Sunday 12 March 2017

29.) கணிதமும், கணியமும் ...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

   தொன்றுதொட்டு நமது பதிவில் வழங்கி வருவதைப் போல, விட்டதிலிருந்தே தொடங்குவோம். அதற்கு முன்னர், நமது ரஸ்புடினின் பதிவில் அறிமுகமாகி, சென்ற பதிவில் லேசாகத் தலைகாட்டிச் சென்ற, செய்ரோ (Cheiro)-வைப் பற்றிப் பார்ப்போம்.



(செய்ரோ)

               1866-ல், அயர்லாந்தின் டுப்ளின் (Dublin, Ireland) நகரை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த வில்லியம் ஜான் வார்னர் (William John Warner) தான், பின்னாளில் உலகம் வியந்த ஜோதிடர் செய்ரோவாக உருவெடுத்தார். உண்மையில் செய்ரோ என்பது அவரது செல்லப்பெயர். இது, கைரேகை ஜோதிடத்தைக் குறிக்கும் 'செய்ரோமேன்சி' (Cheiromancy) எனும் சொல்லிலிருந்து வந்தது. அத்தகைய ஜோதிட மாமேதையை உருவாக்கிய நாடு, முற்காலத்தில் "கடவுளரின் பூமி" என்றழைக்கப்பட்ட நமது இந்தியாதான்..!


        தனது 17-வது வயதில், படிப்பதற்காக இந்தியா வந்த செய்ரோ, கல்லூரியில் சேராமல், மும்பையில் இருந்த, வேத கால ஜோதிடத்தில் பண்டித்துவம் பெற்ற, நாராயண் ஜோஷி (Narayan Joshi) என்பவரிடம் சீடராகச் சேர்ந்தார். அவரிடம் ஜோதிடம் குறித்த சகலத்தையும் சிறந்த முறையில் கற்று மேதைமை பெற்றதோடு, இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து, பல பண்டிதர்களையும் ரிஷிகளையும் சந்தித்து, பல்வேறு நுணுக்கங்களைக் கற்று, தன்னை ஜோதிடத் துறையில்  மேலும் மெருகேற்றினார். (நாராயண் ஜோஷியிடம் ஜோதிடம் பயின்றபோது, ஜோஷி கற்பிக்கப் பயன்படுத்திய நூல், மனித தோலினால் உருவாக்கப்பட்டிருந்ததாக செய்ரோ குறிப்பிட்டிருக்கிறார்...!)

               வெறும் மூன்றாண்டு காலப் பயிற்சிகள்தான், இருப்பினும், லண்டனில் தனது ஜோதிடத் தொழிலைத் துவங்கியபோது, உலகமே அவரது துல்லியமான கணிப்புகளைக்கண்டு வியந்தது. செய்ரோவிற்கென ஆதரவாளர்கள் படை குவியும்போதே, அவரைத் துருவித் துருவி ஆராய ஒரு பட்டாளமே தயாராகக் காத்திருந்தது. 1893-ல் செய்ரோ அமெரிக்கா வந்தபோது, 'நியூயார்க் வேர்ல்ட்' (Newyork World) பத்திரிக்கையைச் சேர்ந்த 'ஃபிஷர்' (Fisher) எனும் நிருபரின் தலைமையிலான ஒரு குழு, செய்ரோவிடம் ஏழு கைரேகைகளை நீட்டி அவரது ஜோதிடத்தைப் பரிசோதித்தனர். பலரின் முன்னிலையில் அக்கைரேகைகளை ஆராய்ந்த செய்ரோ, அக்கைரேகைக்குரியவர்களைப் பற்றி இம்மி பிசகின்றி விவரித்தார்.

   "முதலாவது கைரேகை, பதவியில் இருக்கும் ஒரு பிரபல அரசியல்வாதியினுடையது; இரண்டாவது, ஒரு பிரபல வழக்கறிஞரினுடையது; மூன்றாவது, ஒரு பெண்ணினுடையது; அவர் ஒரு எழுத்தாளராக இருப்பார். நான்காவது, ஐந்தாவது ரேகைக்குரியவர்கள் பாடகர்கள். ஆறாவது கைரேகை, இசைக்கருவியை மீட்டும் ஒரு கலைஞனுடையது. ஏழாவது கைரேகை, மரணதண்டனை பெற்ற ஒரு கைதியினுடையது." இதனைக்கேட்ட அனைவரும் வியப்பில் மூழ்கி வாயடைத்துப் போயினர். செய்ரோ மேலும் தொடர்ந்தார், "அந்த மரண தண்டனைக் கைதி, தண்டனையிலிருந்து தப்புவான்; அதன்பின் அவனுக்கு 15 வருட ஆயுள் உண்டு. தனது 59-ம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறப்பான்" எனக்கூறி முடித்தார். 

