய்ரோ. "நானே ஒரு தீர்க்கதரிசி. உன்னை விடப் பெரியவன். உன்னால் என்னைப்பற்றி என்ன சொல்லமுடியும்?" என கண்ணில் கனல் தெறிக்கக் கொதித்தெழுந்தார், ரஸ்புடின். மற்றொருபுறம், அரசருக்கும் அரசிக்கும், செய்ரோ ரஸ்புடினைப் பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என வயிற்றில் புளியைக் கரைத்தது. (வந்தோமா, நாலு நல்லத சொன்னோமா, அன்பளிப்ப வாங்கினோமா, கிளம்பி ஊருப் பக்கம் போனோமா-னு இல்லாம, இவன்கிட்ட என்னடா விபரீத விளையாட்டு?!) செய்ரோவின் முகம் திடீரென வாட்டமாக மாறியது. "இந்த அரண்மனை வளாகத்திலேயே உங்களின் மரணம் மிகக் கொடூரமாக நிகழப்போவது எனக்குத் தெரிகிறது. விஷமும், தோட்டாக்களும், கத்தியும் உங்கள் உயிரைக் குடிக்கப் போகின்றன. குளிர்நிறைந்த நேவா நதியில் உங்கள் உடல் மிதக்கப் போகிறது. அதோடு உங்கள் மரணத்திற்கு மன்னர் பரம்பரையினரே காரணமாக இருப்பர்" என்றவாறு மெல்ல நிமிர்ந்து ரஸ்புடினின் கண்களைப் பார்த்தார். ஒரு சில நொடிகள் முகத்தில் படர்ந்த பயம், அடுத்தகணம் வெறியாய் மாறியது. சிலவினாடிகள் அரசவையே அமைதியானது. அரசரும் அரசியும் பேயறைந்ததுபோல் அமர்ந்திருந்தனர். சீரோ பிடித்திருந்த தனது கையை வெடுக்கென உருவி, சட்டென எழுந்தார் ரஸ்புடின். செய்ரோவைத் தாக்கிவிடுவார் என்றே அனைவரும் அஞ்சினர். ஆனால், ரஸ்புடின் தன் கையிலிருந்த சிலுவையை நீட்டி, ரஷ்ய மொழியில் சீரோவை நோக்கி கோபமாக எதேதோ பேசினார். (நிச்சயமா எதாவது கெட்டவார்த்தையா இருக்கும்னு அங்க இருந்த ரஷ்ய மொழி தெரியாதவங்க நினைச்சிருப்பாங்க! ஏழெட்டு தலைமுறைய தோண்டியெடுத்து திட்டியிருப்பாரோ..?!) கோபத்தோடு வேகமாக அரசவையைவிட்டு வெளியேறவேண்டுமென்கிற நோக்கில் சிறிது தூரம் நடந்தவர், சற்று நின்று திரும்பி செய்ரோவையும், அரசவையிலுள்ள அனைவரையும் ஒருமுறை திரும்பிப்பார்த்தார். தனது நடுங்கவைக்கும் குரலில், "எனது மரணம் இயற்கையானதாக அமைந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒருவேளை நீ சொன்னதுபோல் இந்நாட்டு அரச பரம்பரையினரால் நான் கொல்லப்பட்டால், இவ்வரசரின் வம்சமே நிர்மூலமாகும்!" என சபித்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் வெளியேறினார் ரஸ்புடின். ('இந்த எலும்புப் பய, சும்மா கிடந்தவனயெல்லாம் கிளப்பிவிட்டுட்டானே' என மன்னர் நினைத்திருக்கக்கூடும்.) கண் இமைக்காமல், நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த செய்ரோவிடம் வந்த ஒரு மொழிபெயர்ப்பாளர், சற்று நேரத்திற்குமுன் ரஸ்புடின் ரஷ்ய மொழியில் கொந்தளித்தவற்றை விளக்கினார். அவை, "ரஸ்புடினின் மரணத்தைச் சொல்ல நீ யார்? ரஸ்புடினுக்கு மரணமே கிடையாது! நீ கூறிய விஷம், கத்தி, தோட்டா எதனாலும் என் உயிரைப் பறிக்க இயலாது. நானே மக்களின் ரட்சகன். ஜார் பரம்பரையின் பாதுகாவலன். நான் ஜாருக்கும் மேலானவன்!".


       ரஷ்யாவிலிருந்து கிளம்பும்வரை செய்ரோவிற்கு உள்ளூர நடுக்கம் இருக்கத்தான் செய்தது. செய்ரோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசகுடும்பமும் அரண்டுபோய்தான் கிடந்தது. (ஒருவேள, காட்டேரி பூசை கட்டிருவாரோ..?!) காரணம், ரஸ்புடினின் சக்தியில் அவர்கள் வைத்திருந்த அபார நம்பிக்கை. உண்மையிலேயே அவருக்கு அந்த அளவிற்கு சக்தி இருந்ததா? என்பதற்கான பதிலை ஒருவராலும் ஆதாரப்பூர்வமாகக் கூற இயலவில்லை. இருப்பினும், தனது ஆளுமைத்திறனாலும், சமயோசித புத்தியாலும் தன்னை ஒரு புதிய மீட்பராகவே மக்கள் நம்பும்படி செய்திருந்தார் ரஸ்புடின். இருக்கின்ற பீதி போதாதென்று, ரஸ்புடினின் ஆதரவாளர்களாக அரண்மனை முழுக்க வியாபித்திருந்த பெண்களனைவரும் 'ரஸ்புடினின் வாக்கு நிச்சயம் பலிக்கும்' எனக் கூறி, ஜார் மன்னருக்கு ஜுரம் வர வைத்தனர். ரஸ்புடின், பொதுவாகவே பெண் சிஷ்யைகள் அதிகம் கொண்ட ஒரு 'மஜா' சாமியாராகவே வாழ்ந்து வந்தார். கீழே பதிவிட்டிருக்கும் புகைப்படங்களே, அதற்கான சில ஆதாரங்கள். அவர் அனைத்துப் பெண்களையும் வசியம் செய்து, தனது மாயவலையில் வீழ்த்தி வைத்திருந்தவர், என பரவலாக பேச்சு அடிபட்டது; பின்னர் ஓரளவிற்கு ஊர்ஜிதமும் ஆனது. இருப்பினும் எவராலும் எதுவும் செய்ய இயலவில்லை. (ராஜாவால கூடவா..?!) சாதாரண பெண்கள் தொட்டு, அரச பரம்பரைப் பெண்கள் உட்பட, ராணி அலெக்ஸாண்ட்ரா வரை அனைவரையும் தொட்டுவிட்டார் என நாடெங்கும் ரஸ்புடினையும், அவரது பெண் சிஷ்யைகளையும் (!) இணைத்து, 'மஞ்சள் செய்திகள்' கொடிகட்டிப் பறந்தன. இந்த சூழ்நிலையில் ராணி அலெக்சாண்ட்ரா, தனது அந்தரங்க காரியதரிசியாக (அட பெர்சனல் செக்கரட்ரி-பா!) ரஸ்புடினை நியமித்தார். (ம்க்கும்... அப்புறம் ராஜாவால என்ன பண்ண முடியும் பாவம்..! ராணியே ரஸ்புடின் கைக்குள்ள..!)


(தனது பெண் சிஷ்யைகளுடன் ரஸ்புடின்)


('அரண்மனைல, மீசை வச்ச ஆம்பளைங்க அம்பது அறுபது பேரு இருக்காங்க. ஆனா நீ, எப்பவும் பொண்ணுங்க கூடவே பேசுற..!' என அரண்மனை ஆண்கள் பலரும் மனம் புழுங்கினர்)
(ரஸ்புடினின் இடதுபுறம் (மேலே சாய்ந்திருப்பவர்) மனைவி, அவரைத் தொடர்ந்து ரஸ்புடினின் மகள்)


(பாருங்க மக்களே. நம்ம ஊருல, இந்த மாதிரி சாமியார எல்லாம், Hidden Camera வச்சுதான் புடிப்பாங்க. ஆனா இங்க இவரு எப்டி Pose குடுக்காருனு பாருங்க!)


(ரஸ்புடினுடன் இணைத்துப் பேசப்பட்ட, ராணி அலெக்ஸாண்ட்ரா செரினா)

       ரஸ்புடினிடம் பெண்கள் வலிய சென்று பேசுவதும் பழகுவதும், அப்பெண்களின் கணவர்கள், காதலர்கள் (ஒருவருக்கு ஒருவர்-ங்கற அர்த்தத்துலதான் மக்களே சொல்றேன்.) என அப்பெண்கள் சம்பந்தப்பட்ட ஆண்களிடம் வெறுப்புணர்ச்சியை வளர்த்தது. அந்நாட்டு ராணியாரும், அரச பரம்பரையைச் சேர்ந்த பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லாமல் போனது, அரச வம்சத்தைச் சேர்ந்த ஆண்களிடமும், பிரபுக்களிடமும், திருச்சபையைச் சேர்ந்தவர்களிடமும் பகையுணர்ச்சியைப் பெருக்கியது. முடிவில், ரஸ்புடினின் கதையை முடித்தால்தான், இம்மாதிரியான விஷயங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என நாலைந்துபேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று முடிவு செய்தது. இவ்விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டியவர், இளவரசர் ஃபெலிக்ஸ் யூசுபோவ் (Felix Yusupov). காரணம், இவரும் பாதிக்கப்பட்டிருந்தார். ('இந்த அரண்மனையில இருக்குற பொண்ணுங்கள இவன்கிட்ட இருந்து காப்பத்துறதே, இந்த அரண்மனைல இருக்குற ஆம்பளைங்களுக்கு வேலையா போச்சே..! அதுலயும் என் duty, over time-ஆவுல போய்கிட்டு இருக்கு..!!!' என யூசுபோவ் வருந்தாத நாளில்லை.) 


(பிரபுக்களுடன் ரஸ்புடின்)

       இளவரசன் ஃபெலிக்ஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவன். தனது மனைவி ஐரினா(Irina)-வின்மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தான். ஆனால் ஐரினாவோ, ரஸ்புடின் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தாள். (வெளங்கிடும்..!) ஒரு போலிச்சாமியார் (யூசுபோவிற்கு ரஸ்புடினின் சக்தியில் நம்பிக்கை கிடையாது) அரசவையின் அதிகாரத்தில் கைவைப்பதா என பலநாள் புழுங்கிய மனத்தின் கடைசி அஸ்திரம்தான், ரஸ்புடினைக் கொல்லும் சதித்திட்டம். யூசுபோவ் தனியொருவனாக இதைச் செய்ய விரும்பவில்லை. இதற்காக 25 வயதேயான டிமிட்ரி பவ்லோவிச் (Dmitri Pavlovich) என்ற பிரபுவை முதலில் தன்னுடன் கூட்டு சேர்த்தான். முதலில் சற்று (ரஸ்புடின் மீதான பயத்தின் காரணமாக) தயங்கினாலும், பின்னாளில் தானும் அரியணை ஏறும் சந்தர்ப்பம் இருப்பதால் சம்மதித்தான். (இவனும் அனுபவப்பட்டிருக்கான்!) பின்னர், அங்கிருந்த செயல்படாத பாராளுமன்றத்தின் தலைவனாக இருந்த விளாடிமிர் புரிஷ்கெவிச் (Vladimir Purishkevich) என்பவரை இக்கூட்டு சதியில் இணைய அழைத்தபோது, விருப்பத்தோடு வந்திணைந்தார். இறுதியாக இக்கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டவர், டாக்டர். ஸ்டேனிஸ்லஸ் லாசாவெர்ட் (Dr.Lazavert). (இவரது புகைப்படம் கிடைக்கவில்லை!) நால்வரும் ரஸ்புடினை அழித்தே தீருவது என்பதில் முனைப்போடு மிகத்தீவிரமாகத் திட்டமிட்டார்கள். முடிவில், ரஸ்புடினுக்கு விஷம் வைத்து கொள்வது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு, அப்பொறுப்பு டாக்டர்.லாசாவெர்ட்டின் வசம் ஒப்படைக்கப்பட்டது. (ரஸ்புடினோட பலத்தோட இவங்களால ஒண்டிக்கு ஒண்டிலாம் நின்னு மோத முடியாது!)


(ஃபெலிக்ஸ் யூசுபோவ்)


(யூசுபோவ், தன் மனைவி ஐரினாவுடன்)


(பாவ்லோவிச், தன் மனைவியுடன்)


(விளாடிமிர் புரிஷ்கெவிச்)

       சரி. திட்டம் தீட்டியாயிற்று. எவ்வாறு விஷம் வைத்துக் கொல்வது? கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த நேரம். டிசம்பர் 16-ம் தேதி இரவு விருந்தொன்றிற்கு ரஸ்புடினை அழைத்து, அவ்விருந்தில் ரஸ்புடினுக்கு என சிறப்பாகப் பரிமாறப்படும் உணவில் விஷத்தைக்கலப்பது என முடிவுசெய்யப்பட்டது. சாமான்யமாக ரஸ்புடின் எதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டானே என யூசுபோவ் குழம்பும்போது, 'ஐரினாவும் விருந்திற்கு வருகிறாள் என்று சொன்னால் நிச்சயம் வருவான்' என எந்த நல்லவனோ யோசனை கூறினான். (அவனை நிச்சயம் யூசுபோவ் முறைத்திருப்பார்!) வேறுவழியின்றி ரஸ்புடினிடம் அவ்வாறே சொன்னார் யூசுபோவ். ஐரினா வருகிறாள் என்றதும் உடனே சம்மதித்தார் ரஸ்புடின்; யூசுபோவ் காதுகளில் புகை வந்தது. (வாடா நீ வாடா... என் ஏரியாவுக்கு வாடா, உனக்கு இருக்கு..!)

       'மெளகா' (Mouga) எனும் கால்வாய்க்கு அருகிலிருந்த 'பெட்ரோகிராட்' (Petrocrate)-டில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் எதிர்பார்த்ததுபோன்றே குறித்த நேரத்தில், தனக்கு விருப்பமான விலையுயர்ந்த பட்டாடை அணிந்தவராய் வந்து சேர்ந்தார் ரஸ்புடின். அவர் அவ்வாறு அங்கு வரும்முன், அவரது ஆதரவாளர்கள் சிலர், அங்கு அவரின் உயிருக்கு ஏதோ ஆபத்து இருப்பதாகவும், அதனாலேயே யூசுபோவ் வலிய வந்து விருந்திற்கு அழைப்பதாகவும் எச்சரித்தனர். இருப்பினும், ஐரினாவின் மீதிருந்த மயக்கத்தினாலும், நம்பிக்கையினாலும் அவற்றை உதாசீனப்படுத்தினார் ரஸ்புடின். தனது மகளுக்கு பணம் அனுப்புவதிலும், சில ரகசிய கடிதங்களை எரித்து அழிப்பதிலும், பிரார்த்தனை செய்வதிலுமே கவனமாக இருந்தார்; அவர்கள் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரஸ்புடின் வரும்முன்னரே ஐரினாவை தனது எஸ்டேட்டிற்கு அனுப்பிவைத்திருந்தான், யூசுபோவ். விருந்து நடக்கும் மாளிகையின் கீழேயுள்ள பாதாள அறையில் ரஸ்புடினுக்கான விசேஷ உணவுகள் மேஜையின்மீது பரப்பட்டிருந்தன. அங்கிருந்த (ரஸ்புடினுக்கான) உணவுப் பொருட்களனைத்திலும் பொட்டாசியம் சயனைட் எனும் கொடிய நஞ்சு கலக்கப்பட்டிருந்தது. [இங்கு சயனைடைப் பற்றி சொல்லியாகவேண்டும். வாயில் வைத்தவுடன் உயிரை எடுக்கும் அளவிற்கு கொடியது, சயனைடு. தீவிரவாதிகள் பற்றிய திரைப்படங்களில், தீவிரவாதிகள் கழுத்தில் கட்டியிருப்பார்களே, பிடிபடும் சூழ்நிலையில் அதை வாயில்வைத்து இறப்பார்களே, அது சயனைடேதான்! அதன் சுவை எவ்வாறு இருக்கும் என அறிய, சில சோதனைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள தாங்களாகவே சில மனிதர்கள் முன்வந்ததாகவும், 'S' என்ற முதல் எழுத்தை எழுதியவாறே அவர்களின் உயிர் பிரிந்ததாகவும், என் நண்பர் திரு.செந்தில் குமரன் அவர்கள் கூறி, கேள்விப்பட்டிருக்கிறேன். S எனத் துவங்குவதால், அச்சுவை, இனிப்பு (Sweet), புளிப்பு (Sour), உவர்ப்பு (Salty) என எதுவாகவும் இருக்கலாம்! 'அவர்கள் ஏன் எழுதச் சொன்னார்கள்? பேசாமல் ஒரு பொத்தானை அழுத்தி, எந்த சுவை என கண்டறியும்படி செய்திருக்கலாமே' என கேட்டதற்கு, 'ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட சுவைகளை, அதை விழுங்கும் நபர், அதை விழுங்கும்முன் உணர்ந்தால்?' என்பது என் நண்பரின் எதிர்க்கேள்வியாய் அமைந்தது. எது எப்படியோ, வாயில் சயனைடை வைத்தவுடன் உயிர் பிரியும் என்பதே நிதர்சனம்!] முதலில் விருந்து என்றும், அது முடிந்தபின் கேளிக்கைகளுக்கு மேலே செல்வது என்றும் நிகழ்ச்சிநிரல்கள் அமைக்கப்பட்டன. ரஸ்புடின் வரும்போதே நிகழ்சிகள் ஆரம்பமாகிவிட்டன. எனவே அவரை நேரே (தங்கள் திட்டப்படி) பாதாள அறைக்கு அழைத்துச் சென்றனர்.