               சுற்றியிருந்தவர்கள் குழம்பினர். உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி, கடுமையான சட்டங்களையுடைய அந்நாட்டில், பலத்த பாதுகாப்புகளை மீறி எப்படித் தப்புவான் என்று. இருப்பினும், மரணதண்டனைக்கு சிலமணிநேரத்திற்கு முன், டாக்டர்.மேயர் என்றழைக்கப்பட்ட அம்மரணதண்டனைக்கைதியின் கருணைமனு, அந்நாட்டு ஜனாதிபதியால் ஏற்கப்பட்டு விடுதலையானான்; பின், சரியாக 15 ஆண்டுகள் கழித்து, செய்ரோ கணித்ததுபோலவே மாண்டும்போனான்.



        இதன்பின்தான் செய்ரோ ரஷ்யா சென்றது, ஜார் மன்னரின் கைரேகையைப் பரிசோதித்து, அவர் 1917-ல் அவர் மரணமடைவார் என்றதும், ரஸ்புடினுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகத்தை உதைத்து எழுப்பியதும், எழும்பிய மிருகம் அரசவையிலிருந்த அனைவரையும் கடிக்காத குறையாக மிரளவைத்ததும், ரஸ்புடினின் மரணமும், ரஸ்புடினின் மறைவிற்குப் பின், 1917-ல் உருவான ரஷ்யப்புரட்சியில் ஜார் மன்னரின் வம்சமே நிர்மூலமானதும், ஏற்கனவே, "ரஷ்யாவின் ராட்சஸ ரட்சகன் - ரஸ்புடின்...!!!" பதிவில் பார்த்தாயிற்று. 



               இத்தனை புகழ்வாய்ந்த செய்ரோவை உலகம் தெரிந்துவைத்திருக்கிறது; ஆனால், அவருக்குக் கற்பித்த நாராயண் ஜோஷியை கூகுளில் தேடினாலும் கிடைக்காத அளவிற்கு தொலைத்துவிட்டோம்..! காரணம், நம்மவர்கள்மீது நாம் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையின்மையும், சந்தேகமும்...! ('ஆமா, நம்மகூடவேதான் சுத்துறான்... இவன் பெரிய விஞ்ஞானியா...?!' என்கிற முட்டாள்தனமான மனப்போக்கே, நம்மவர்களின் சாதனைகளில் மண்ணள்ளிப் போடுகிறது. ஒருவனின் தன்னம்பிக்கையை சிதைத்தல் மிக எளிது, அதை உருவாக்குதல் கடினம் என்பதை உணர்வோமாக...! இனிமேலும் மண்ணள்ளிப் போடத்துணிந்தால், அதை நாம் விதைகளுக்கும், செடிகளுக்கும் செய்வோம்...!)

               எத்தனை இடர்வந்தும் மங்கா ஒளியுடையது, நமது பாரத நாடு. ஜோதிடம் தோன்றியதும், வளர்ந்ததும் நமது நாட்டில்தான் என்பதுபோலத்தான் ஆதாரங்களும், தகவல்களும் கிடைக்கின்றன. அவைகுறித்து இனி காணலாம். ஜோதிடத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை 
  1. ஹோரா - ஒருவரின் பிறப்பின் நிலைகளையும், 
  2. கணிதா - கிரகங்களின் கணித முறைகளையும், 
  3. சமிதா - அதற்கான பல விதிமுறைகளையும் கூறுகின்றன. 
ஜோதிடக்கலையை, நாரதர் - பிதாமகரிடம் கற்றதாகவும் (இவர் மகாபாரத பீஷ்மர் அல்ல; வேறு ஒருவர்), நாரதர் - சூனாகா என்கிற முனிவருக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர், மகாபாரத காலத்தில் வாழ்ந்த பராசர முனிவர் இக்கலைக்கு சீரிய வடிவம் கொடுத்து பராசர ஹோரா என்கிற நூலை இயற்றினார். பின், உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்த மாமன்னரின் அரசவையிலிருந்த காளிதாச மகாகவி (கி.மு.128-ல் வாழ்ந்தவர்) கலாமிர்தம், ஜோதிட விதபரணா என்ற நூல்களை இயற்றியுள்ளார். இவரது காலத்தில், அரசவையின் ஜோதிடராக இருந்த வராகமிஹிரர் - பிருஹத்ஜாதகம், பிருஹத்சமிதா, பஞ்ச சிந்தாந்தம், லகு ஜாதகம், பிருஹத் விவாஹ படலம் என்ற அறிய ஜோதிட நூல்களை இயற்றியுள்ளார். ஜெயமினி என்கிற ஜோதிட மேதை, மற்ற ஜோதிட முறைகளிலிருந்து வேறுபட்ட ஜெயமினி சூத்திரம் என்கிற நூலை இயற்றியுள்ளார். ஆரியபட்டர் (கி.பி. 500-களில் இவர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது) என்கிற ஜோதிட கணிதமேதை, சூரிய சித்தாந்தம், ஆரிய பட்டயம் போன்ற ஜோதிட கணித நூல்களை எழுதியுள்ளார். சராவளி என்கிற அரிய நூலை கல்யாணவர்மா எழுதியுள்ளார். பின், பலதீபிகா, பரவார்த்த ரத்னாகரா, உத்திரகலாமித்ரா, யவன ஜாதகம், ஜாதகலங்காரம், ஜாதகதேஸ் மார்க்கா, ஜாதக பரணம் போன்ற நூல்கள் தோன்றின. இவற்றைத் தாண்டி, சென்ற பதிவில் பார்த்த, சித்தர்களின் சுவடிகள் தொடங்கி, இன்றுவரையில் ஏகப்பட்ட நூல்கள் தோன்றிவிட்டன. ஆனால் இக்கலை, இதன் நோக்கத்தை இழந்து பல்வேறு போலிகளால், ஏகப்பட்ட குளறுபடிகளுக்கும், லாப நோக்கத்திற்கும் ஆளாகியிருப்பதால், சந்தேகக்கண்ணோடு நோக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டது. 


(நாரதர்)


(காளிதாசர்)


(வராஹமிஹிரர்)


(ஆரியபட்டர்)

          ஜோதிடத்தின் சுவாரஸ்யமே, மனித மனத்தை, அதைத்தாண்டியிருக்கும் விஞ்ஞானத்தை நோக்கி இட்டுச்சென்றது. விளைவு, வானியல் துறையின் பிறப்பு. கணக்குகளிலிருந்து கணிப்புகள் வரை ஏறத்தாழ இரண்டிற்கும் அநேக ஒற்றுமைகள் இருந்ததால், ஜோதிடர்கள் 'கணியன்' என்றும், வானியலாளர்கள் 'கணிதன்' என்றும் அழைக்கப்பட்டனர். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்கிற ஒப்பற்ற வாக்கியம் உதிர்த்த கணியன் பூங்குன்றனார் ஒரு ஜோதிடவியலாளரே...! 

           சரி,  இப்போது ஜோதிடம் பக்கம் வருவோம். ஜோதிடர்கள் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, 'கிரகங்களின் தாக்கம்'...! 'அதெப்படி எங்கோ உள்ள கிரகத்தின் தாக்கம் நம்மை பாதிக்கும்..?' என்பது ஒரு நியாயமான கேள்வி...! அதற்கு முன், இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்த விரும்புகிறேன். அதை, இக்காணொளியில் காணவும்.


           இத்தகு மாபெரும் வெளியில், நமது சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களை ஒப்பிட்டால், அது நிச்சயம் அயல்நாட்டிலிருக்கும் ஒரு நண்பரின் தொலைவை, நம் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நண்பனோடு ஒப்பிடுவதைப்போல அமையும். ஜோதிடர்கள் முன்வைக்கும் காரணங்களும் இவற்றை ஒத்ததே. சரி, இனி ஜோதிடம் குறித்த பார்வையில், கிரகங்களின் பாதிப்பு உலகின் மீதும், அதில் வாழும் நம் போன்ற உயிரினங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மையா, எனக் காண்போம். 