       அறையினுள் நுழைந்தவுடன் ரஸ்புடின் யூசுபோவிடம் கேட்ட முதல் கேள்வி, "ஐரினா எங்கே?" ('அது ஏண்டா எப்ப பார்த்தாலும் என் பொண்டாட்டி மேலயே குறியா இருக்கான்?!' என யூசுபோவ் அருகிலிருப்பவனை முறைத்திருக்கக் கூடும்!) "மேலே வந்திருக்கும் விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருக்கிறாள். விரைவாக சாப்பிடுங்கள் இருவரும் சேர்ந்தே போய் அவளைப் பார்க்கலாம். உங்களுடன் சேர்ந்து சாப்பிடவேண்டுமென்பதற்க்காக நானும் இன்னும் சாப்பிடவில்லை." என வற்புறுத்தி விருந்துக்கான மேஜையில், தன் எதிரில் அமர்த்தினான். இருப்பினும், ரஸ்புடினின் மனதினுள் ஏதோ விநோதமாகப் பட, உடனே எழுந்தார். வற்புறுத்தி அமரவைத்து, விஷ கேக்குகள் ரஸ்புடினுக்கும், நஞ்சற்றவை யூசுபோவுக்கும் பரிமாறப்பட்டன. ரஸ்புடினின் மனம் வேறெங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்தது. 'இனி நான் உண்டால்தான் இவனும் உண்பான் போலிருக்கிறது' என உணர்ந்த யூசுபோவ், தனது தட்டிலிருந்த கேக்குகளை உண்ணத் தொடங்க, ரஸ்புடினும் தனது தட்டிலுள்ளவற்றை உண்ண ஆரம்பித்தார். வெறுமனே உண்ணாமல் தனக்கிருந்த ஓரினசேர்க்கை  வியாதிக்கு தீர்வு கூறவேண்டுமென்று, ரஸ்புடினின் சக்தியில் நம்பிக்கையுள்ளவனைப் போல் காட்டிக்கொண்டவாரே சாப்பிட்டான். கேக்குகள்தான் காலியாகினவேயொழிய, ரஸ்புடின் அதே கம்பீரத்தோடு அமர்ந்திருந்தார். மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. சயனைடு அவரை ஒன்றுமே செய்யவில்லை. போதாக்குறைக்கு இடையிடையே, 'ஐரினா எங்கே?' என்றுவேறு கேட்டுக்கொண்டார். அவ்வாறான நேரங்களில் யூசுபோவ் பல்லைக்கடிப்பது, அவர் வாயினுள் இருந்த கேக்கின் காரணமாக வெளியில் தெரியாமல் இருந்தது. பின்னர் சயனைடு கலக்கப்பட்ட ஒயின் கொடுக்கப்பட்டது; அதுவும் ரஸ்புடினை ஒன்றும் செய்யவில்லை. ஒரு சின்ன தலைசுற்றல்கூட இல்லாமல், ஐரினாவைக் குறித்து கேள்வியெழுப்பி யூசுபோவின் வெறியைக் கிளப்பிக்கொண்டிருந்தார், ஏதும் அறியாதவராய். (நான், 'இந்த சதித்திட்டம் பற்றி ஏதும் அறியாதவர்' என்று கூறினேன்!) அங்கு ரஸ்புடினுக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துமே ரஸ்புடினுக்கு விருப்பமான கேக் வகைகள். அதனால், சற்று அதிகமாகவே சாப்பிட்டார் ரஸ்புடின். அத்தனை கேக்குகளிலும் விஷம்! இருந்தும் எதுவுமே ஆகாமல் உட்கார்ந்திருந்த ரஸ்புடினைப் பார்த்து உள்ளூர வியந்துதான் போனான் யூசுபோவ். மேலே கொண்டாட்ட சப்தங்கள் அதிகமாக அதிகமாக, ஐரினா வருவாள் என்கிற ரஸ்புடினின் எதிர்பார்ப்பும் அதிகமானது. ('அபிராமி வருவாளா?'-னு கேக்குற குணா கமல் மாதிரி ஆயிட்டாரே பா மனுஷன்!) ரஸ்புடினின் கவனத்தைத் திருப்ப, அவரின் விருப்பப்படி பாடலெல்லாம் பாடிக் காட்டினான் யூசுபோவ். (இங்க கொலை பண்ண வந்தோமா? இல்ல கொடைக்கானல் டூர் வந்தோமா?-னு ஒருதடவையாவது யூசுபோவ் நெனச்சுப் பாத்திருப்பாரு!) கதை முடிந்தது என்று பார்த்தார்கள்; ஆனால் உண்மையில் விடிந்தது! (கிழிந்தது!) மணி இரண்டு! இருவருக்கும் பொறுமையில்லை! "நீங்கள் இங்கேயே இருங்கள். நான் சென்று ஐரினாவை அழைத்துவருகிறேன்" என ஆத்திரத்தோடும் ஒருவித பயத்தோடும் மேலே சென்றான், யூசுபோவ். மேலே சென்று தன் சகாக்களிடம் விஷயத்தைத் தெரிவித்தான். முதல்முறையாக அவர்கள் அனைவருக்கும், 'பிறர் நம்புவதுபோல், உண்மையில் ரஸ்புடினிடம் ஏதேனும் சக்தி இருக்குமோ?' என்கிற பயம் தொற்றிக்கொண்டது. (கேக்குல பாய்சன கலந்தீங்களா..? பால்பவுடர கலந்தீங்களாடா..? எங்க அந்த டாக்டரு..?!)


       'இதைவிட்டால் இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காது. ஐரினாவும் இப்போது இல்லை. பொய் சொல்லிதான் அவனை வரவழைத்தோம் என்று தெரிந்தால், அடுத்தமுறை உண்மையிலேயே ஐரினா இருந்தாலும்கூட இவன் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு தானாக வந்து மாட்ட மாட்டான். என்ன செய்யலாம்?' என அனைத்து சதித்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மேல்தளத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர். "அப்படியானால் அவனை சுட்டுக் கொல்வதுதான் ஒரே வழி!" என தனது முதுகுக்குப் பின்னால் மறைத்துவைத்திருந்த சிறிய கைத்துப்பாக்கியை யூசுபோவின் கைகளில் திணித்து, "எதற்கும் இருக்கட்டும் என கொண்டுவந்தேன்!" என சிரித்தான், டிமிட்ரி பிரபு. ('என்னைய வச்சே செக் பண்ணுங்கடா?' என விழித்திருப்பார் யூசுபோவ்) 

       கீழ் தளத்தில், பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களைப் பார்த்து வியந்தும், அங்குள்ள சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டும் நின்றிருந்தார், ரஸ்புடின். "படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன, இல்லையா?" என்று கேட்டவாரே ரஸ்புடினின் பின்னால் நின்றிருந்த யூசுபோவ், அவரது முதுகில் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினான். துப்பாக்கிக் குண்டு உடலை பெரும் சத்தத்துடன் துளைக்க, முதுகிலிருந்து ரத்தம் பீறிட, சுருண்டு தரையில் விழுந்து துடித்தார் ரஸ்புடின். மேலே வாசலுக்கருகில் மற்ற மூவரும் நின்றிருந்ததால், அவர்கள் மட்டும் சத்தம் கேட்டு கீழே ஓடிவந்தனர். (சுட்டது யாரு? சுடப்பட்டது யாரு?னு பாக்குறதுக்கு!) மேலே இருந்த சத்தத்தின் காரணமாக மற்றவர்களுக்கு துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை. கீழே வந்த அனைவருக்கும் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். பின்னர் சலனமற்றுக்கிடந்த ரஸ்புடினின் உடலை, தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளம், அவரது ரத்தத்தால் கறை படாதவாறு இருக்க, நால்வரும் சேர்ந்து தூக்கி ஒரு ஓரமாக வைத்தனர். சற்றே நிம்மதியுடன் மேலே சென்று தனது சகாக்களுடன் சந்தோஷமாகக் குடித்து கும்மாளமிட்டான் யூசுபோவ். திடீரென மனதினுள் ஒரு நெருடல், வேகமாக கீழே இறங்கிவந்து ரஸ்புடினுக்கு இன்னும் நாடி துடிக்கிறதா என அறிய குனித்தான். சட்டென கண்விழித்த ரஸ்புடின், "ஃபிலிக்ஸ்...ஃபிலிக்ஸ்" என பயங்கரமாய்க் கத்தியவாறு யூசுபோவின் சட்டையைக்கிழித்து, யூசுபோவை ஓங்கி ஒரு உதை விட தொலைவில் போய் விழுந்தான் யூசுபோவ். சுதாரித்து எழுந்து திரும்பிப் பார்த்தால், ரஸ்புடின் கண்ணில் கொலைவெறியோடு யூசுபோவை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தார். (தெய்வமே என்னையக் காப்பாத்து..!) யூசுபோவ் ஓடத்துவங்க, விடாமல் விரட்டினார் ரஸ்புடின். ஓடும்போதே தன்னிடமிருந்த துப்பாக்கியால் பின்னால் அவ்வப்போது திரும்பி 4 முறை சுட்டான் யூசுபோவ். 2 முறை குறி தவறியது; 2 முறை ரஸ்புடினின் உடலைத் துளைத்தது. இருப்பினும் எவ்வித பயனும் இல்லை; துரத்தல் தொடர்ந்தது. (ஆஹா...இன்னைக்கு-னு பாத்து ஒரு பயலையும் காணோமே..!) சத்தம்கேட்டு கீழே வந்த புரிஷ்கெவிச் தனது பாதுகாவலர்களுக்கு உத்தரவிட அவர்களும் சுட்டனர். அதுவும் வேலைக்கு ஆகவில்லை. ஆனால், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்ந்த ரஸ்புடின், வேறொரு பாதைவழியாக அங்கிருந்த நந்தவனத்தினுள் நுழைந்து ஓடத் துவங்கினார். அப்போது பின்னாலிருந்து வந்த டிமிட்ரி பிரபு தனது பெரிய துப்பாக்கியால் ரஸ்புடினைச் சுட, தலையில் குண்டுதுளைத்து ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். ஒருவழியாக ஒழிந்தான் என்றவாறு அவ்வுடலை மீண்டும் மாளிகைக்குள் இழுத்துவந்து போடுமாறு தனது பாதுகாவலர்களைப் பணித்தார். அவர்களும் அவ்வாறே செய்த்துவிட்டு வெளியேறினர். யூசுபோவ் அவ்வுடலையே பார்த்துக்கொண்டிருக்க, ரஸ்புடின் நறநறவென பற்களைக் கடிப்பது தெரிந்தது! "இவன் இன்னும் சாகவில்லை; இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்" என்று ஒரு இரும்புத்தடியை எடுத்து ரஸ்புடினின் தலையிலும் உடலிலும் சரமாரியாக வெறிபிடித்தவனைப் போல் தாக்கினான், யூசுபோவ். மற்ற நால்வரும் அவனைத் தடுத்தனர். (அப்போது ரஸ்புடினின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. அதற்கு ஆதாரமாக அவ்வாறு துண்டிக்கப்பட்டது இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ரஸ்புடினைப் பற்றித் தேடினாலே கிடைக்கும். இத்தளத்தை பள்ளி மாணவ மாணவியரும் பார்வையிடுவதாக தகவல் கிடைத்தது. அவர்களின் நலன்கருதி அப்படத்தை நான் இங்கு இணைக்கவில்லை!) "இதற்குப் பின்னும் சாகாமல் இருக்கிறான் என்றால் இவன் மனிதப் பிறவியே கிடையாது!" என முணுமுணுத்தவர்களாய் அடுத்து என்ன செய்வது என யோசித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் ரஸ்புடினின் துடிப்பு அடங்கியது. இருப்பினும், அவரது உடல் வெதுவெதுப்பாக இருப்பதை உணர்ந்து அதிர்ந்தனர். (பொதுவாக, இறந்தவுடன் ரத்தஓட்டம் நின்றுவிடுவதாலும், உடலுறுப்புகள் செயலிழந்துவிடுவதாலும், உடல் உஷ்ணம் குறைந்து, உடல் குளிரத் துவங்கும்!)


(காயங்களுடன் ரஸ்புடினின் உடல்)

       நால்வரும் ரஸ்புடினின் உடலை இறந்துவிட்டதாக முடிவுசெய்து, ஒரு கம்பளத்தில் வெளியில் வரமுடியாதபடி (ஒருவேளை உயிர் பிழைத்துவிட்டால்!) இறுகக் கட்டி ராணுவ ஆம்புலன்ஸ் ஒன்றில் ரகசியமாக ஏற்றி, அருகில் ஓடிக்கொண்டிருந்த நேவா நதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர்களாக மீண்டும் மாளிகைக்கு நிம்மதியாகத் திரும்பினர். ஆனால், அவ்வாறு அவர்கள் ரஸ்புடினின் உடலை வீசிஎறியும்போது, ரஸ்புடினின் செருப்பு ஒன்று அங்கே விழுந்துவிட, அதை ஒருவரும் கவனிக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பின், ஒரு காவல்துறை அதிகாரியின் கண்களில் பட நதிக்கரையில் சோதனை நடத்தினார். ஏற்கனவே நாடெங்கும் ரஸ்புடினைக் காணவில்லை என்கிற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நதிக்கரையில், சற்றுத் தொலைவில் ரஸ்புடினின் உடல் கிடப்பதைக் கண்டறிந்தனர்; பிரேதப் பரிசோதனையும் செய்தனர். உடலில் விஷம் எதுவும் இல்லை! 3 துப்பாக்கிக் குண்டுகள் மட்டும் இருந்தன. ஒரு குண்டு வயிற்றுப் பகுதியையும், கல்லீரலையும் தாக்கியிருந்தது. இன்னொரு குண்டு சிறுநீரகப் பகுதியைத் தாக்கியிருந்தது. மற்றொரு குண்டு மூளைப்பகுதியில் காயத்தை ஏற்படுத்தியிருந்தது. (மூளையை என்னதான் சிதைத்தாலும், நம்மால் அவ்வலியை உணர இயலாது (மயக்கமருந்து கொடுக்கப்படாத நிலையிலுமே கூட) என்பது கொசுறுத் தகவல்!) நுரையீரலில் நீர் இருந்தது. அதாவது நீரினுள் தூக்கிப் போட்டபோதும் கூட ரஸ்புடின் உயிரோடு இருந்திருக்கிறார். அவர் சுவாசிக்கும்போது, நீர் நுரையீரலுள் புகுந்திருக்கும் என சில மருத்துவர்கள் கூறினர். கட்டித் தூக்கிப் போட்டபின் எவ்வாறு வெளியே வந்திருப்பார் என குழம்பிக்கொண்டிருந்த கும்பலுக்கு, அவ்வுறைநீரிலும், அவர் உயிரோடு நீந்தி, எப்படியோ முடிச்சை அவிழ்த்து வெளியேறி, கரையேற முயன்றிருப்பது தெரிந்து வியர்த்துக்கொட்டியது. முடிவில், கொலைகார கும்பல் பிடிபட்டது. அரசவையில் பதவியிலிருந்த ஒரு முக்கிய நபரை படுகொலை செய்ததற்குத் தண்டனையாக, யூசுபோவ் அந்நாட்டு கிராமம் ஒன்றிலிருந்த எஸ்டேட்டுக்கும், டிமிட்ரி பெர்சியா(Persia)-வுக்கும் நாடுகடத்தப்பட்டனர். புரிஷ்கெவிச் ரஸ்புடினின் கதையை முடித்ததாக எண்ணிய அன்று ரயில் ஏறியவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை; அதன்பின் யார் கண்ணிலும் அகப்படவில்லை. இது கண்துடைப்பிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என எல்லோருக்குமே தெரிந்தது. (ஏன்னா, ராஜாவுக்கு ராணி கிடைச்ச சந்தோஷம்!) 

       ரஸ்புடினின் மறைவுக்குப் பின், அரண்மனையிலிருந்த அவரது அறையை சோதனையிட்டனர். அப்போது கிடைத்த ஒரு கடிதத்தில் ரஸ்புடின் எழுதியிருந்த தீர்க்கதரிசனங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதில் ரஸ்புடின் குறிப்பிட்டிருந்தவை.
  • 1917-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்பாகவே நான் மரணமடைவேன்.
  • பிரபுக்கள் அல்லது உயர்குடியைச் சேர்ந்தவர்களால் நான் கொல்லப்படலாம்.
  • எனது மரணம் நிகழ்ந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில், அரசகுடும்பத்தை சேர்ந்த அனைவரும் மரணமடைவார்கள்.
  • கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர்கள் ரஷ்யாவில் ஆட்சியைப் பிடிப்பார்கள்.
  • அவ்வாறு ஆட்சியைப் பிடிப்பவர்கள், பின்னாளில் தங்களுக்குள் ஏற்படும் சகோதரச் சண்டை காரணமாக வெறுப்பு மிகுதியாகி, ஒருவரையொருவர் தாக்கி மடிவார்கள்.
  • தேவாலயங்களின் மதிப்பு குலைக்கப்படும்.
இவற்றில் அவர் குறிப்பிட்டிருந்த அனைத்துமே நடந்ததுதான் ஆச்சர்யம். இவ்வாறு குறிப்பிட்டிருந்த 6 விஷயங்களில் எவைஎவை நிகழ்ந்தன என இனி காணலாம்.
  1. 1916-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ரஸ்புடினின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
  2. ரஸ்புடினைக் கொல்வதில் பங்கற்றியவர்கள் அரச மரபினரும், பிரபுக்களுமே என்பதை முன்னரே கண்டோம்.
  3. ஜார் மன்னரின் மனைவி அலெக்சாண்ட்ரா ஜெர்மனியைச் சேர்ந்தவள். முதல் உலகப்போர் காலகட்டத்தில் (1914 - 1918), ஜார் மன்னர் நிக்கோலசை வற்புறுத்தி போர்முனைக்கு அனுப்பியவர், ரஸ்புடின். அன்று முதலே, அலெக்சாண்ட்ரா ரஷ்யாவின் அப்போதைய எதிரிநாடான ஜெர்மனிக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் உளவுவேலை பார்ப்பதாக நாடெங்கும் பரவலாகக் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு ரஸ்புடின்தான் துணையாக இருப்பதாகவும் நம்பப்பட்டது. இதன்பின், இவ்விருவரின்மீதும் நாட்டுமக்கள் பெரும்பாலானோருக்கு வெறுப்பு இருந்தாலும், ரஸ்புடின் மீதான பயம் மக்களை வாய்பேசமுடியாமல் செய்தது. போதாக்குறைக்கு, "இவர் என் நண்பர்" என ரஸ்புடினின் தோளில் கைபோட்டு ஜார் மன்னர் தனது வட்டாரங்கள் முழுவதும் அறிமுகப்படுத்தியதால், அரசவை அதிகாரிகளும், மந்திரிகளும்கூட 'அரசருக்கு நெருக்கமானவரைப் பற்றிக் குறைகூறினால், தங்கள் பதவி பறிபோய்விடுமோ' என்கிற பயத்தில், ரஸ்புடினுக்கு எதிராக மூச்சுவிடவில்லை. ரஸ்புடின் இறந்த சிலகாலம் கழித்து ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக ஜார் மன்னரின் பதவி பறிக்கப்பட்டது. அதற்கடுத்து பதவிக்கு வந்த ஆட்சியாளர்களால், ஜார் மன்னரின் குடும்பத்திலிருந்த அனைவரும் தூக்கிலிடப்பட்டும், சுட்டுக்கொல்லப்பட்டும் இறந்தனர். ஆனால், ரஸ்புடினின் கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேர் மட்டும் அப்போது கொல்லப்படவில்லை என்றும், அவர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ்ந்தாகவும் சொல்லப்படுகிறது. ரஸ்புடினின்மீது உயிரையே வைத்திருந்த ஐரினா, ரஸ்புடினின் மறைவிற்குப் பின் மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியம் போல் ஆனாள். அவளது இந்நிலைக்குக் காரணம் ரஸ்புடின்தான் என்று நம்பி, தனது கடைசிக்காலம் வரை வருந்திக்கொண்டிருந்தான் யூசுபோவ்.
  4. ரஷ்யாவில் அதன்பின் ஆட்சிக்கு வந்தவர்கள், 'கம்யூனிஸ்டுகள்' (Communists). அவர்கள் இறைமறுப்புக் கொள்கையுடையவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
  5. முதலில் ஒற்றுமையாக இருந்த கட்சியில், பின்னாளில் லெனினுக்கு (Lenin) எதிராக ஸ்டாலின் (Joseph Stalin) புறப்பட்டதும், அவர்களுக்கிடையேயான பிணக்குகளால் ஏற்பட்ட பிரிவினைகளும் அனைவரும் அறிந்ததே.
  6. ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில், தேவாலயங்களை தானியக் கிடங்குகளாகப் பயன்படுத்தினார். 

(ஓவியமாக, லெனினும், ஸ்டாலினும்)

       இவ்வாறாக ரஸ்புடின் தீர்க்கதரிசனமாய்க் கூறிய பலவும் பின்னாளில் நிகழ்ந்தன. எப்படி ஒரு சாதாரண மனிதரால் இவற்றை செய்ய முடிந்தது? இவ்வளவு சக்திகள்/திறன்கள் இவருக்கு எங்கிருந்து வந்தன? மாயாஜாலமா? மந்திரசக்தியா? கடவுள் அருளா? சாத்தானின் செயலா? தற்செயலா? மர்மம் இன்னும் மர்மமாகவே தொடர்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நம்பினர்; இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்; எதிர்காலத்திலும் இவ்வாறான தனிப்பட்ட நம்பிக்கைகள் தொடரும் என்று நாமும் நம்பலாம். பின்பு, 1977-ல், ரஸ்புடின் வாழ்ந்த வீட்டுத் தோட்டத்தை தோண்டியபோது ஒரு மரப்பெட்டி கிடைத்தது. அதிலிருந்தவை பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது. அதிலிருந்தவை பெண்களின் அந்தரங்கப் பகுதிலிருந்து கத்தரிக்கப்பட்ட முடி. (கேட்டா, ஆன்மீக ஆராய்ச்சி-னு சொல்லுவாங்க!)



       ரஸ்புடினின் மறைவு பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அவரின் மறைவிற்கு வருத்தப்பட்ட மக்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நதியிலிருந்த நீர் அவரது உதிரத்தால் (ரத்தத்தால்) புனிதமடைந்ததாகக் கூறி, வாளிகளில் அந்நதிநீரை நிரப்பிக் கொண்டுபோய் வீடுகளில் தெளித்து, பாதுகாத்தவர்கள் ஏராளம். அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என அக்காலத்தில் நம்பியவர்களும் ஏராளம் என்பது ஆச்சர்யத்தின் உச்சம்! இதில் இக்கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது. ரஸ்புடினின் உடன்பிறந்த சகோதரன் டிமிட்ரி, சகோதரி மரியா ஆகியோரின் உயிர் எவ்வாறு நீரில் பிரிந்ததோ, அவ்வாறேதான் ரஸ்புடினுக்கும் நிகழ்ந்தது! (ஒருவேள, இவர்கூட பிறந்தவங்களுக்கு தண்ணியில கண்டமோ..?!) இம்மக்களால், வழக்கம்போல ரஸ்புடின் சிலரால் போற்றவும் தூற்றவும் பட்டார். எல்லா மனிதருக்கும் இந்நிலைதான் என்றாலும், உண்மையில் ரஸ்புடின் நல்லவரா? கெட்டவரா? என்கிற கேள்விக்கு, எனது பார்வையில் தோன்றியதை தலைப்பிலேயே தந்துவிட்டேன். அதுவும் அந்நாட்டு மக்களுக்கு என்பதால், தலைப்பன் முகப்பே அதை உங்களுக்கு உணர்த்தும்!

       சரி. இவர் இவ்வாறுதான் இறப்பார் என இவரிடமே தைரியமாக வந்து சொன்னாரே செய்ரோ, அவர் எவ்வாறு கூறினார்? கைரேகையில் அவ்வாறான எதிர்காலம் தெரியுமா? அப்படியானால், ஜோதிடம் உண்மையா? இவ்வாறு ஒருவரது எதிர்காலத்தை கணிக்க இயலுமா? காணலாம், அடுத்த பதிவுகளில்; அதுவரை காத்திருங்கள்.


அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.


(மிக தாமதமான பதிவு என்பதால், உங்களில் பலர் என் மீது கடுங்கோபத்தில் இருக்கலாம். எனது மடிக்கணினி பிரச்சனை நீங்கள் அறிந்ததே. மேலும், இதற்கான தகவல்கள் திரட்ட கூடுதல் கொஞ்சம் நாளாகிவிட்டது. மன்னிக்கவும். கட்டுரையின் நீளம், எனது முயற்சியை உணர்த்தும் என நம்புகிறேன். - அயலான்)


துணை நின்ற நூல்கள்:
  1. அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள் - குன்றில் குமார்.
  2. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - முகில்.
  3. சரித்திரத்தில் மறைந்திருந்த மர்மங்கள் - ரா.வேங்கடசாமி.

இப்பதிவுத்தளத்தை ஆங்கிலத்தில் பார்வையிட: 
          www.charismaticenigma007.blogspot.in

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
          www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:
Grigori Rasputin
Tura River
Khlysts
Princess Irina Alexandrovna
Orthodox church takes on Rasputin
Women talks more words than Men
Vladimir Purishkevich
Murder of Rasputin
Tsar Family

Saturday 21 February 2015

26.) அடுத்த குறி...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவு இதுவரை பதிவிட்ட பதிவுகளின் வரலாற்றிலேயே, மிகக்குறைந்த நாளில் மிக அதிக வாசகர்களால் பார்வையிடப்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. ஒரு நாணயத்தின் இருபுறம் போலவே, இன்பம் மிகும் வேளையிலும், சோகம் சூழ மறப்பதில்லை. எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை, அந்த நாணயம் எப்போதும் செங்குத்தாகவே நிற்கிறது; இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர அனுபவிக்கிறேன். என்ன துன்பம் என்றால், எனது கணினியில் ஏறத்தாழ 5 ஆண்டுகாலம் திரட்டி வைத்திருந்த தரவுகளனைத்தும், நினைவகக் கோளாறால் முற்றிலும் அழிந்துவிட்டன. உண்மையில் எனக்கு எதுவுமே தோன்றவில்லை. முற்றிலும் உறைந்துவிட்டேன்; முழுவதும் உடைந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகால உழைப்பை மீண்டும் மீட்டெடுப்பது என்பது, கனவில் கூட சாத்தியமற்ற ஒன்று. (இதையெல்லாம் ஏன் எங்ககிட்ட சொல்ற-னு நீங்க கேக்கலாம். என்னமோ தோணுச்சு. அவ்ளோதான். அதுக்காக பதிவுகள் எதுவும் பாதிக்காது. பயப்பட வேண்டாம். சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.) கடந்த பதிவின் மூலம் அரிகோவைப் பற்றித் தெரிந்துகொண்ட நண்பர்கள் சிலர், "இப்ப அந்த ஃபிரிட்ஸோட ஆவி என்கிட்ட வந்து, அரிகோகிட்ட கேட்ட மாதிரி என்னையயும் (அரிகோ மாதிரி) யூஸ் பண்ணிக்கவா-னு கேட்டா எவ்ளோ நல்லா இருக்கும்?!" (ஓவர் நைட்-ல ஒபாமா டா..!) என்றெல்லாம் கேட்டார்கள்! அவர்களைப்போல் வாசகர்கள் பலருக்கும் தோன்றியிருக்கலாம். அவர்களுக்காகவே இப்பதிவு. அதோடு, கடந்த பதிவில் நம்முள் ஏற்பட்ட சில வினாக்களுக்காகவும். இதுவும் தாமதமான பதிவாக இருந்தாலும், மின்கலத்தைக் கண்டறிந்த "அலெஸ்ஸாண்ட்ரோ வோல்டா" (Alessandro Volta)-வின் 270-வது பிறந்த நாளன்று (18.2.2015) அன்று தொடங்குவதில் மகிழ்ச்சியே! (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..!) (உண்மையில் மின்கலத்தை முதலில் கண்டுபிடித்தது வோல்டா தானா? அதுகுறித்து இனிவரும் பதிவுகளில் காணலாம்.)

           அரிகோவின் மறைவிற்குப் பின்னும் ஃபிரிட்ஸின் ஆவி மற்றொரு நல்லவரைத்(!) தேடி அலைந்தது. அப்போது சிக்கியவர், அரிகோவின் சகோதரர் "ஆஸ்கார் வைல்ட்" (Oscar Wilde). (ஆஹா... பக்கத்துலேயே இருந்திருக்கானே பா..!) அவரும் அரிகோவைப் போல கத்தியோடு கிளம்ப, முதலில் தயங்கிய மக்கள், அரிகோவிடம் கண்ட அதே வேகத்தையும், கருணையையும் கண்டு நம்பி, வைத்தியத்திற்கு தங்கள் கைகளை நீட்டினர். (தம்பி... பிஞ்சு கை... பாத்து...!) வரிசையும் நீண்டது. அரிகோவைப் போலவே ஆஸ்காரும் ஃபிரிட்ஸின் ஆவியே தன்னை இவ்வாறு செய்யத் தூண்டுவதாகத் தெரிவித்தார். இவரும் வெகு விரைவில், அரிகோவைப் போலவே ஒரு கோரமான கார் விபத்தில் பலியானார். (ஆத்தி...!!!) இது மீண்டும் அவ்வூர் மக்களை சோகத்தில் தள்ளியது.

           அவரைத் தொடர்ந்து, அரிகோவின் இன்னொரு சகோதரரான "எடிவல்டோ வைல்ட்" (Edivaldo Wilde) கையில் கத்தியோடு புறப்பட்டார். இவருடைய முடிவும் விரைவாகவே நெருங்கியது. இவரும் ஒரு மோசமான கார் விபத்தில் பலியானார். (இவருமா..?!) இவ்வாறாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு ஃபிரிட்ஸின் ஆவி பீடித்ததும், அவர்கள் மூவரும் சொல்லி வைத்தாற்போல் அடுத்தடுத்த கார் விபத்துகளில் பலியானதும் ஊர் மக்களிடையே பீதியையும், ஆச்சர்யத்தையும் ஒருசேர வரவழைத்தது. (ஊருக்கு நல்லது பண்றவங்க கார்ல போறத பாத்திருக்கேன்.. ஆனா இப்படி கார்-ல 'போறவங்க'ள இப்பதான் பாக்குறேன்...!) (இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் அரிகோவால் ஆட்கொள்ளப்பட்டதாகவும், பின் இருவரும் சேர்ந்தே விபத்தை சந்தித்ததாகவும் கூறுவர். எப்படியோ, இருவரும் ஆட்கொள்ளப்பட்டனர்; இருவரும் கார் விபத்தில் இறந்தனர்.)

           அடுத்ததாக ஃபிரிட்ஸால் ஆட்கொள்ளப்பட்டவர், பிரபல மகப்பேறு மருத்துவரான "டாக்டர்.எட்சன் க்யூரோஸ்" (Dr.Edson Queiroz). (அப்பாடா... ஒருவழியா இந்த ஃபிரிட்ஸு ஒரு உண்மையான டாக்டர புடிச்சிட்டாரு பா..!) இவரும் அரிகோவை நினைவூட்டும் வகையில், முரட்டுத்தனத்துடன் கூடிய, நுணுக்கமான பல அறுவை சிகிச்சைகளை செய்தார். இவருடைய முடிவும் மிக விரைவில் நெருங்கியது. (ரைட்டு... நெக்ஸ்ட்டு...!) ஒருநாள், அவரது எதிரி ஒருவன் கத்தியால், எட்சனை சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்தான். (கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு-ங்கறது இதுதானா..?!)