           அதற்கு முன், இந்த ஜோதிடம் முளைவிட ஆரம்பித்த மூலத்தைக் காண்போம். ஜோதிடம், கணிதம் இரண்டுமே இந்தியாவில் பிறந்தவை. ஜோதிடத்தால் கணக்கு பிறந்ததாகவும், கணித்தத்தால் ஜோதிடம் பிறந்ததாகவும் பட்டிமன்றங்கள் ஒரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகளவில் உபயோகிக்கப்படும் 'தசாம்ச கணக்கீடுகள்' ('ஒன்று' முதல் 'பத்து' வரையுள்ள எண்களை அடிப்படியாகக் கொண்ட கணக்கீடுகள்) இந்தியாவிலிருந்து சென்றவையே. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், இன்றளவில் உபயோகிக்கப்படும் ஆங்கில நாள்காட்டியின் மாதங்களின் பெயர்கள். இன்று நாம் கொண்டாடும் ஜனவரி முதல் நாள், ஆரம்பத்தில் புத்தாண்டாக இருந்ததில்லை. ஏப்ரல் ஒன்றாம் நாளே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இன்று நாம் கடைபிடிக்கும் நாள்காட்டியை அறிமுகப்படுத்தியவர், 'போப் பதின்மூன்றாம் க்ரிகோரி' (Pope Gregory XIII). இவருமே அதற்கு முன் 'அலாய்சியஸ் லிலியஸ்' (Aloysius Lilius) என்கிற விண்ணியலாளரின் நாட்காட்டியை சற்று மெருகூட்டியே உருவாக்கினார். (இந்த கிரிகோரியன் நாட்காட்டி, காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு, பின்னரே தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது.) புத்தாண்டாக ஜனவரியை அறிமுகப்படுத்திய பிறகும் ஏப்ரலையே புத்தாண்டாகக் கொண்டாடியவர்களை ஏளனம் செய்யவே, ஏப்ரல் முதல் நாள் 'முட்டாள்களின் தினம்' ஆக்கப்பட்டது. உலகில் பெரும்பாலானோர் ஆங்கில நாட்காட்டியை ஏற்றுக்கொண்டபோதிலும், எந்தவொரு நாட்டுடனும் உடன்படாத வடகொரியா இவ்விஷயத்திலும் தன்னை வேறுபடுத்திக்கொண்டது. க்ரிகோரியன் நாட்காட்டி இயேசு கிறிஸ்து (Jesus Christ) பிறந்ததை அடிப்படையாகக்கொண்டு நாட்களைக் கணக்கிட்டதைப் போல [18-ம் நூற்றாண்டு வரையிலுமே கூட, இயேசு பிறந்ததாக நம்பப்படும் டிசம்பர்-25-ஆம் நாளே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது; பின்னர் தற்போதைய ஜனவரி-1-ஆம் நாள் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, என்பது கொசுறு தகவல்.] வடகொரியர்கள், தற்போதைய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டிய, கிம் இல்-சங்க் (Kim Il-sung) பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் தற்போது நிகழ்வது 2017 அல்ல; 106-வது ஆண்டே. இதேபோல் இஸ்லாமியர்கள், முகமது நபி (ஸல்) (Mohammad Nabi [PBUH]) மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தும், புத்த சமயத்தவர் புத்தர் (Buddha) பிறந்த நாளில் இருந்தும் ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். தமிழர்கள் திருவள்ளுவர் பிறந்ததினத்திலிருந்தே கணக்கிடுகின்றனர். (ஆனா, க்ரிகோரியன் நாட்காட்டியே புழக்கத்தில் இருக்கும். தமிழின் பெயரைச் சொல்லி, தமிழனை முட்டாளாக்கும் சில அரசியல் 'டலீவர்கள்' மட்டுமே, அவ்வப்போது இப்படி ஒன்று உண்டென்பதை நினைவுகூறுவார்கள். தங்களின் சுவரொட்டியில்கூட வடமொழிக் கலப்பை விரும்பாதவர்கள்; ஜூன் மாதத்தை சூன் என்றும், ஜூலை மாதத்தை சூலை என்றும், குறிப்பிடும் தமிழினப் போராளிகள். "அப்போ ஏன்டா தமிழ் மாசங்கள குறிப்பிடல?"-னு அவங்ககிட்ட புத்திசாலித்தனமா நம்ம ஆளுங்க யாரும் கேக்கக்கூடாது. ஏன்னா, அவங்கலாம் 'டலீவர்கள்', நாமலாம் எவனையாவது சாகுறவரைக்கும் தலீவா, தலீவா-னு கூவிக் கூவிக் கும்புடுற நிஜவுலக மினியன்ஸ்! அவ்வளவே! சரி, விட்டா என் நாக்கு இந்த விஷயத்துல கதக்களி ஆடும் என்று கூறி, விஷயத்துக்கு திரும்புகிறேன்.) தற்போது நிகழ்வது, திருவள்ளுவராண்டில் 2043-ஆம் வருடம். மேலும், நம்மவர்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயரிட்டனர். அதன்படி இப்போதைய ஆண்டின் பெயர், "துன்முகி வருடம்". 



(போப் பதின்மூன்றாம் க்ரிகோரி)


(அலாய்சியஸ் லிலியஸ்)


(இயேசு கிறிஸ்து)


(கிம் இல் சங்)


(முகமது நபி [ஸல்])


(கௌதம புத்தர்)



(தமிழ் ஆண்டின் பெயர்கள்)

           அதாகப்பட்டது மனிதனின் "கடவுள்" என்ற படைப்பு தொட்டே, அவன் உணரும், உருவாக்கும், உருவகிக்கும் விஷயங்கள் சகலத்திற்கும் கடவுளின் பெயர்களையே சூட்டத் தொடங்கினான். இவ்வழக்கம் மாதங்கள் மற்றும் வாரங்களின் பெயர்சூட்டுவிழாவிலும் தொடர்ந்தது. முதலில் வாரங்களின் பெயர்க்காரணங்களை அறிவோம்.

Sunday - ஞாயிற்றுக்கிழமை - சூரியனுக்கான தினம்.
Monday - திங்கட்கிழமை - சந்திரனுக்கான தினம்.
Tuesday - செவ்வாய்க்கிழமை - ஸ்காண்டிநேவிய புராணத்தின் சட்டம் மற்றும் போருக்கான கடவுள் 'டியூ'-வுக்கான தினம்.
Wednesday - புதன்கிழமை - ஜெர்மானியர்களின் புராணத்தின் கல்வி மற்றும் மாந்த்ரீக கலையின் கடவுள் 'உடன்'-க்கான தினம்.
Thursday - ஸ்காண்டிநேவிய புராணத்தின் போர்க்கடவுள் 'தோர்'-க்கான தினம்.
Friday - ஸ்காண்டிநேவிய புராணத்தின் அன்பு மற்றும் அழகுக்கான கடவுள் 'ஃப்ரேயா'-வுக்கான தினம்.
Saturday - ரோமானிய புராணத்தின் விவசாயக் கடவுள் 'சேட்டர்ன்'-க்கான தினம்.