           அதன்பின் "ரூபன்ஸ் ஃபாரியாஸ்" (Rubens Farias) என்பவரை ஆட்கொண்டது. (இப்ப இவர பிடிச்சுது கெட்ட நேரம்...!) கடந்த இருபது வருடங்களாக, டாக்டர்.ஃபிரிட்ஸின் ஆவி இவர்மூலம்தான் மருத்துவசேவை செய்து வருகிறது. பிரேசிலின் பாம் சக்ஸஸோ-வைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரான இவரிடமும் அரிகோவிடம் வந்தது போன்றே மக்கள்கூட்டம் மொய்க்கிறது. இவர் அரிகோவிடமிருந்து சற்றே மாறுபட்டவராக, நவீன உபகரணங்களையும் உபயோகிக்கிறார். (ஆனாலும் ரத்தம் வருவதில்லை!) ஜெர்மன் வாடை வீசும் போர்த்துக்கீசிய மொழியில் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் இவர்மீதும் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. நாளொரு சர்ச்சைகள் கிளம்பினாலும் அதுகுறித்து ரூபன்ஸோ, அவரை நம்பி வரும் மக்களோ பொருட்படுத்துவதில்லை. கூட்டத்தினரின் வரிசை அனுமார் வால்போல் நீண்டுகொண்டுதான் செல்கிறது. (சரி, அனுமாருக்கு வால் எப்டி அவ்ளோ நீளத்துக்கு நீண்டுது..?! அதெல்லாம் உண்மையா..?! அதுகுறித்து எதிர்கால பதிவுகளில்..!) சமீபத்திய பேட்டி ஒன்றில் ரூபன்ஸ் கூறியதாவது, "இப்போது டாக்டர்.ஃபிரிட்ஸின் ஆவி என்னைத்தான் கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. இதுவரை டாக்டர்.ஃபிரிட்ஸ் உபயோகித்த(!) அனைத்து மனிதர்களும் வலிமிகுந்த துர்மரணத்தையே சந்தித்துள்ளனர். நானும்கூட அதற்குத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்." (அதானே பாத்தோம்..! எப்பா... யாருப்பா அங்க, அரிகோ என்கிட்ட ஹெல்ப் கேட்டா சந்தோஷப்படுவேன்-னு சொன்னது...?!) 


(நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் ரூபன்ஸ் ஃபாரியாஸ்)

           சரி, இத்தனைக்கும் காரணமான அந்த ஃபிரிட்ஸ் யார்? அரிகோவே ஒருமுறை ஃபிரிட்ஸ் தன்னைப் பற்றிக் கூறியதாக சொன்ன தகவல்கள் இதோ. (ம்...ஃபிளாஷ்பேக் ஆரம்பம்...!) முதல் உலகப்போரின்போது ஜெர்மானிய இராணுவத்தின் ஜெனரலாகவும், மருத்துவராகவும் பணியாற்றியவர் டாக்டர்.அடால்ஃப் ஃபிரிட்ஸ் (Dr.Adolf Fritz). இவர் 1861-ல் ஜெர்மனியிலுள்ள (Germany) முனிச் (Munich) நகரில் பிறந்தார். இவர் பிறந்த சமயத்தில், இவரது தந்தை ஆஸ்துமாவால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவரை சோதித்த மருத்துவர், நல்ல காலநிலையுள்ள இடத்திற்குப் புலம்பெயர்ந்தால் குணமாக வாய்ப்பிருப்பதாக ஆலோசனை கூறினார். இதன் காரணமாக, 4 வயது நிரம்பிய ஃபிரிட்ஸுடன், அவரது குடும்பம் அருகிலிருந்த போலந்து (Poland) நாட்டிற்குக் குடிபெயர்ந்தது. பின்னர், சில ஆண்டுகளில் ஃபிரிட்ஸின் பெற்றோர் காலமானார்கள். இதன்பின் தனது சொந்த முயற்சியால் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார்.


(ஃபிரிட்ஸின் கற்பனை உருவக ஓவியம்)

           ஒருநாள், ஒரு மோசமான சம்பவம் ஃபிரிட்ஸின் வாழ்வில் நடந்தது. இராணுவ மேஜர் ஒருவர், உடல்நிலை மோசமாக இருந்த தனது மகளை தோளில் சுமந்தவாறு ஃபிரிட்ஸின் வீட்டை அடைந்து, அவளுக்கு முதலுதவி ஏதேனும் அளித்து காப்பாற்றுமாறு வேண்டினார். ஃபிரிட்ஸ் அப்போது இராணுவத்தில் மருத்துவராக இருந்தாலும், அவர் பட்டம் பெற இன்னும் ஒரு மாதம் இருந்தது. ஃபிரிட்ஸ் தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளை மேற்கொண்டபோது, ஏற்கனவே அபாய கட்டத்திலிருந்த அப்பெண் இறந்து போனாள். இதனால் கோபமடைந்த அந்த இராணுவ மேஜர், தனது மகளை ஃபிரிட்ஸ் கொலை செய்துவிட்டதாகக் களேபரம் செய்ததோடு, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஃபிரிட்ஸை சிறையிலடைத்தார். (தானா போற உயிர, தடியால அடிச்சுக் கொன்னுட்டீங்களே அண்ணே..!) சிறையில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டார். தினமும் சொல்லமுடியாத அவலங்களும், சித்ரவதைகளும் அவரை சூழ்ந்தன. இதற்குமேல் அடி, உதைகளைத் தாங்கமுடியாது என வெகுண்டெழுந்தவராய், 1914-ல் சிறையிலிருந்து தப்பிய பின், எஸ்டோனியாவை (Estonia) அடைந்து, அங்கு 1918 வரை வாழ்ந்ததாகவும், டாக்டர்.ஃபிரிட்ஸ் தன்னிடம் கூறியதாக அரிகோ கூறியிருந்தார். (அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து, அரிகோ தெரிவித்ததாகத் தெரியவில்லை.) இவ்வாறாக அரிகோ கூறிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு டாக்டர்.ஃபிரிட்ஸ் என்றொருவர் இருந்தாரா? என ஜெர்மானியக் கோப்புகளிலும், ஆவணங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. ம்ஹும்...ஒரு தகவலும் இல்லை. அப்படியானால், அப்படி ஒரு நபரே இல்லையா? அது அரிகோவின் கற்பனையா? என்றால், அப்படி சொல்வதற்கும் சாத்தியம் இல்லை.ஏனெனில், அவ்வாறு மறுப்பதற்குக் காரணங்கள் பல உண்டு.

           உதாரணத்திற்கு, 'நோயாளிகளிடம் அவர்களின் நோய் பற்றி விசாரிக்காமலேயே எவ்வாறு உங்களால் சிகிச்சையளிக்க முடிகிறது?' என்கிற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, அரிகோ, "நோயாளி என் அருகில் வந்தவுடனேயே, அவருக்கு என்ன நோய், என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்பதை டாக்டர்.ஃபிரிட்ஸ், எனது இடது காதில் கூறுவார் (அல்லது கேட்கும்). நானும் அவர் சொல்வதுபோலவே செய்வேன். (ஏன்?அவரு வலது காதுல சொல்லமாட்டாரா-னுலாம் கேக்கக்கூடாது... ஏன்-னா எனக்கு அதுக்கு பதில் தெரியாது..!) சமயங்களில் கூட்டத்தினரின் இரைச்சலால் அவர் கூறுவது என் காதில் விழாது. அதுபோன்ற சூழ்நிலைகளில்தான் அமைதியாக இருக்கும்படி மக்களிடம் கோபப்படுவேன். எனக்கு ஜெர்மானிய மொழி தெரியாததால், அவர் என்னுடன் போர்ச்சுக்கீசிய மொழியில்தான் உரையாடுவார். சிலர் ஜெர்மன் மொழியில் சந்தேகம் கேட்கும்போது அவர் கூறுவதை நான் கிளிப்பிள்ளை போல, திரும்பக் கூறுவேன். சில முக்கியமான, பிரச்சனைக்குரிய நோயாளிகளை அணுகும்போது மட்டுமே, நான் அவரால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டு சுயநினைவை இழக்கிறேன்." என்றார்.

           ஒரு கற்பனைக் கதாப்பாத்திரத்தை அரிகோவாக உருவாக்கியிருந்தால், அவர் செய்யும் அறுவைசிகிச்சையின்போது ரத்தம் வராத அதிசயம், நோயாளிகளுக்கு வலிக்காத ஆச்சர்யம், அவர்களிடம் நோய் குறித்து ஏதும் கேட்காமலேயே சாதாரண மருந்துகளால் அவர்களின் தீரா நோய்களைத் தீர்த்துவைத்த வினோதம், இத்தனைக்கும் அவர் சல்லிக்காசுகூட வாங்காத அபூர்வம் போன்றவை மர்மங்கள் சூழ்ந்த மர்மங்களாய் வேர்விட்டு நின்றன. எனக்கு இதையெல்லாம் தாண்டி மேலெழுந்த கேள்விகள் என்னவெனில்,

  1. ஏறத்தாழ 1918-லேயே எப்படியும் ஃபிரிட்ஸ் இறந்துவிட்டார். அதே ஆண்டு பிறந்த அரிகோவையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக கண்டுபிடித்து, (அதற்கு முன் ஒருவரை உபயோகித்து, பின் அந்த நபரின் சுயநலம் காரணமாக பிரிந்தாலும்) உபயோகித்துக் கொண்டார். ஆனால், அரிகோவைத் தேர்ந்தெடுக்கும் முன் உலகிலுள்ள அனைவரையும் கண்காணித்துவிட்டுதான் அரிகோவை இறுதியாகத் தேர்ந்தெடுத்ததா, ஃபிரிட்ஸின் ஆவி? 
  2. அரிகோவின் இறப்புக்குப் பின் அவர் வாழ்ந்த அதே பிரேசிலில்தான் நல்லவர்கள் இருந்தார்களா? ஃபிரிட்ஸின் ஆவி என்ன (என்னை விட) சோம்பேறியா? (ஏன், என்கிட்ட "ஃபிரிட்ஸ் என்கிட்ட உதவி கேட்டா நல்லாயிருக்கும்"-னு சொன்ன என் நண்பர்கள் நல்லவங்க இல்லையா...? நீங்க கவலைப்படாதீங்க நண்பர்களே, எப்படியும் ரூபன்ஸுக்கும் மத்த மூணு பேரோட நிலைமை வர வாய்ப்பிருக்கு... அப்டி வந்தா, உங்களில் யார் அடுத்த அரிகோ-னு, ஃபிரிட்ஸ முடிவு பண்ண சொல்லிருவோம்..! அநேகமா அவரோட 'அடுத்த குறி' உங்கள்-ல ஒருத்தரா இருந்தா, உங்கள மாதிரியே நானும் சந்தோஷப்படுவேன்... கண்டிப்பா அவர் என்னைய தேர்ந்தெடுக்க மாட்டாரு... ஏன்னா, நான் நல்லவன்-னு பொய் சொல்ற அளவுக்கு கேட்டவனும் இல்ல, கெட்டவன்-னு உண்மைய ஒத்துக்குற அளவுக்கு நல்லவனும் இல்ல-னு அவருக்கே தெரியும்... அப்டியே வந்தாலும், இப்டி எதாவது பேசி குழப்பிடுவேன்... ஸோ, டோன்ட் வொர்ரி...! உங்களுக்கு எந்த கார்-னு 'சம்பவத்துக்கு' அப்புறம் பதிவு போடுறேன்...!!!)
           இதில் இரண்டாவது கேள்விக்கான பதிலைமட்டும் என்னால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. அதன்படி, எப்படியோ அரிகோவை ஃபிரிட்ஸின் ஆவி தேர்ந்தெடுத்துவிட்டது. அதன்மூலம் அரிகோவின் சுற்றுவட்டாரமும் உலகளவில் பிரபலமடைந்துவிட்டது. திடீரென ரஷ்யாவிலோ, ஜப்பானிலோ நான்தான் இனி அடுத்த அரிகோ என்பதுபோல் யாரேனும் கத்தியைத் தூக்கினால் நம்புவது கடினமாக இருக்க வாய்ப்புகளதிகம். (இப்பவே நம்ப மாட்டேன்குறாங்க...! இந்தியாவுல யாரவது இப்டி கெளம்பியிருந்தா, ஒண்ணு அவர ஜெயில்ல வச்சிருப்பாங்க, இல்லேனா அவர சுத்தி உண்டியல் வச்சிருப்பாங்க..!) ஒருவேளை அவருக்கேற்றவர் அருகில் இருக்கும்போது உலகத்தை முழுவதும் சுற்றுவதற்கு சற்று யோசித்திருக்கலாம்.

           இங்கு அரிகோ கண்ட கனவைப் பற்றி விளக்கியாகவேண்டும். அவர் தான் விரைவில் மரணிக்கப்போவதாகவும், அதற்கு அறிகுறியாக கனவில் கருப்பு சிலுவையும் ஒரு சம்பவமும் வருவதாகக் கூறியிருந்தார். கனவில் வரும் அச்சம்பவம் பற்றி அரிகோ கூறியதாக, நமது கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது, "நண்பர் ஒருவர் எனது காரை (இரவல்) வாங்கிச் செல்கிறார். அக்கார் ஒரு பெரும் பள்ளத்தில் தலைகீழாய் உருண்டு விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகிறது. ஆனால், அக்காரை ஓட்டிச்சென்ற நண்பர் எவ்வித காயமுமின்றி தப்பிவிட்டார்." நாம் கனவு பற்றிய பதிவுகளைப் பார்த்தபோது, "கனவுகள் மறைமுகமாகவும் சில விஷயங்களை உணர்த்தும்" என்பது குறித்துப் பார்த்திருந்தோம். அதன்படி, அரிகோவின் கனவில் வந்த கார், அரிகோவின் உடலாகவும், அதை ஓட்டிச்சென்ற நண்பர், டாக்டர்.ஃபிரிட்ஸாகவும் இருக்க வாய்ப்புள்ளது (கனவின் இலக்கணப்படி).

           இதுபோன்ற ஆவிகள், இத்யாதிகள் மூலம்தான் இத்தகைய சக்தி பெற்று சராசரி மனிதர்கள் அற்புதம் நிகழ்த்த முடியுமா? வேறு ஏதேனும் வழிகளுண்டா? இவரைப்போல் வேறு அமானுஷ்ய மனிதர்கள் இருக்கிறார்களா? என்று பார்த்தால், பட்டியல் நீள்கிறது. அவர்களுள், இத்தகைய வரலாற்றில் தவிர்க்க முடியாத, என்னை ஈர்த்தவர்களுள் ஒருவரான ஒரு அமானுஷ்ய நபரைப்பற்றி அடுத்த பதிவில் காண்போம். அரிகோவாவது நோயாளிகளை மருத்துவ முறைகளால் குணப்படுத்தினார் (அறுவைசிகிச்சை, மருந்து எழுதித்தருதல் போன்று). ஆனால் நாம் அடுத்து காண இருக்கும் நபர், நோயாளிகளை தொடாமலேயே குணப்படுத்தியவர். யார் அவர்? ["மார்வெல்" (Marvel) வரிசை ஹாலிவுட் (Hollywood) படங்களில், அடுத்த பாகத்தின் துவக்கத்தை முந்தைய பாகத்தின் இறுதியில் காட்டி விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிற வைப்பார்கள். அதுபோல், இந்த பதிவின் முதல் அடுத்த பதிவின் மையக்கருவின் மங்கலான புகைப்படம் பதிவின் இறுதியில் இணைத்தே பதிவிடலாம் என விரும்புகிறேன். அதன் துவக்கமாக, அடுத்த பதிவில் காண இருக்கும் நபரின் மங்கலான புகைப்படம், இதோ.இதைத் தொடரவா, அல்லது முன்னர் செய்ததுபோல் அடுத்த பதிவை ரகசியமாக வைக்கவா, என்பது குறித்து வாசகர்கள் கீழேயுள்ள கருத்துப் பகுதியில் குறிப்பிடவும்.] அவரைக் காண காத்திருங்கள்.



அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.


{ஒரு கொசுறுத் தகவல். ஃபிரிட்ஸ் சிறையிலிருந்து தப்பி புகலிடம் சேர்ந்த எஸ்டோனியா, ஐரோப்பாவிலுள்ள ஒரு சிறு நாடு. இங்கு வாழும் மக்கள் பேசும் மொழி, "எஸ்டோனியன்" (Estonian). சமூக வலைத்தளமான ட்விட்டரின் (Twitter) புரிதல்படி, தமிழின் (Tamil) இன்னொரு பெயர் "எஸ்டோனியன்"...! அதேபோல், எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது. அரிகோ, பார்ப்பதற்கு ஒரு அயல் நாட்டவரைப் போலவே தோன்றவில்லை; ஒரு இந்தியரின் முக சாயலில்தான் தோற்றமளிக்கிறார்...!}


(இப்பதிவிற்காக, தனது மடிக்கணினியை கொடுத்து உதவிய எனது நண்பன் திரு.பாலாஜி -க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.) - அயலான்.


ரூபன்ஸ் ஃபாரியாஸ் குறித்த காணொளிக்கு, காண்க:


துணை நின்ற நூல்கள்:
  1. அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள் - குன்றில் குமார்.
  2. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - முகில்.

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

Wednesday 4 February 2015

25.) அமானுஷ்ய அறுவை சிகிச்சையாளர் - அரிகோ...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருந்த ஒரு அமானுஷ்ய மனிதரைப் பற்றி இப்பதிவில் காண்போம். அம்மனிதர், தென்னமெரிக்காவிலுள்ள பிரேசிலில் அமைந்துள்ள காங்கோனாய் டு காம்போ / காங்கோன்ஹாஸ் (Congonhas) எனும் சிற்றூரில் அன்டோனியோ டி ஃபிரைடாஸுக்கு (Antonio de Freitas) எட்டு குழந்தைகளில் ஒருவராக 1918-ல் அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த, "ஜோஸ் பெட்ரோ டி ஃபிரைடாஸ்" (José Pedro de Freitas). ஜோஸுடன் பிறந்த ஏழு பேரும் வழக்கறிஞர், பேராசிரியர், பாதிரியார் என சமுதாயத்தில் பிறர் மதிக்கும் பதவிகளிலும், பலவாறான பணிகளிலும் இருந்தனர். ஆனால், ஜோஸுக்கு படிப்பில் பிடிப்பில்லாததால் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின்னர் வயல் வேலைக்குச் சென்றார். அதன்பின் அவ்வூருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த இரும்புச் சுரங்கத்தில், படிக்காத சிறுவர்களோடு சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். ஜோஸ் பார்ப்பதற்கு சற்று குண்டாகவும், பலசாலியாகவும் தோற்றமளித்ததால் 'பூசணிக்காய்' எனப் பொருள் படுமாறு "அரிகோ" (Arigo) என செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர். நாளடைவில் ஜோஸுமே தனது உண்மையான பெயரை மறக்குமளவிற்கு, 'அரிகோ' என்கிற பெயரே நிலைத்தது. (பட்டப்பேரு-னு வச்சாலே அப்டித்தானே...) அரிகோ பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பிரகாசமான ஒளிவட்டம் அவரது மனக்கண்ணில் தோன்றியது. (சத்தியமா, அது பறக்கும் தட்டு இல்ல மக்களே..!) அத்துடன் அவருக்குப் புரியாத மொழியில் ஒரு அசிரீரியும் கேட்டது. இவ்விஷயத்தை தனது நண்பர்களிடம் பலமுறை அரிகோ வியப்புடன் கூறியதுண்டு. இவ்வாறான சம்பவங்கள் அவரது வாழ்வில் அவ்வப்போது நடந்தேறின. சிலநாட்கள் அவை அரிகோவின் மனதில் நிழலாடும், பின்னர் மறந்து போகும். அச்சமயம் சுரங்கத்தொழிற்சங்கத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றிருந்த அரிகோ, 1943-ம் ஆண்டு "அர்லடே அண்ட்ரோ" (Ar-lade And-roe) என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். இந்நிலையில் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு போராட்டம் காரணமாக பதவிநீக்கம் செய்யப்பட்டார். பின் ஒரு உணவகத்துடன் கூடிய விடுதியைத் துவங்கினார். பிரேசிலின் அலயாடினோ சிற்பங்களைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள், அவ்விடுதியில் தங்க ஆரம்பித்தனர். வியாபாரம் ஓரளவிற்கு பரவாயில்லை என சொல்லுமளவிற்கு சென்றது. அக்காலகட்டத்தில் கனவுத்தொல்லை மீண்டும் பாடாய்ப்படுத்தியது. அந்த புரியாத பாஷை, ஜெர்மன் மொழி என்பதைக் கண்டறிந்தார்; ஆனால், அது என்ன சொல்கிறது என்பது மட்டும் விளங்கவே இல்லை.


(ஜோஸ் பெட்ரோ டி ஃபிரைடாஸ் என்கிற அரிகோ)

          இவ்வாறான தொடர்க் கனவுத்துரத்தல், அரிகோவிற்கு தலைவலியை உண்டாக்கியது. அதிலிருந்து தப்புவதற்கு, இரவில் தூங்காமல் விழித்திருக்கத் தொடங்கினார், மனைவிக்குத் தெரியாமல். அவர் மனைவி பார்க்கும்போது கண்களை மூடி பாவனை செய்பவர், மனைவி தூங்கிய பின்னர் எழுந்து தெருவில் நடக்கத் தொடங்கினார். அது தலைவலியை மேலும் தீவிரப்படுத்தியது. ஒரு நாள் படுக்கையில் அமர்ந்து நள்ளிரவில் குலுங்கிக் குலுங்கி அழுவதைக் கவனித்த அரிகோவின் மனைவி அர்லடே, விவரங்களனைத்தையும் கேட்டறிந்தார்; ஆறுதல் கூறினார். (வேற என்ன பண்ண முடியும்..!) ஆனால், அன்று அவர் கண்ட கனவானது, கனவு என்று அவர் நம்ப முடியாத அளவிற்குத் தத்ரூபமாக இருந்தது. அதில், அரிகோ ஒரு மருத்துவமனையின் அறுவைசிகிச்சைக்கான அறையினுள் நுழைகிறார். அங்கு அறுவை சிகிச்சைக்கான மேடையில் ஒருவர் படுத்துக்கிடக்க, அவரைச் சுற்றிலும் வெள்ளை உடை தரித்த மருத்துவர்களும் செவிலியர்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்களுள் சற்றுக் கொழு கொழுவென வழுக்கைத்தலையுடன் புரியாத ஏதோ ஒரு மொழியில் மற்ற மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த, தலைமை மருத்துவரையொத்த ஒரு மருத்துவரின் குரலானது, அரிகோ தன் கனவில் வழக்கமாகக் கேட்கும் அசிரீரியின் குரல் போன்றே இருந்தது; அத்தோடு அவர் பேசிய புரியாத மொழியும். அப்படியானால், இத்தனை நாட்கள் அரிகோவை படுத்தியெடுத்த 'கனவு நாயகன்', அந்த மருத்துவர் தானா? 'ஆம்' எனில், அவர் யார்? ஏன் அரிகோவைத் துரத்த வேண்டும்? அதற்கான பதிலும் அரிகோவிற்கு சில நாட்கள் கழித்து வந்த கனவில் கிடைத்தது.


(அரிகோ கனவில் கண்ட காட்சியின் கற்பனை ஓவியம்)

          அன்றொரு நாள் கனவில் வந்த அதே மருத்துவர், தனது பெயர் "அடால்ஃபோ ஃபிரிட்ஸ்" (Adolfo Fritz) என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் தான் முதல் உலகப்போரின்போது பணியாற்றிய ஜெர்மானிய அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும், அப்போரில் தான் அகால மரணமடைந்ததால், தனது மருத்துவ சேவையை தொடரமுடியாமல் போனதாகவும், தான் அரிகோவின் நல்ல உள்ளத்தையும், பிறருக்கு உதவும் பரந்த மனப்பான்மையையும் பல வருடங்களாகக் கவனித்து வருவதாகவும், தனது மருத்துவ சேவையை மேலும் தொடர அரிகோவின் உடலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். (என்னப்பா இப்டி கெளம்பிட்டீங்க..?!) இதற்கு முன்னர் இன்னொருவரின் உடலை, தான் பயன்படுத்தியதாகவும், ஆனால், அவர் அதைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அதன்பின் வேறொருவரைத் தேடி அலைந்தபோது அரிகோவைப் பார்த்ததாகவும் தெரிவித்தார். (பிரமாதம்-ல...!) இவ்வாறு ஃபிரிட்ஸ், அரிகோவின் கனவில் இவ்விவரங்களைத் தெரிவிப்பதற்கு முன்னர், அரிகோ தனது நண்பர்களிடம் யோசனை கேட்டிருந்தார். அவர்கள், 'இது ஏதோ ஆவிகளின் செயல்பாடு போல் இருக்கிறது, பேயோட்டும் ஆலிவராவைப் (Olivera) போய்ப் பார்' என அறிவுறுத்த, அங்கே சென்று ஆலிவராவிடம் விஷயத்தைக்கூறினார். கண்களைத்திறக்காமலேயே, 'அது ஒரு மருத்துவரின் ஆவி. அது உன் உடலில் புக முயற்சிக்கிறது. அதற்கு நீ உடன்படும் வரை, அது உன்னைப் படுத்தியெடுக்கும்.' என முடித்தார் ஆலிவரா. உள்ளூர உதறல் இருந்தாலும் அதுநாள்வரையிலான குழப்பத்தின் தீர்வு ஒருவழியாகக் கிடைத்திருந்தது. காரணம், அதற்கு முன் அவர் சந்தித்த பாதிரியார்களோ, "கர்த்தர் உனக்குத்துணையிருப்பார், கலங்காதே" என்றே சொல்லி அனுப்பினர். சமீபத்தியக் கனவு, ஆலிவராவின் சொல்லை மெய்ப்பித்தது. அரிகோவிற்கு மனதுள் பயம் இருந்தாலும், மக்களுக்கு நன்மை பயக்கும் சேவை என்பதால், சற்று யோசித்தார்; குறிப்பாக நிராகரிக்க மனம் வரவில்லை. அதுகுறித்து அரிகோ திடமான முடிவு எடுக்கும் முன்  ஃபிரிட்ஸ் முந்திக்கொண்டார்.

           அவ்வூரில் கால் ஊனமான ஒருவன், கைத்தடி உதவியுடன் நடந்து வருவான். இது அவ்வூரில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு ஒருநாள் அவன் நடந்து வருவதை பார்த்த அரிகோ, அவர் உடலில் ஏதோ ஒருவித மர்மமான மாற்றத்தை உணர்ந்தவராய் நேரே அவனை நோக்கி நடந்தார். அவனது கைப்பிடியைப் பிடுங்கித் தூரமாக எறிந்தார். "இதுநாள்வரை நீ விந்தி விந்தி நடந்தது போதும், எல்லோரையும் போல சாதாரணமாக நட" என்றார், சற்று மூர்க்கமான குரலில். ஒன்றும் புரியாதவனாய் ஒரு வித பயத்துடன், எதிர்த்துப் பேசக்கூட நா எழாதவனாய் நடக்க ஆரம்பித்தான். ஆச்சர்யம்! அவனது நடை எல்லோரையும் போல சாதாரணமாக மாறியிருந்தது. அரிகோவே இதைக்கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனார். இங்கு அரிகோவே ஆச்சரியப்படக் காரணம், இதை அவராகவே செய்யவில்லை என்பதால். இதுவே அரிகோவைப் பயன்படுத்தி, ஃபிரிட்ஸ் நிகழ்த்திய முதல் அதிசயம் அல்லது அமானுஷ்யம். இதன்பின் ஊர் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட அரிகோவை மேலும் புகழடைய வைத்தது ஒரு சம்பவம்.

            அவரது உறவுக்காரப் பெண்ணொருவர், கர்ப்பப்பைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, மரணத்தருவாயிலிருந்தார். உறவினர்கள் அவரது வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்வதும் வருவதுமாய் இருந்தனர்; அவர்களைப்போலவே அரிகோவும் தன் மனைவியுடன் சென்றார்.  அங்கே ஒரு பாதிரியார் அப்பெண்ணுக்கான இறுதிநேர சடங்குகளில் ஈடுபட்டிருக்க, சுற்றிலும் சிலர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஜெபித்துக்கொண்டிருந்த அரிகோவிற்கு உடலில் ஏதோ ஓர் மாற்றம். ஒரு அதிசய உணர்வலைகளால் தாக்கப்பட்டவராய், சட்டென எழுந்து அவ்வீட்டின் சமையலறையினுள் நுழைந்த அரிகோ, கையில் சமையலறையிலிருந்த சிறு கத்தியுடன் வெளியில் வந்து அப்பெண்ணை நெருங்கினார். சுற்றியிருந்தவர்கள் ஒரு மிரட்சியுடன் அரிகோவை நோக்க, அப்பெண்ணின் துணியை விலக்கி, பிறப்புறுப்பில் கத்தியை நுழைத்தார்; கத்தி உள்ளே நுழைய ஏதுவாக சுற்றியிருந்த சதைப்பகுதிகளை வெட்டி நீக்கி பாதைகளை அகலப்படுத்தியவாறு கைகளை முன்னேற்றிக்கொண்டிருந்தார். அரிகோவின் இம்முரட்டுத்தனமான செய்கையைப் பார்த்த சுற்றியிருந்தவர்கள் கதிகலங்கிப் போயினர்; சிலர் பரபரப்பாகக் கத்தத் தொடங்கினர்; ஒரு பெண் இதைக் காண சகிக்காமல் அழுது அரற்றியவாறு தெருவிற்கு ஓடினார். ஆனால், அரிகோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை, தனது செயலில் மும்முரமாக இருந்தார். சில நொடிகளில் கத்தியை வெளியே எடுத்து, கைகளை உள்ளே விட்டு முரட்டுத்தனமாக ஏதோ துழாவினார். உள்ளிருந்து ரத்தம் சொட்ட சொட்ட (புற்றுநோய்க்) கட்டி ஒன்றை எடுத்து சமையலறை சாக்கடையில் கொண்டுபோய்ப் போட்டார். பின்னர் அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து போய், தன்னிலை இழந்தவராய் அமர்ந்தார். இத்தனைக்கும் அப்பெண்மணி அழவோ, முகம் சுழிக்கவோ இல்லை; சுயநினைவுடன் இருந்தார் என்பது சுற்றியிருந்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மேலும், கட்டியை எடுத்தபோது சிறிதாக வந்த ரத்தத்தைத் தவிர வேறு ரத்தக்கசிவும் வரவில்லை. இவை அனைத்தும் சில வினாடிகளில் முடிந்து விட்டது. கூட்டத்திலிருந்த உறவுக்காரப் பையன் ஒருவன் பயந்து போய் மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தான். அப்பெண்ணின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், அப்பெண்ணிற்கு இப்போது பிரச்சனை ஏதும் இல்லை என்றும், வழக்கமான சினிமா மருத்துவரைப் போல, 'தனது அனுபவத்தில் இப்படி ஒரு அதிசயத்தைக் கண்டதில்லை' என்றும் கூறினார். காரணம் அவ்வாறான கட்டியை அறுவைசிகிச்சை மூலமாக மட்டுமே எடுக்க முடியும், அரிகோ செய்ததைப்போல செய்வதற்கு வாய்ப்பே இல்லை. அரிகோ அப்போதும் சுயநினைவிற்குத் திரும்பவில்லை. அருகில் அவரது  மனைவி அர்லடே தேம்பிக்கொண்டிருந்தார். சமையலறை சாக்கடைக்குச் சென்று அங்கு கிடந்த புற்றுநோய்க் கட்டியை ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துக்கொண்டார், பரிசோதனைக்காக. சில தினங்களில் அப்பெண்ணும் பூரண குணமடைந்து விட்டார், அரிகோவின் புகழும் பரவத்தொடங்கியது.

           அச்சம்பவத்தின் மறுநாள், காலை வீட்டு வாசலைத்திறந்தபோது அரிகோவின் வீட்டு முன் நீ...ண்...ட வரிசை. (ஒரு படத்துல, கவுண்டமணி சார் வீட்டு முன்னாடி பேர் வைக்க சொல்லி ஒரு வரிசை நிக்குமே, அந்த மாதிரி..!) விவரத்தைக் கேட்டார் அரிகோ. "எங்கள் நோயை நீங்கள்தான் குணப்படுத்தவேண்டும்" என்றனர் ஒருமித்த குரலில். அதன்பின் நடந்த எதுவும் அரிகோவிற்குத் தெரியாது. முழுவதுமாக ஃபிரிட்சின் கட்டுப்பாட்டில் வந்திருந்தார் அரிகோ. ஒவ்வொருவரையும் வரிசையாக வரச் சொன்னார். யாரிடமும் என்ன நோய் என்பது குறித்து விசாரிக்கவே இல்லை. சமையலறைக் கத்தியையும். கத்தரிக்கோலையும் வைத்து ஓரிரு வினாடிகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அனாவசிய ரத்தப் போக்குகள் இல்லை, கத்தி நோயாளிகளின் உடலைத் துளைக்கும்போது அவர்களுக்கு வலிக்கவும் இல்லை, அறுவை சிகிச்சை செய்த கத்திகளை அவர் வெந்நீரில் சுத்தம் செய்யவும் இல்லை. ஆனால் நோய் மட்டும் அனைவருக்கும் குணமாகிக் கொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் மருந்துகளை சீட்டில் எழுதிக்கொடுத்த அரிகோ, தன் வாழ்நாளில் ஒருவரிடமும் மருத்துவத்திற்காக பணம் வாங்கியதில்லை. (பொருளாகவும் வாங்கியதில்லை.) இவ்வாறான இவரது இலவச, வலியில்லா, உடனடி மருத்துவம் அவ்வூரின் பிற மருத்துவர்களிடத்தில் எரிச்சலை வரவழைத்தது.