ஞாயிற்றுக்கிழமை கடவுளர்: 



(சூரிய பகவான் [இந்து சமயம்])


(அப்போலோ [கிரேக்க புராணம்])


(ரா [எகிப்திய புராணம்])


(தோனாதியு [ஆஸ்டெக் நம்பிக்கை])


(இன்டி [மாயன் நம்பிக்கை])

திங்கட்கிழமை கடவுளர்:


(சந்திர பகவான் / சோமன் [இந்து சமயம்])


(ஆர்டெமிஸ் [கிரேக்க புராணம்])


(டயானா [ரோமானிய புராணம்])


(கோன்சு [எகிப்திய புராணம்])


(இஷ்ச்செல் [மாயன் நம்பிக்கை])

செவ்வாய்க்கிழமை கடவுளர்:


(செவ்வாய் / மங்கள் பகவான் [இந்து சமயம்])


(ட்யூ [ஸ்காண்டிநேவிய புராணம்])



(ஏரீஸ் [கிரேக்க புராணம்])

புதன்கிழமை கடவுளர்:


(புதன் பகவான் [இந்து சமயம்])


(உடன் [ஜெர்மானிய புராணம்])


(ஓடின் [ஸ்காண்டிநேவிய புராணம்])


(மார்வெல் சித்திரக்கதாப்பாத்திரம் ஓடின்)

வியாழக்கிழமை கடவுளர்:


(வியாழன் / குரு பகவான் [இந்து சமயம்])


(தோர் [ஸ்காண்டிநேவிய புராணம்])


(மார்வெல் சித்திரக்கதாப்பாத்திரம் தோர்)

வெள்ளிக்கிழமை கடவுளர்:


(சுக்கிரன் [இந்து சமயம்])


(ஃப்ரேயா [ஸ்காண்டிநேவிய புராணம்])

சனிக்கிழமை கடவுளர்:


(சனீஸ்வர பகவான் [இந்து சமயம்])


(சேட்டர்ன் [ரோமானிய புராணம்])

           இவ்வாறாக ஒவ்வொரு தினமும் வெவ்வேறு புராணக் கடவுளரின் பெயரை தங்கள் பெயராகத் தாங்கி நின்றாலும், மர்மமான முறையில் உலகில் தோன்றிய அத்தனை நாட்களின் பெயரும் மிகச்சரியாக அதேவகையான அவரவர் புராணக் கடவுள்களையே குறிக்கிறது. உதாரணமாக, வெள்ளிக்கிழமை, ஸ்காண்டிநேவிய புராணத்தின் அன்பு/காதலின் மற்றும் அழகுக்கான கடவுளான 'ஃப்ரேயா'-வைக்க குறிக்கிறதெனப் பார்த்தோம். அதேபோல, வானியல் கிரகமான வெள்ளியை ஆங்கிலத்தில் 'வீனஸ்' என்பர். இந்த வீனஸ் என்கிற பெயர் முந்தைய பதிவு ஒன்றில் பார்த்த ஹிப்பாஷியா அம்மையாரால் அக்கிரகத்திற்கு (சேனை தொட்டு வைத்து, காதில் மூன்று முறை அழைத்து) வைக்கப்பட்டது. வீனஸ் ரோமானிய புராணத்தின் அன்பு/காதல் மற்றும் அழகுக்கான கடவுள். இந்த ஒற்றுமை உலகெங்கிலு முள்ள புராணங்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது. மற்ற சமூகங்களைப்  போலல்லாது, தனிவழியில் தலைமையாகக் கோலோச்சியத் தமிழ்ச்சமூகம் கடவுளர்களின் பெயர்களை கிழமைகளுக்கு வைக்காமல் கிரகங்களின் பெயர்களையே வைத்தனர். (கிரகங்களுக்கு கடவுளரின் பெயர் என்பது உண்மை!) தொன்றுதொட்டு வானியல் அறிவில் வித்தகர்களாக விளங்கிய இந்திய கணிதர்கள், பூமியிலிருந்து காணும்போது பிரகாசமாகத் தோன்றும், நமது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த விண்பொருட்கள் ஒவ்வொன்றின் பெயராலும் கிழமைகளுக்குப் பெயரிட்டனர். சூரியன் தொடங்கி சனி வரை, வெறும்கண்களில் அகப்படும் நமது சூரியக்குடும்ப விண்பொருட்கள் யாவும் ஒவ்வொரு கிழமையின் பெயராகின. 