(அறுவை சிகிச்சை செய்யும் அரிகோ)
             
            அச்சமயம் இவரால் நிகழ்ந்த ஒரு அற்புதம், ஊரளவில் புகழ் பெற்றிருந்த அரிகோவை, நாடு முழுவதும் பிரபலமாக்கியது. சுமார் 5 ஆண்டுகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த பிரேசில், 1950-ம் ஆண்டில் ஜனநாயக முறைக்குத் திரும்பியிருந்தது. தேர்தல் காய்ச்சல் பரவியிருந்த சமயத்தில், பிரேசிலின் நாடாளுமன்ற உறுப்பினரான லூசியோ பிட்டன் கோர்ட் (Lucio Bitten Court) , மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாயிருந்தார். அதேசமயம், நாட்டின் அதிபர் பதவிக்கு ஜெடுலியோ வர்காஸ் (Getulio Vargas) என்பவரும் போட்டியிட்டார். இருவரும் ஒரே அணிக்காக. எனவே, இருவரது சார்பிலும் தேர்தலின் பொருட்டு வாக்கு சேகரிக்க ஒவ்வொரு ஊராக சென்றபோது, அரிகோவின் ஊரையும் அடைந்தார். அவ்வூரில் சுரங்கத் தொழிலாளர்கள் அதிகமென்பதால், தொழிற்சங்கத் தலைவரின் ஆதரவு அரசியலில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத்தரும் என்கிற அரசியல் யுக்தியோடு அரிகோவைப் பார்க்கச் சென்றார். அத்தோடு அரிகோவின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரையும் நேரில் சென்று சந்தித்து, ஆதரவு வேண்டினார். அரிகோவும் அதற்கு சம்மதிக்க, பக்கத்து நகரமான ஹாரிசாண்டேவில் (Horizonte) பெரிய பேரணி நடத்த ஏற்பாடானது. அரிகோவும், அப்பேரணியில் பங்கேற்க பெரும் தொழிலாளர் படையுடன் அந்நகரை அடைந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அப்பேரணி மறுநாள் நடத்தப்படுமெனத் தீர்மானிக்கப் பட்டதால், அந்நகரின் அபோன்சா பெனா (Afonso Pena) எனும் தெருவிலிருந்த பலமாடிகள் கொண்ட விடுதி ஒன்றின், ஐந்தாவது மாடியில் பிட்டன் கோர்ட்டுக்கும், அரிகோவிற்கும் அறை ஒதுக்கப்பட்டது. அவ்விடுதியில் மின்னுயர்த்தி (Lift) வசதிகள் இருந்தன. அரிகோவிற்கு மின்னுயர்த்திகள் என்றாலே ஒருவித ஒவ்வாமை. ("தி டாவின்சி கோட்" படத்தில், அப்படத்தின் கதாநாயகனான ராபர்ட் லேங்க்டனுக்கு ஏற்படும் ஏறத்தாழ அதே வகையான உணர்வு. இதுவும் ஒருவகை 'க்ளஸ்ட்ரோஃபோபியா'வா (Claustrophobia*) எனத் தெரியவில்லை.) எனவே அரிகோ தரைத்தளத்திலேயே அறையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். பிட்டன் கோர்ட் தனது அறையில் அலைச்சலின் விளைவாய் கண்ணயர்ந்தார்.


(ஜெடுலியோ வர்காஸ்)

            தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன், பிட்டன் கோர்ட், தனது சொந்த ஊரான ரியோ-டி-ஜெனிரோ-வில் (Rio de Janeiro) தனது குடும்ப மருத்துவரை அணுகி, முழு உடல் பரிசோதனை செய்ததில், நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அறிந்தார். இருப்பினும், தேர்தல் சமயத்தில் வைத்தியத்திற்கு நேரம் ஒதுக்கினால் வெற்றி கைநழுவிவிடுமென உணர்ந்த பிட்டன் கோர்ட், 'இவ்வலட்சியம் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்' என்ற மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும், இதுகுறித்து அரிகோவிடம், பிட்டன் கோர்ட் மூச்சு விடவில்லை; தேர்தல் வேலைகளிலேயே மும்முரமாயிருந்தார். (அப்புறம் அரிகோ, அவர்பாட்டுக்கு கத்திய விட்டு கிண்டிட்டார்னா...! தேர்தல் நேரம் வேற...) அவ்வாறு அலைந்த களைப்பினில், படுக்கையில் சாய்ந்ததும் உறங்கிவிட்டார்.

          திடீரென பிட்டன் கோர்ட்டின் அறைக்கதவை யாரோ திறந்து, மின்விளக்குகளைப் போடுவதுபோல் இருந்தது. அரைத்தூக்கத்தில் மெல்ல கண் விழித்தார் பிட்டன் கோர்ட், அங்கே அரிகோ கையில் சவரக்கத்தியுடன் அவரை நெருங்குவது தெரிந்தது. இருந்தாலும், தூக்கக் கலக்கம் அவரை முழுதாகக் கண்விழிக்க முடியாமல் செய்தது; பிட்டன் கோர்ட்டும் அதைக் கனவு என்றே நம்பினார். "பிட்டன் கோர்ட், உங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் நேரம் வந்துவிட்டது" என கரடுமுரடான, அதிகாரம் மிக்க ஜெர்மானிய தொனியில் பேச, பிட்டன் கோர்ட்டுக்குக் கலக்கமாக இருந்தாலும், அதெல்லாம் கனவு என்றே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார். இருப்பினும், அரிகோவின் கண்களில் பிட்டன் கோர்ட் கண்ட பளபளப்பும், தீவிரமும் பிட்டன் கோர்ட்டை சிந்திக்க வைத்தது. 'அரிகோ நம் அறைக்கு ஏன் வந்தார், அதுவும் இந்நேரத்தில், நம் அனுமதியின்றி?' என பலவாறாகக் குழம்ப, மயக்கமுற்றார் பிட்டன் கோர்ட். விடிந்தது. கண்விழித்த பிட்டன் கோர்ட் தன் அறையில் மின்விளக்குகள் எரிவதைக் கண்டார். இரவில் அவற்றை அணைத்துவிட்டுப் படுத்தது நன்கு நினைவிருந்தது. அரிகோ கனவு நினைவில் வர, கண்ணாடியின் முன்னால் சென்று சட்டையைக் கழற்றினார். அதில் சிறிதாக ரத்தக்கறை படிந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.  (ஆஹா... நம்பி படுத்தேனே... நெனச்ச மாதிரியே உள்ள கத்திய விட்டு கிண்டிட்டனே...!) மேலும் நன்றாகப் பார்த்தபோது அவரின் விலாவைச் சுற்றிலும் கிழிக்கப்பட்டிருப்பதும், அதிலிருந்து கசிந்த ரத்தம் காய்ந்திருப்பதும் தெரிந்தது. (இது அவனேதான் பா... எங்க அவன்..?!) வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தரைத்தளத்தை அடைந்து அரிகோவின் அறைக்கதவைத் தட்டினார். ஒன்றுமே தெரியாதவராய் கதவைத் திறந்த அரிகோவிடம், நடந்ததை விவரிக்க, சத்தியம் செய்யாத குறையாக மறுத்தார் அரிகோ. பொறுமையிழந்த பிட்டன்கோர்ட் நம்பிக்கையற்றவராய் விமானத்தில் தனது குடும்ப மருத்துவரை சந்திக்க ரியோவிற்குப் பறந்தார். (உள்ளுக்குள்ள என்னென்ன கேபிள கட் பண்ணிருக்கான்னு தெரியலியே..!) அவர் சென்றதும் அரிகோ தனது பெட்டியிலிருந்த சவரக் கத்தியை எடுத்துப் பார்த்தார்; அதில் ரத்தக்கறை எதுவும் இல்லை. பின்னர் ஏன் பிட்டன் கோர்ட் அவ்வாறு கூறினார் என விடைதெரியாதவராய் தனது வீட்டிற்குத் திரும்பினார். வீட்டிற்கு வந்தபின்பும் பிட்டன் கோர்ட்டின் பயம் அரிகோவின் மனதில் எதிரொலித்தது. 'அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவருக்கு தன்னால் ஏதும் ஏடாகூடமாகிவிட்டால்?' உடம்பு உதறல் எடுத்தது.

          அங்கே, பிட்டன் கோர்ட்டின் எக்ஸ்ரே (X-Ray) முடிவுகளைப் பார்த்த மருத்துவர் அசந்து போனார். அதுவரை பிரேசிலில் அறிமுகப்படுத்தப்படாத ஒரு புதிய முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அத்தோடு பிட்டன் கோர்ட்டின் நுரையீரல் புற்றுநோயும் முற்றிலும் நீங்கியிருந்தது; இனி பிட்டன் கோர்ட் நீடூழி வாழலாம். சந்தோஷத்தின் உச்சத்தைத் தொட்ட பிட்டன் கோர்ட், முதல் வேலையாக அரிகோவிற்கு நடந்தவற்றை தந்தி அனுப்பினார். பின் அரிகோவின் இச்சாதனையை பத்திரிக்கைகளிலும், தான் செல்லும் இடங்களனைத்திலும் புகழ்ந்து தள்ளி அரிகோவை அண்டை நாடுவரை பிரபலமாக்கினார். விளைவு, வெளிநாட்டிலிருந்தும் நோயாளிகள் அரிகோவின் வீட்டை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். தினமும் குறைந்தது நூறு நோயாளிகளையாவது அரிகோ கையாளவேண்டியிருந்தது.

          வழக்கமான அதே வேகமான சேவைகள். யாரிடமும் என்ன நோய் என்று கேட்பதில்லை, அறுவை சிகிச்சைக்கு உட்படும் யாரும் வலியை உணர்வதில்லை, அதிக ரத்தப்போக்கு இல்லை. ஆனால் இது அனைத்தையும் தாண்டிய ஒரு விந்தை என்னவெனில், அவர் செய்யும் சிகிச்சைக்கும், எழுதித்தரும் மருந்திற்கும் சம்பந்தமே இருக்காது. உதாரணத்திற்கு, கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவருக்கு, பி-காம்ப்ளக்ஸ் (B-Complex) மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்; சிலருக்கு அரதப் பழைய மருந்துகளை எழுதித் தருவார். இதன் காரணமாகவே, சில மருந்துகளை பிரத்தியேகமாக இறக்குமதி செய்து விற்பனை செய்தனர், மருந்துக் கடைக்காரர்கள். அவர் எழுதித்தந்த பெரும்பாலான மாத்திரைகள் ஜெர்மெனியில் தயாரானவை என பின்னாளில் அறியப்பட்டது.

          ஒருநாள் 'ஜோஸ் நிலோ டி அலிவைரோ' (Jose Nilo De Aliviro) என்றழைக்கப்படும், 48 வயதான அரசாங்க எழுத்தர், தனது இடது கண்ணில் கண்புரை போன்ற ஒருவித படலம் உருவாவதால், கண் பார்வை மங்குவதை அறிந்து மருத்துவர்களை நாடினார். அவர்களோ அது நன்கு பழுத்த பின்னர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய இயலும் எனக் கூறிவிட்டனர். அப்போது அரிகோவைப் பற்றிக் கேட்டறிந்த அலிவைரோ, அவரைப் பார்க்க ஆவல் கொண்டாலும் அவரது சிகிச்சைமுறைகள் கிறிஸ்தவ சபைக்கு எதிரானதாக உள்ளதாக பாதிரியார்கள் பலர் பகிரங்கமாக அரிகோவைப் பற்றி குற்றம் சாட்டுவதால், சற்றுத் தயங்கினார். இந்நிலையில், அரிகோவிடம் சில திருச்சபைப் பாதிரியார்களும் கூட ரகசியமாக வைத்தியம் செய்துகொள்வதை அறிந்த அலிவைரோ (அடங்கோ...!), தைரியமாக அரிகோவைச் சந்தித்தார். அரிகோவைப் போன்றே, அலிவைரோவிற்கும் பட்டப்பெயர் இருந்தது. அது 'கருப்பன்' எனப் பொருள்படும், "அல்டிமீரோ" (ஆனால், இவர் கறுப்பினத்தவர் இல்லை!).

          மறுநாள் காலை மைல் நீள வரிசையில் வாலைப்பிடித்து நின்றவராய் மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருந்தார். அதுவரை அரிகோவைப் பற்றி வாய்வழியாய்க் கேள்விப்பட்டிருந்தவர், இன்று அவரது அதிவேக செயல்களை நேரில் கண்டு ஆச்சர்யமுற்றார். இவரது முறை வந்தது, பயில்வான் போல அமர்ந்திருந்த அரிகோவின் கை அருகே அழைக்க, பரீட்சைப் பேப்பரை வாங்க ஆசிரியரை நெருங்கும் மாணவனைப் போல நடுக்கத்துடன் நெருங்கினார் அல்டிமீரோ. முரட்டுத்தனமாய்ப் பிடித்து இழுத்து, சுவற்றில் சாய வைத்து சமையலறைக் கத்தியை அல்டிமீரோவின் இடது கண்ணில் விட்டார். சுருக்கென குண்டூசி குத்தியதைப்போல மெலிதான வலி, ஏனோ அப்போது அல்டிமீரோ பயப்படவும் இல்லை. அடுத்த நொடி, அரிகோவின் கையில் ஜவ்வு போன்ற ஒரு திரவம் இருந்தது. அவ்வளவுதான், "நீங்கள் போகலாம். கடவுள் உங்களுக்கு வழிக்காட்டுவார்" என அடுத்த நோயாளியை அருகில் அழைத்தார் அரிகோ. அல்டிமீரோவிற்கு சொல்லவியலா ஆச்சர்யம். அந்த ஜவ்வுப்படலம் பழுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை; கண்ணாடி அணியத் தேவை இல்லை; அறுவை சிகிச்சை இல்லை; வலி இல்லை; கட்டணமும் இல்லை. 


(சிகிச்சை பெறும் அல்டிமீரோ)

          இதன்பின் அரிகோ மீது முழுமையான நம்பிக்கை கொண்ட அல்டிமீரோ, மருத்துவர்களால் குணப்படுத்த இயலாது என கைவிரிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் புற்றுநோய்க் கட்டியுடன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருந்த தனது மாமாவை அரிகோவிடம் அழைத்துவந்தார். வழக்கம்போல, வயிற்றைக் கிழித்து கட்டியை அகற்றும்போது, வழக்கத்திற்கு மாறான ரத்தப்போக்கு ஏற்பட, அதிர்ந்துபோனார் அல்டிமீரோ. ஆனால் அரிகோ, மேற்கூரையை நோக்கியவாறு, "ரத்தம் வரக்கூடாது என ஏசு சொல்கிறார்" என உரக்கக் கத்த, ரத்தம் வருவது நின்றது. பின், "டாக்டர்.ஃபிரிட்ஸ், தயவு செய்து அவரது வயிற்றை மூடிவிடுங்கள்" என அரிகோ கூற, அரிகோவினுள் இருந்த ஃபிரிட்ஸ் தலையசைத்தவாரே பஞ்சால் கிழித்த இடத்தைத் துடைக்க அவை ஒட்டிக்கொண்டன. தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கும் அரிகோவை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அல்டிமீரோ (என்னடா நடக்குது இந்த நாட்டுல..?!). பின் அரிகோவை நேரில் சந்தித்து, தானும் அவரோடு இணைந்து, அவரது உதவியாளராக மக்களுக்கு (சம்பளம் வாங்காமல்) சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவிக்க, சம்மதித்தார் அரிகோ.

          வழக்கம்போல வரிசையில் ஒழுங்காக நிற்குமாறு வாசலில் நின்றவர்களை அதட்டியவாரே சிகிச்சை செய்துகொண்டிருந்த அரிகோ, ஒரு நோயாளிக்கு மருந்து எழுத பேனாவைக் கையில் எடுத்தபோது அது அப்படியே அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது. இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு. சற்றே வரிசையை ஏறிட்ட அரிகோ, அதில் ஒருவனை தனியே அழைத்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்து தாழிட்டார். "நீ போலீஸ்காரன் தானே. நான் வைத்தியம் செய்வதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எனது மருந்துச் சீட்டைக் கொண்டு போய் நீதிமன்றத்தில் காட்ட இருக்கிறாய். அப்படித்தானே?!" வெலவெலத்துப் போனார் மாறுவேடத்தில் வந்திருந்த அந்த போலீஸ்காரர். அரிகோவே மேலும் தொடர்ந்தார். "சமீப காலங்களாக நீ உனது குடும்பத்தினரை கவனிப்பதில்லையமே? முதலில் குடும்பத்தைக் கவனி, பிறகுதான் எல்லாம்" என மருந்துச்சீட்டில் ஏதோ ஒன்றை எழுதி அப்போலீஸ்காரரின் கையில் திணித்துவிட்டு, அறையிலிருந்து வெளியேறினார். அதைப் பிரித்துப் பார்த்த போலீஸ்காரரின் முகம் அவமானத்தால் சுருங்கியது. அதில், "தினசரி பைபிள் படி. காலை, பகல், மாலை 3 வேளையும் தவறாமல் படி" என எழுதியிருந்தது. (இதுதான் அவரு எழுதித் தந்த மருந்துச்சீட்டுனு எவன்ட்ட சொன்னாலும் நம்பமாட்டானுங்களே...!) அப்போதைய சூழ்நிலையில், இவரைப் போலி மருத்துவர் என அவ்வூர் மருத்துவர்களும், திருச்சபைக்கு எதிரானவர், துஷ்ட ஆவிகளுடன் தொடர்புடையவர் என கிறிஸ்தவ பாதிரியார்களும் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். அதன் சார்பாகவே அப்போலீஸ்காரர் அங்கு வந்திருந்தார். இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் அரிகோவின் புகழொளி குன்றவில்லை. அவரது புகழின் உச்சமாக, பிரேசிலில் இன்றளவும் மதிக்கப்படும், அந்நாட்டின் அப்போதைய அதிபரான "ஜுசேலினோ குபிட்ஷேக்" (Juscelino Kubitschek), தனது மகளின் சிறுநீரகத்தில் இருந்த கட்டியை, பிரபல அமெரிக்க மருத்துவர்களால் குணப்படுத்த இயலாது என்கிற நிலையில், அரிகோவிடம் அழைத்து வந்து வழக்கமான அறுவைசிகிச்சையின் உதவியால் குணமாக்கிச் சென்றார். இது அரிகோவின் எதிரிகளின் வயிற்றில் எரியும் நெருப்பில் பெட்ரோல் வார்த்தது. அரிகோவின் மருத்துவமனையில் (!) பாரபட்சம் கிடையாது, யாராக இருந்தாலும் அவரின் முறை வரும்வரை வரிசையில் காத்திருக்க வேண்டும்; குபிட்ஷேக் உட்பட!


(ஜுசேலினோ குபிட்ஷேக்)


(அமெரிக்க அதிபர் கென்னடியுடன், பிரேசில் அதிபர் குபிட்ஷேக் [வலது])


(குபிட்ஷேக்கைப் பெருமைப்படுத்த பிரேசில் வெளியிட்ட ரூபாய் நோட்டும், தபால் தலையும்)
[கலர் ஜெராக்ஸ் எடுத்துடாதீங்க நல்லவங்களே...!]


          பின்னொருநாள், அந்நாட்டு பிரபல பத்திரிக்கையான 'காப்ரியேல் காட்டர்' (Gabriel Catter)-ன் நிருபர் அரிகோவைப் பேட்டியெடுக்க வந்திருந்தார். ஆனால், அன்று அரிகோவின் முகம் சற்று வாட்டமாயிருப்பதையறிந்த நிருபர், காரணம் கேட்டார். அதற்கு அரிகோ, தனது மனக்கண்ணில் கருப்பு சிலுவை தெரிவதாகவும், அது அவ்வாறு தோன்றும்போதெல்லாம், தனக்கு நெருக்கமானவர்கள் உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்தார். மறுநாள் காலை, தினசரிகளில் தலைப்புச்செய்தியாக வந்திருந்தது, அரிகோவை உலகறியச் செய்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிட்டன் கோர்ட்டின் மரணம். நொறுங்கிப் போனார் அரிகோ, இருந்தாலும், மருத்துவச் சேவையை விடவில்லை.


(அரிகோவின் மனக்கண்ணில் தோன்றிய, கருப்பு சிலுவையின் கற்பனை உருவகம்)

         இருக்கிற பிரச்சனைகள் போதாதென்று, இன்னொரு பிரச்சனையும் வந்தது. அதாவது, அரிகோவின் அதிசய அறுவை சிகிச்சையை ஆராய்ச்சிக்குட்படுத்தவேண்டுமென மருத்துவ விஞ்ஞானிகள் பலர் தீர்மானித்து, அரிகோ நிச்சயம் நோயாளிகளை, "ஹிப்னாட்டிசம்" (Hypnotism) எனப்படும் மனோவசியம் (இது குறித்த விரிவான பதிவுகள் விரைவில்) மூலம் வசியம் செய்தபின்னரே அறுவை சிகிச்சை செய்கிறார்; அதனால்தான் நோயாளிகள் வலியை உணர்வதில்லை என முடிவெடுத்தவர்களாய், "ஆரா" (Aura) என்றொரு ஆய்வுக்குழு அமைப்பை நாடினர். மனித உடலைச்சுற்றி 'ஆரா' எனப்படும் கண்களுக்குப் புலப்படா ஒளிவட்டம் இருப்பதாக நம்பும் இவர்கள், அதன் மின்சக்தியைக் கண்டறியும் நுண்ணிய கருவியை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். (இது குறித்த விரிவான பதிவுகள் விரைவில்) ஒரு கண்புரை நோயாளியை மனோவசியப்படுத்தி, அவரது கண்களுக்குள் கத்தியை நுழைக்க முயல, அந்த நபர் "ஐயோ அம்மா" என விழுந்தடித்து ஓடினார். கடைசியில், மனோவசியம்தான் அந்த அதிசயங்களுக்குக் காரணம் என முடிவெடுத்தவர்களுக்கு, முடிவில் ஒரு முடி கூட கிடைக்கவில்லை. அதன்பின் இப்பிரச்சனை ஓய்ந்தது.

         பின்னர், டாக்டர்.ஜோஸ் ஹார்டன்சியா டி மடியராஸ், (Jose Hardensia de Madiaross) (ப்பா...எத்தன ஜோஸு...!!!) என்கிற இதயநோய் வல்லுநர், தனது நண்பரின் மனைவிக்கு, குடலில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டிருந்தது. அதன்பின் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில், அப்பெண்ணுக்கு இருந்தது புற்றுநோய்க் கட்டி என்றும், அது அவரது குடல் முழுவதும் பரவ ஆரம்பித்திருந்தது. மருத்துவர்களும், இனி எவ்வளவு உயரிய சிகிச்சை அளித்தாலும், பிழைக்க வைக்க இயலாது என கை விரித்து விட்டனர். அப்பெண்மணியை, அரிகோவின் புகழைப் பற்றி அறிந்து, அரிகோவிடம் தனி விமானம் மூலம் அழைத்து வந்தார், மடியராஸ். அப்பெண்மணியின் கணவனான, மடியராசின் நண்பர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவராதலால், ஜெர்மானிய மொழியில் சந்தேகங்களைக் கேட்க, அரிகோவும் அதற்கு ஜெர்மானிய மொழியிலேயே பதிலளித்தார். இதைக்கண்ட மடியராஸுக்கு உள்ளூர வியப்பு. மின்னல் வேகத்தில் அரிகோவின் கண்கள் இயங்கின. விறுவிறுவென அவரது விரல்கள் மருந்துச்சீட்டில் சில மருந்துகளை எழுதின. (இப்பெண்மணிக்கு, அரிகோ அறுவை சிகிச்சை செய்யவில்லை) "இந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிடு. குணமாகிவிடும்" என்று கூறிவிட்டு அடுத்த நோயாளியைக் கவனிக்க ஆரம்பித்தார். 'அம்மருந்துச் சீட்டை அல்டிமீரோவிடம் காட்டுங்கள்' என யாரோ கூற, அவர்களும் அவ்வாறே தந்ததும், அல்டிமீரோ அம்மருந்துகளை அழகாகத் தட்டச்சு செய்து, சாப்பிடும் முறையை விளக்கி அனுப்பினார்.

         விமானத்தில் இருப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது மடியராஸ், அரிகோவின் மருந்துச்சீட்டைப் பார்வையிட்டார்; குழம்பிப்போனார், ஒரு மருத்துவராக. காரணம், அதில் எழுதப்பட்டிருந்த மருந்துகள். அவை,
  • நியூரோபின்,
    1. இது பிரேசிலில் தயாரிக்கப் படுகிறது.
    2. இது ஒரு வைட்டமின் பி-12 மாத்திரை.
  • கானாமைசின்,
    1. இது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.
    2. ரியோவில் (சிறப்பு அனுமதியோடு) தயாரிக்கப்படுகிறது.
    3. உடலில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், குடல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகவும் பயன்படுகிறது.
  • ஓலோபின்டின்,
    1. இது ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது; ரியோவில் தயாரிக்கப்படுகிறது.
    2. ஊசிமூலம் ஏற்றக்கூடிய மருந்து.
    3. துர்நாற்றம் சம்பந்தப்பட்ட சுவாசப்  பிரச்சனைகளுக்கும், நுரையீரல் அழுகல் போன்ற கோளாறுகளைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
    4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • டெக்ஸ்டாசைன், 
                     இம்மருந்துகுறித்து மடியராஸுக்கு எந்த ஒரு அபிப்ராயமும் இல்லை. ஏனெனில், இப்படி ஒரு மருந்தை அவர் கேள்விப்பட்டதும் இல்லை; அதன் பயன்கள் என்னவென்றும் தெரியாது. இத்தகைய சாதாரண மருந்துகள் பரவிக்கிடக்கும் புற்றுநோயை குணமாக்கும் என அவருக்குத் துளியும் நம்பிக்கையில்லை. (இத சாப்பிட்டா எப்டிடா புற்றுநோய் குணமாகும்.?! என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு...!!!) பின்குறிப்பில், மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்ளவேண்டுமென குறிப்பிட்டிருந்தார். இது மடியராஸுக்கு மேலும் அதிருப்தியைத் தந்தது. இருந்தாலும், 'எத்தனையோ செலவு செய்தாகிவிட்டது, இந்த சாதாரண மருந்துகள் வாங்கியா குடி முழுகிவிடும்!' என்கிற நம்பிக்கையில், அரிகோ மருந்துச்சீட்டில் பின்குறிப்பிட்டிருந்தவாறே செய்தனர். ஆனால், ஒருவாரத்திலேயே அப்பெண், ஆச்சர்யப்படத்தக்கவகையில் நடமாடத் தொடங்கினார்; எடையும் கணிசமாக அதிகரித்திருந்தது, இத்தகைய அசாத்தியங்களை நேரில் கண்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார் மடியராஸ். அடுத்த முறை பரிசோதனைக்கு அப்பெண்ணை அழைத்துச்செல்லும்போது, மடியராஸும் அரிகோவின் அடுத்த கட்ட சோதனைகளை அறியும் ஆவலுடன், வலிய உடன்வந்தார். அப்பெண்மணி உடலில் தனியாக பை ஒன்று, மலம் வெளியேறுவதற்காக இணைக்கப்பட்டிருந்தது. அவற்றை அகற்றலாமா என்பது குறித்து வினவ, அரிகோ பதில் ஏதும் கூறாமல், "இப்பெண்ணின் கண்டம் தீர்ந்து போயிற்று" என்றவாறு, சிறுநீரகக் கோளாறுக்கான மருந்தை எழுதிக் கொடுத்தார். மூன்றாவது முறை வரும்போது, தனது சந்தேகத்தை மடியராஸ் முன்வைக்க, அகற்றலாம் என்றார் அரிகோ. அதற்கான அறுவை சிகிச்சையை சாவ்-பாவ்லோ (Sao-Paulo) நகரின் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் நடைபெற்றது. (இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். ஏன், இந்த அறுவை சிகிச்சையையும் அரிகோவே செய்திருக்கலாமே என்று. அதற்குக் காரணம், ஒன்று, அரிகோ மற்ற அபாய கட்டத்திலுள்ள பல நோயாளிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இரண்டு, அப்பெண்மணி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார். இனி அவருக்கு அரிகோதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.) பிரேசிலின் தலைசிறந்த மருத்துவர் ஒருவர் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அந்த விபரீத எண்ணம் தோன்றியது. அவர்கள் அரிகோவிடம் சிகிச்சை பெற்றதை அறிந்திருந்த மருத்துவர், அப்பெண்ணின் குடல் பகுதியில் அப்புற்றுநோயின் தற்சமய நிலையை அறிய விரல்களை அத்திசையில் திருப்பினார்; ஆச்சர்யத்தில் அதிர்ந்துபோனார். உள்ளே புற்றுநோயின் அறிகுறியே இல்லை; தொல்லை தராத தசைநார்க் குவியல்கள் மட்டுமே காணப்பட்டன. ஏறத்தாழ 11 மாதங்களுக்குப் பின், அப்பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என சொல்லமுடியாத அளவிற்கு, உடல் நலம் தேறியிருந்தார்.

         அரிகோவின் அறுவை சிகிச்சை மர்மத்தைக் கண்டறிய அடுத்ததாக (ஆகஸ்ட் மாதம் 1963-ல்) மூவர் குழுவுடன் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியவர், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு முடித்த, அறிவியலுக்கு அப்பாற்பட்ட உளவியல் விஷயங்களில் (Parapsychology) ஆர்வமுடைய, "ஆண்ட்ரிஜா புகாரிச்" (Andrija Puharich). அரிகோவும் அவரது ஆய்வுக்கு சம்மதிக்க, தினமும் புகைப்படங்களும் காணோளிகளுமாக எடுத்துத் தள்ளினர். ம்ஹும், ஏமாற்றுவேலை என எதையும் கண்டுபிக்க இயலவில்லை. இறுதியில், புகாரிச் தன்னையே பணயம் வைக்கத் துணிந்தார். தனது வலது முழங்கையின் அருகே இருந்த ஒரு கட்டியை அரிகோவிடம் காட்ட, அங்கிருந்தவர்களுள் ஒருவரிடம் பேனாகத்தி ஒன்றை வாங்கி, சட்டைக் கையை மடக்கிவிடச் சொல்லி, கத்தியை நுழைத்தார். சிறு பதட்டத்துடன், வலிக்குமோ என்கிற சந்தேகத்தோடு கண்களை மூடிய புகாரிச், வலி துளியும் இல்லாததால் கண் திறந்தார். கட்டி நீக்கப்பட்டிருந்தது, அவ்விடத்தில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டிருந்தார் அரிகோ. புகாரிச்சுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. காணோளிகளுடனும், புகைப்படங்களுடனும் அமெரிக்காவிற்குச் சென்று பத்திரிகைகளில் அரிகோவைப் புகழ்ந்து தள்ளினார். பின்னாளில், இவரது தகவல்களின் அடிப்படையில், ஜான் ஃபுல்லர் (John Fuller) என்பவர், "அரிகோ: துருப்பிடித்த கத்தி அறுவை சிகிச்சையாளர்" (Arigo: Surgeon of the rusty knife) என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.