           நாம் புராண/மத/சமயக் கடவுளரின் பெயரை உலகின் சகசமூகத்தினரோடு ஒத்துப்போகும்வகையில் வைக்கவில்லை என்பதற்கு ஒரு சான்று: அதே வெள்ளிக்கிழமையை நாம் வெள்ளிக்கோளின் பெயராலேயே அழைக்கிறோம்; இது கணிதர்களால் உருவாக்கப்பட்டது. இதேபோல், கணியர்கள் (ஜோதிடர்கள்) வெள்ளி என அக்கிரகத்தை அழைக்க மாட்டார்கள். மாறாக, சுக்கிரன் என அழைப்பர். நமது ஜோதிடக்குறியீடுகளின்படி அனைத்துகிரகங்களுமே ஆண்தான், ஒன்றுகூட பெண் இல்லை (மற்ற சமூக புராண/மத/சமய/நம்பிக்கைகளைப்போல்.) (யம்மா... உடனே ஆணாதிக்கம்னு சொல்லி, கொடிய புடிச்சுகிட்டு கெளம்பிடாதீங்க மா...!!!) கணிதர்கள் கணிக்கும் முன்னரே, கணியர்கள் கிரகங்கள் ஒன்பதெனப் பட்டியலிட்டு ஜாதகங்களும், பஞ்சாங்கங்களும் கணிக்கத் தொடங்கினர். ஆனால், உண்மையில் கணிதர்கள் கண்டறிவது சூரியக்குடும்ப கிரகங்கள், கணியர்கள் கணிப்பது நமது புவியையும் அதைச்சார்ந்தவர்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்தும் (என அவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நம்பும்) விண்பொருட்களை. ஆகவே, அவற்றை கணிதர்கள் கோள், நட்சத்திரம், துணைக்கோள் என வகைப்படுத்தியும், கணியர்கள் கிரகங்கள் எனப் பொதுப்படுத்தியும் வைத்தனர். நட்சத்திரமாக வகைப்படுத்தப்பட்ட சூரியன், துணைக்கோளாகத் தனிப்படுத்தப்பட்ட சந்திரன்/நிலவு, சூரியனைச் சுற்றிவரும் கோள்கள், இத்தனைக்கும் மேலாக சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின்போது ஏற்படும் நிழல்கள் - யாவும் கணியர்களின் கணக்கில் கிரகங்களே.  

           மேலே குறிப்பிட்டதைப்போல் ஒவ்வொரு கிரகங்களுக்கும் மற்ற நாகரீகத்தினர் ஒவ்வொரு கடவுளை நியமித்ததைப் (!) போல, இந்தியர்கள் நியமிக்கவில்லை. ஒவ்வொரு கிரகத்தையும் உருவாக்கப்படுத்தினர். அதைத்தாண்டி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கடவுளர் தனித்தனியே உண்டு. உதாரணமாக, செவ்வாய்கிழமைக்கு உகந்த கடவுள், முருகன். முருகன் போர்க்கடவுள். இது மற்ற நாகரீகங்களின் கடவுளரின் பண்போடு ஒத்துப்போகிறது.



(முருகன் [இந்து சமயம்])

           இவ்வாறு பெயர்வைத்தல் தொடங்கி சகலத்திலும் மாறுபட்டு இருப்பதாலும், பலவிஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்திருந்ததாலும், நம்மவர்களிடமிருந்தே இஞ்ஞானம் அகிலவுலகிலும் பரவியிருப்பதற்க்கான சாத்தியமுடையதாகத் தோன்றுகிறது. தற்போது மாதங்களின் பெயர் வரலாற்றைக் காண்போம்.

January - ஜனவரி - ரோமானிய புராணத்தின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை நோக்கும் இரு தலைகளைக்கொண்ட, கதவுகள் மற்றும் வாயிலின் கடவுளான 'ஜேனஸ்'-க்கான மாதம்.
February - பிப்ரவரி - ரோமானிய புராணத்தின் தூய்மையின் கடவுளான 'ஃபிப்ரா'-வுக்கான மாதம்.
March - மார்ச் - ரோமானிய புராணத்தின் போர்க்கடவுளான 'மார்ஸ் '-க்கான மாதம்.
April - ஏப்ரல் - கிரேக்க புராணத்தின் அன்பு/காதல் மற்றும் அழகின் கடவுளான 'அஃப்ரோடை
ட்டி'-க்கான மாதம்.
May - மே - ரோமானிய புராணத்தின் வசந்தம் மற்றும் வளர்ச்சியின் கடவுளான 'மேயா'-வுக்கான மாதம்.
June - ஜூன் -ரோமானிய புராணத்தின் பாதுகாவல் மற்றும் திருமணத்தின் கடவுளான 'ஜூனோ'-வுக்கான மாதம்.
July - ஜூலை - ரோமானியச் சக்கரவர்த்தி 'ஜூலியஸ்
சீசர்'-ன் பெயரால் அழைக்கப்படுகிறது.
August - ஆகஸ்ட் - ரோமானியச் சக்கரவர்த்தி 'அகஸ்டஸ் சீசர்'-ன் பெயரால் அழைக்கப்படுகிறது.
September - செப்டம்பர் - லத்தீன் மொழியில் 'ஏழு' என்று பொருள்படும் 'செப்டெம்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
October - அக்டோபர் - லத்தீன் மொழியில் 'எட்டு' என்று பொருள்படும் 'அக்டோ' என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
November - நவம்பர் - லத்தீன் மொழியில் 'ஒன்பது' என்று பொருள்படும் 'நவம்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
December -டிசம்பர் - லத்தீன் மொழியில் 'பத்து' என்று பொருள்படும் 'டிசெம்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது.