(அரிகோவுடன் புகாரிச்)


(அரிகோ குறித்த புத்தகம்)


(போப் இரண்டாம் ஜான் பால் உடன் புகாரிச்)


         அரிகோவின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க அவருக்கு பிரச்சனைகளும் அதிகரித்தது. மருத்துவ சங்கங்கள், கிறிஸ்தவ சபை, அரிகோவின் புகழை வெறுப்பவர்கள் என்ற பட்டியலில் புதியதாய் வந்தது ஒரு தலைவலி. 'எனக்குள்ளேயும் ஒரு மருத்துவர் புகுந்துவிட்டார், என்னிடம் சிகிச்சைக்கு வாருங்கள்' என ஒரு கும்பல், இது அரிகோ அண்ணனின் ஆசிபெற்ற வைத்திய சாலை (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) என்கிற பாணியில் ஒரு கும்பல் என அவ்வூர் ஆவியுலக நம்பிக்கையாளர்கள் கையில் கத்தியை எடுக்க, ஊரார் ஓட்டம் பிடித்தனர். (உன் ஜாலிக்கு, நாங்க கோலியா...?! நீ ஆபரேஷன் பண்ணிப் பழகுறதுக்கு நாங்களா கெடச்சோம்…!) எல்லாவற்றுக்கும் மேல், பிரேசில் நாட்டுக் குற்றவியல் சட்டம் 284-ம் பிரிவின்படி, 'ஆவிகள் மூலம் வைத்தியம் செய்வது குற்றம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அரிகோ மீது (நோயாளிகளாக, மருத்துவர்களாகவோ வியாபாரிகளாகவோ அல்ல) பாதிக்கப்பட்டவர்கள் என்று யாரும் வழக்கு தொடராததால் இதை அரசு பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இவ்வாறான விபரீதங்கள் சமூக அமைதியைக் குலைக்கவும், இறுதியில், 'இவரால்தான் எல்லாம் விளைந்தது' என அரிகோ மீது பழி போட்டு, குற்றவாளிக் கூண்டில் ஏற்றினர். இதற்கு முன்னரும் ஒருமுறை (1956-ல்) நீதிமன்றத்தில் 'இவர் போலி மருத்துவர்' எனக் குற்றம் சாட்டப்பட்டபோது, தானாக எதுவும் செய்யவில்லை என்றும், ஃபிரிட்ஸ் என்பவரின் ஆவிதான் தன்னை இவ்வாறு செய்விப்பதாகவும் தெரிவிக்க, அது நம்பும்படி இல்லை என நீதிபதி தரப்பு மறுத்தது. ('சார். நீங்க பெரிய மனுஷன். நீங்களே இங்க வந்து உங்க கையக் குடுங்க, நான் ஆபரேஷன் பண்ணிக் காட்டுறேன், அப்பறம் நீங்களே சொல்லுங்க'-னு அப்போ அரிகோ சொல்லாமப் போயிட்டாரு...!) 15 மாத சிறையும், 5000 பிரேசிலிய  பணம் அபராதமும் விதித்தது. ஆனால், அப்போது, அப்போதைய அதிபர் குபிட்ஷேக்கின் தலையீட்டாலும், முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் அழுத்தத்தாலும் 8 மாத தண்டனையாகக் குறைத்ததுடன், அரிகோ தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு ஆலோசனை சொல்லலாமேயன்றி, அறுவை சிகிச்சை செய்யக்கூடாது; அதன்படி ஒருவருட காலம் நடந்துகொண்டால், தண்டனை ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்து அனுப்பபட்டிருந்தார். சில காலம், கத்தியைத் தொடாமல் இருந்த அரிகோவை ஃபிரிட்சின் குரலும், நோயாளிகளின் துயரமும் துரத்த, கத்தியை மீண்டும் கையிலெடுத்தார். விளைவு, இப்போது மீண்டும் அதே கூண்டில்.



(முதன்முதலில் தண்டனை விதித்தபோது)

          இம்முறை குபிட்ஷேக்கின் செல்வாக்கு, பலதரப்பட்ட நெருக்கடியின் காரணமாக எடுபடாமல் போனது. பில்லி சூனியம், செய்வினை போன்ற சட்ட விரோத செயல்கள் செய்ததாகக் கூறி 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். ஊரே திரண்டு நின்று நீதிமன்ற வளாகத்திலும், அரிகோவின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தினர். "அவர் எங்ககிட்ட காசே வாங்குனது இல்ல. அவரு போலி மருத்துவரா?", "எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம வைத்தியம் பாத்தது பில்லி சூனியமா?" மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் இல்லை. போராட்டத்தின் விளைவால், அரிகோவை சிறைக்கு அழைத்துச் செல்ல காவல்துறை தயங்கியது. நிலைமையை உணர்ந்த அரிகோ, தானாகவே காவல்துறையினரின் வாகனத்தில் ஏறி, சிறைக்குச் செல்ல பணித்தார் அரிகோ. சிறையின் தலைமைக் காவலர், அரிகோவின் புகழை உணர்ந்தவராய், பாழடைந்த சிறையில் இருக்கவேண்டாம் எனவும், சிறைக்கு மிக அருகாமையிலுள்ள விடுதியில், காவல்துறையின் கண்காணிப்பில் தங்கியிருக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதனை மறுத்த அரிகோ, தானாகவே சிறைக்குள் சென்றார். அரிகோவை சிறைப்படுத்தியத்தில் மக்களுக்கு மட்டுமல்ல, சிறைக்காவலர்களுக்கும் மனமில்லை. வெளியில் நடக்கும் பிரச்சனைகளைக் கவனித்த சில கைதிகள், 'சாப்பாடு சரியில்லை' எனக் கலவரம் செய்தனர்; அதில் சிலர் சிறையிலிருந்தும் தப்பினர். ஆனால் அரிகோவோ, சாப்பாடு நன்றாக இருப்பதாகக்கூறி சிறைக்கைதிகளை சமாதானப்படுத்தினார். கலவரத்தில் சேதமான பொருட்களை, பலகைகளை வரவழைத்தும், வர்ணங்கள் பூசியும் புதுப்பித்தார். அரிகோவைப்பார்த்து சிறைக்கைதிகளும் மேம்பாட்டிற்கு உதவினர்.

          அதுவரை சுமூகமாகவே இருந்தது, அரிகோவின் வாழ்க்கை. கைதி ஒருவர் தனது முதுகில் ஒரு கட்டி இருப்பதாகவும், அதை அனுமதி அளித்தால் அரிகோவிடம் சென்று காட்டி சிகிச்சை பெறுவதாகவும், சிறைக்காவலாளியிடம் மன்றாடினார். வேறுவழியின்றி அனுமதிக்க, வரிசை கட்ட ஆரம்பித்தது சிறையினுள் கைதிகளின் வரிசை. உள்ளே இருக்கும் கூட்டம் போதாதென்று, சிறைக்கு வெளியில் மக்கள் வேறு வரிசை கட்டினர். (சுகர் வந்தவன், பிபி வந்தவன், பக்கவாதம் வந்தவன், இவங்க எல்லாம் கைதிங்க... இவங்கள வச்சு ஜெய்லருங்க சண்ட செய்ய....!!!) கூட்டம் கூடிய செய்தி கேட்டு பத்திரிக்கையாளர்கள் படையெடுத்தனர். நிர்வாக இடைஞ்சலையும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு, நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்வதாக 1965-ம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள், நீதிமன்றம் அரிகொவை விடுதலை செய்தது.

           இதற்கிடையில் 1965-ல் மீண்டும் அரிகோவை சந்திக்க வந்த புகாரிச், மேலும் சில ஆவணகளைத் திரட்டி அமெரிக்காவிலுள்ள மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களிடமும், மனநல நிபுணர்களிடமும், ஆவியுலக தொடர்பாளர்களிடமும் போட்டுக்காட்டினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மிகபெரிய மருத்துவமனையான ரூஸ்வெல்டின், உளவியல் துறை இயக்குனராகப் பணியாற்றிய ராபர்ட் லெயிட்லா (Robert Laidlaw), அரிகோவின் அறுவைசிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வண்ணப்படங்களையும், காணோளிகளையும் நுணுக்கமாக ஆராய்ந்ததன் அடிப்படையில், ஒரு நீண்ட ஆய்வறிக்கை தயாரித்திருந்தார். அதில், அரிகோ அறுவை சிகிச்சை செய்யும்போது அவரது முகம் ஏதோ ஒருவித மந்திரக்கட்டுக்கு உட்பட்டவாறு மாறுவதாகவும், அவரது கைகள் அசாத்திய வேகத்துடனும், அவரது விரல்கள் நம்பவியலாத அளவிற்கு இலகுவாகவும், தீர்க்கமாகவும் இயங்குவதாகத் தெரிவித்தார். இது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களுக்கும் அப்பாற்ப்பட்ட திறன் என்பது ராபர்டின் கருத்து. மேலும், ரத்தம் வழியாதது, காயம் விரைவில் குணமாவது, கழுவாத கத்திகள் மனித உடலை புண்ணாகாமல் விட்டுவிடும் அதிசயம் போன்ற இயற்கைக்கு முரணான விஷயங்கள் மேலும் வியப்பளிப்பதாகவும் தெரிவித்தார். மொத்தத்தில் அரிகோ ஒரு மர்மமான, சக்தி நிரம்பிய மனிதர் என முடித்தார். அரிகோவை வைத்து, புகாரிச் செய்த சோதனைகளும் இதே முடிவையே தந்தன.


(சோதனையின்போது அரிகோ)

          இரண்டாவதாக நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தபின், அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கியிருந்த குபிட்ஷேக், இன்னொரு தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது சொந்த நாடான பிரேசிலுக்குத் திரும்பியிருந்தார். அரிகோ தற்போது அவரது வீட்டில் இருப்பதை அறிந்து, அங்கே சென்று அரிகோவைச் சந்தித்தார். நீண்டநேரம் உரையாடல்கள் தொடர்ந்தன. இரவு நெருங்கியதும், அரிகோவுடன் மேலும் நிறைய பேச ஆசை இருந்தாலும், அரிகோவின் மருத்துவப் பணிகளுக்கு இடையூறாக இருக்க விரும்பாததால், கிளம்பினார். ஆனால் அரிகோ, குபிட்ஷேக்கைப் பிரிய மனமின்றி இருந்தார். அவரின் முகத்தில் இனம்புரியாக் கவலை வேர்விட்டிருப்பதையுணர்ந்த குபிட்ஷேக் காரணம் கேட்டார். சற்றே தயக்கத்துடன், தனக்கு விரைவில் ஒரு விபத்தின்மூலம் மரணம் எற்படப்போவதாகத் தெரிவித்தார் அரிகோ. அதிர்ந்து போனார் அரிகோ. குபிட்ஷேக் "என்ன சொல்கிறீர்கள் அரிகோ?" என்றார் அச்சத்துடன். "ஆம். எனது கனவில் கருப்பு சிலுவை ஒன்று அடிக்கடி வருகிறது. அது என்னைசுற்றி நடக்கவிருக்கும் துர்சம்பவத்தின் அறிகுறி. என் கனவில், எனது நண்பர் ஒருவர் எனது காரை (இரவல்) வாங்கிச் செல்கிறார். அக்கார் ஒரு பெரும் பள்ளத்தில் தலைகீழாய் உருண்டு விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகிறது. ஆனால் அக்காரை ஓட்டிச்சென்ற நண்பர் எவ்வித காயமுமின்றி தப்பிவிட்டார்" என்றார் அரிகோ. இவற்றையெல்லாம் கேட்டு உறைந்துபோய் நின்றிருந்த குபிட்ஷேக், "இது எதைக் குறிக்கிறது?" என்றார் தழுதழுத்தக் குரலில். "நிச்சயம் எனது முடிவைத்தான்" என்றார் அரிகோ, அமைதியாக. அவரின் இந்த தீர்க்கதரிசனமும் விரைவில் உண்மையாய் அமைந்தது என்பது மேலும் ஆச்சர்யம்.

          1971-ம் ஆண்டு, ஜனவரி 11-ம் நாள், வழக்கம்போல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அரிகோவின் அபிமானிகள், நாடுமுழுவதும் நிதி திரட்டி அதில் அவருக்காக ஒரு மருத்துவமனை கட்டியிருந்தனர். மாலை 3 மணிக்கு திறப்புவிழா. அங்கு புதிய காரில் செல்லவேண்டுமெனவும், அதற்கு முன் தனது அன்றாடப் பணிகளை முடிக்கவேண்டுமெனவும் தனது சகாக்களிடம் தெரிவித்தார். மதிய உணவை முடிக்க வீட்டிற்கு சென்ற போது திடீரென பலத்த மழை பெய்தது. நண்பகலுக்குப் பின்னரே மழை ஓய்ந்தது. தனது மனைவி அர்லடேயிடம் விடைபெற்றுக்கொண்டு, தனது 20 வயது மகனான ரிபெரியோவை (Reberio) உச்சி முகர்ந்து, புதிய கார் வாங்குவதற்காக, பக்கத்துக்கு ஊரான லஃபாய்டே-க்கு, தன் நண்பனுடன் தனது ஒபெல் (Opel) காரில் ஊருக்கு வெளிப்புறமான  பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, பி.ஆர்.135 தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தார். (ஒத்துக்குறேன்...பெரிய வாக்கியம் தான்..!) மழை மீண்டும் பிடித்திருந்தது. சுமார் 3 கி.மீ. தூரம் கடந்தபோது வரும் ஒரு மறைவான அபாய திருப்பத்தில், வழக்கமாக வண்டியின் வேகத்தைக் குறைப்பார் அரிகோ. ஆனால் அன்று மாலை 3 மணிக்குள் காரை வாங்கிவிட்டு திரும்பவேண்டுமென்பதால் (கட்டிடத் திறப்புவிழா, நோயாளிகள் காத்துக்கொண்டிருப்பார்கள்), வேகத்தைக் குறைக்கவில்லை. அப்போது எதிரே வந்த ஒரு டிரக்கை முதலில் அரிகோ கவனிக்கவில்லை. பின்னர் கவனித்து பிரேக்கை அழுத்தியபோது, சாலையில் தேங்கியிருந்த நீரில் அவரது கார் பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்று டிரக்கின் மீது நேருக்கு நேராக மோதியது. இரண்டும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டுப்பாட்டை இழந்து, மோதிய வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. கார் கதவுகள் திறந்துகொண்டதால், அரிகோவின் பாதி உடல் உள்ளேயும், பாதி உடல் வெளியேயுமாய் மாட்டிக்கொள்ள, கார் உருண்ட சாலையில், அரிகோவின் சதைகள் உரசிச் சென்றிருந்தன; கால்கள் காரினுள் முறுகிய நிலையில் காணப்பட்டன; எஃகுக் கம்பியொன்று ஈட்டியைப் போல் மார்பைத் துளைத்திருக்க, மார்பிலும் தலையிலும் நிறைய காயங்களோடு, கதவுகள் திறந்த நிலையில் இருந்த காரில் , பாதி உடல் உள்ளேயும், பாதி உடல் வெளியேயுமாய் ரத்தவெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார். (அவரின் நண்பரும் இறந்திருந்தார் என்றே தெரிகிறது.) எந்தவொரு நோயாளிக்கும் வலியைக் காட்டாதவர், பயங்கர வேதனைகளை அனுபவித்தவராய் இறந்து கிடந்தார்.

        "அய்யய்யோ....அரிகோ செத்துப் போயிட்டாராம்...!!!" என தகவலைக் கேள்வியுற்ற மக்கள், தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினர். அரசு அன்று பொதுவிடுமுறை அறிவித்தது; 2 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனவும் தெரிவித்தது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குழுமினர். சுமார் 20,000 பேர் இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்றனர். பிரேசிலின் அழுகை காதில் விழாதவராய், டாக்டர்.ஃபிரிட்சின் கனவுத் தொல்லையின்றி, நிம்மதியாகக் கல்லறையில் உறங்கிக் கொண்டிருந்தார், 'அரிகோ' என்கிற 'ஜோஸ் பெட்ரோ டி ஃபிரைடாஸ்'. 'இத்தனைக்கும் காரணமான அந்த டாக்டர்.ஃபிரிட்ஸ் யார்?', 'அரிகோ இறந்த பின், ஃபிரிட்சின் ஆவி எங்கு போனது?' இன்னும் அதிக கேள்விகளோடு காத்திருங்கள் அடுத்த பதிவு வரை.

அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.


[Claustrophobia - நான்கு சுவற்றுக்குள்ளோ, மின்னுயர்த்தி அல்லது அறை போன்ற இடத்திலோ, கதவுகளை மூடும்போது, 'இனி தப்பிக்க வழியே இல்லை; இதனுள் மூச்சுமுட்டி சாகப் போகிறோம்' என்பது போன்று தோன்றும் ஒரு வித பயம். ('தி டாவின்சி கோட்' திரைப்படத்தில் டாம் ஹேங்ஸும், 'ஆனந்தபுரத்து வீடு' திரைப்படத்தில் சாயாசிங்கும் இத்தகு நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக நடித்திருப்பர்.)]

(இன்னும் எனது மடிக்கணினியின் முடக்கத்தை நீக்க இயலவில்லை. இருந்தாலும், இது எனது 25வது (வெள்ளி விழா) பதிப்பு. உங்களை இரண்டு பதிவுகள் காத்திருக்க வைத்துவிட்டேன். மன்னிக்கவும். எனது நிலைமை அவ்வாறு இருக்கிறது. 25-வது  பதிவு என்பதாலும், கடந்த பதிவு இட இயலாத காரணத்தாலும், மிக நீண்ட பதிவை இட்டிருக்கிறேன். தங்களின் காத்திருப்பினால் ஏற்பட்ட கோபம், வருத்தம் ஏக்கம் போன்றவை தணியும் என்றே நம்புகிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம். இப்பதிவிற்காக, தனது கணினியை கொடுத்து உதவிய திரு.கார்த்திக் செல்வம் அண்ணனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.) - அயலான்.


அரிகோ குறித்த காணொளிக்கு, காண்க:
http://www.youtube.com/watch?v=4BX6WTL88j4


துணை நின்ற நூல்கள்:

  1. அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள் - குன்றில் குமார்.
  2. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - முகில்.

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:
http://weird-people.com/arigo-psychic-surgeon/
http://en.wikipedia.org/wiki/Z%C3%A9_Arig%C3%B3
http://en.wikipedia.org/wiki/Psychic_surgery
http://en.wikipedia.org/wiki/Get%C3%BAlio_Vargas