(ஜேனஸ்)
 

(ஃபிப்ரா)


(மார்ஸ்)


 (அஃப்ரோடைட்டி)


 (மேயா)


 (ஜூனோ)


 (ஜூலியஸ் சீசர்)


 (அகஸ்டஸ் சீசர்)

 
 
 

         இதில் கடைசியாகவுள்ள நான்கு மாதங்களை மேலோட்டமாக நோக்கினாலே அவை குறிக்கும் மாதங்களின் கணக்கிற்கும், அது குறிக்கும் பொருளுக்கும் உண்டான முரண்பாடு விளங்கும். அதற்கான காரணம் மாதங்களின் இடையில் நுழைந்துள்ள ஒருவரைக் கைகாட்டும். அவர் ஜூலியஸ் சீசர். ('ஜூ' வடமொழியாதலால், சிலர் அவ்வெழுத்திற்குப் பதில் 'யூ' போட்டு நிரப்புவர். சிறிது நேரம் அவ்வழியில் பயணித்துதான் பார்ப்போமே!)

         ரோமானியச் சக்கரவர்த்தி யூலியசு சீசர் (ஜூலியஸ் சீசர்) அவர்கள், கி.மு. 45-ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு 'யூலியன் நாட்காட்டி' என்று பெயர். அதற்கு முந்தைய ஒரு ஆண்டில் 10 மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு (யூலை) மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கி.பி. 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கி.மு. 45-ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது!

           அதன் பின் கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கி.பி. 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், ரஷ்யா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் ரஷ்யாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

    யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்ரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே, 1582-ல் போப் கிரிகோரியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400-ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000-ல் கூட்டப்படவில்லை. அப்படியும் கி.பி. 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972-ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (Official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. (தலையில் அதிகம் முடி கொண்டவர்கள், இவற்றை மீண்டும் படிக்கவும்!)

        இருப்பினும் உலக வரலாற்றில், மாயன்களும் எகிப்தியர்களும் தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட (ஞாயிறு/சூரியன்) நாட்காட்டியை கி.மு. 4236-இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களும் நமது தமிழினத் தோன்றல்களே, இங்கிருந்து புலம்பெயர்ந்த நம்மவர்களே! மற்ற நாகரீகத்தினரைப் போல் அவர்கள் குறுகிய கணக்கீடுகளில் தங்களைச் சுருக்கிக்கொள்ளவில்லை; மாறாக மற்றவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட (Think)  இயலாத எண்களுக்குப் பெயரிட்டு எண்ணிக்கொண்டிருந்தார்கள் (Count). அதற்கான ஆதாரம் கீழே.



(தமிழ் எண்களின் பெயர்கள்)

        மேலும், மேற்குறிப்பிட்ட கடைசி நான்கு மாதங்களின் பெயர்கள் லத்தீன் மொழியிலிருந்து மருவியதாக நம்பவைக்கப்பட்டாலும், உண்மையில் அவை இந்திய மொழியான சமஸ்கிருதத்திலிருந்தே சென்றது. அவை,
  • சப்த - 7
  • அஷ்ட - 8 
  • நவ - 9
  • தச - 10 

        இதிலிருந்தே, இதன் கிளைமொழியான ஹிந்தியிலும் 7, 8, 9 மற்றும் 10 ஆகிய எண்களைக்குறிக்கும் சாத், ஆட், நௌ மற்றும் தஸ் ஆகியவை பிறந்தன. சமஸ்கிருதமுமே கூட சித்தர்களால் நுணுக்கமாக உருவாக்கப்பட்ட, தமிழை அடிப்படையாகக் கொண்ட, ஒரு தனிமொழி என்கிற கருத்தும் நிலவுகிறது. அதுகுறித்து மற்றொரு பதிவில் காணலாம். தற்போது தமிழ் மாதங்களின் வரலாற்றைக் காணலாம்.

        சூரியன் செல்லும் ஆகாயப்பாதையை சமமாக 30 பாகைகள் கொண்ட 12 பாகங்களாகப்பிரித்து அவற்றிற்கு இராசிகள் என்று பெயரிட்டுள்ளோம். ஆரம்பமாக 0 பாகையைக்கொண்டு மேஷம் (மேடம்) , ரிஷபம் (இடபம்), மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு(சு), மகரம், கும்பம், மீனம் என்று பன்னிரண்டு இராசிகளும் தொடர்ந்து 360 பாகையுள்ள (360º) நீள்வட்டமாக முடியும் இடத்தில் மீண்டும் மேட இராசி தொடங்கும். ஒரு இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கால அளவே ஒரு தமிழ் மாதம் ஆகும். அவ்வாறெனில் ஏன் எல்லா தமிழ் மாதங்களும் ஒரே அளவு நாட்களைக்கொண்டதாக இல்லை எனத்தோன்றலாம். சூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் இந்த பாதை விண்வெளிப்பாதை (Zodiacal Path) என்று அழைக்கப்படுகின்றது. இதன் நடுவில் இருப்பது விண்வெளி மத்திய ரேகை (Celestial Equator)ஆகும். இந்தப்பாதையை சூரியன் வடக்கு நோக்கிக் கடக்கும் காலம் "உத்தராயண காலம்" என்ற ஆறு மாதங்களாகும். இதே போல தெற்கு நோக்கிக்கடக்கின்ற காலம் "தட்சிணாயன காலம்" என்ற ஆறு மாதங்காளாகும். ஆடிப்பிறப்புடன் ஆரம்பமாகும் தட்சிணாயனம் தைப்பொங்கலில் முடிவடைகின்றது. இவ்வாறு தைப்பொங்கலில் தொடங்கும் உத்தராயணம் அடுத்த ஆடிப்பிறப்பில் முடிவடைகின்றது.

        தமிழ் மாதங்களின் கால அளவு சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தையும் இவற்றில் ஏற்படும் வேறுபாடுகளையும் பொறுத்தது. சூரியனை பூமி சுற்றி வரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதை அல்ல. இது ஒரு நீள்வட்டமான பாதை. இதனால் எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரமும் ஒரே அளவாக இருப்பதில்லை. மார்கழி மாதத்தில் மிகவும் கிட்ட இருக்கும் சூரியன் ஆடியில் அதிக தூரத்துக்கு தள்ளிப்போய்விடும். அதிக பட்ச தூரத்தை பெரிஹீலியன் (perihelion) என்றும், குறைந்த பட்ச தூரத்தை அப்போஹீலியன் (Apohelion) என்றும் வானியல் விஞ்ஞானத்தில் கூறுவார்கள்.

        சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்த காலங்களில் பூமியின் வட்டப்பாதையில் உள்ள 30 பாகையைக் (30º) கடக்கும் நீளமும் குறையும். அத்தோடு சூரியனின் ஈர்ப்புச்சக்தியின் தாக்கத்தாலும், பூமியின் மையநோக்கு  இழுவிசையில் (Centripetal force) ஏற்படும் மாற்றத்தாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும். இவ்வாறு குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும். இதேபோல சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது இந்த 30 பாகையைக் கடக்கும் தூரமும் கூடும். அதேபோல பூமியின் மையநோக்க இழுவையும் குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்தக் குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்க, அதற்கான கால அளவும் அதிகரிக்கும்.

        இதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் ஹிந்து ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.


(விண்வெளிப்பாதை)


(ராசிமண்டல நட்சத்திரங்கள்)


(ராசிகளின் குறியீடுகள் [ஒரு மாறுதலுக்கு டைனோசர்களோடு])


(ராசிமண்டலம் வெறும்கண்களால் காணும்போது)

        இவ்வாறாக சூரியன் ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் வேளையே சங்கராந்தி. மாதப்பிறப்பும் இதுவே.அந்த வகையில் வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு.

  1. தை மாதம் (பௌஷ்ய மாதம்) - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "மகர சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது. (இதுதான் தற்போது நாம் கடந்து வந்த தைப் பொங்கல்)
  2. மாசி மாதம் (மக மாதம்) - மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "லவண சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  3. பங்குனி மாதம் (பல்குணி மாதம்) - பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும். இது "போக சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  4. சித்திரை மாதம் (சைத்ரா மாதம்) - சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேஷ (மேட) இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "தான்ய சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  5. வைகாசி மாதம் (வைசாக மாதம்) - விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் ரிஷப (இடப) இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "தாம்பூல சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  6. ஆனி மாதம் (ஜேஷ்டா மாதம்) - கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "மனோதர சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  7. ஆடி மாதம் (ஆஷாட மாதம்) - அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "அசோக சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  8. ஆவணி மாதம் (சிரவண மாதம்) - திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "ரூப சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  9. புரட்டாதி/புரட்டாசி மாதம் (பத்ரபாத மாதம்) - உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "தேஜ சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  10. ஐப்பசி மாதம் (அசுவினி மாதம்) - அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "ஆயுள் சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  11. கார்த்திகை மாதம் (கிருத்திகா மாதம்) - கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "சவுபாக்ய சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.
  12. மார்கழி மாதம் (மார்கசீர மாதம்) - மிருகசீரிட/மிருகசீரிஷ  நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இது "தனுஷ் சங்கராந்தி" என அழைக்கப்படுகிறது.

(பின்வரும் ஓவியங்கள் ககாயா [Kagaya] எனும் ஜப்பானிய ஓவியரின் கைவண்ணத்தில் உருவான ராசிக்கூட்டங்களின் தனித்தனி அற்புதங்கள்! அவற்றில் காட்டப்பட்டுள்ள நட்சத்திரங்களின் இணைப்புகளையும் தவறாது கவனியுங்கள்.)


(மேஷம்)



(ரிஷபம்)



(மிதுனம்)



(கடகம்)



(சிம்மம்)



(கன்னி)



(துலாம்)



(விருச்சிகம்)



(தனுசு)



(மகரம்)



(கும்பம்)



(மீனம்)



        இதையடுத்து கணியர்கள் அதிகமாக உபயோகிக்கும் கணக்கீடு ஹோரை (அல்லது ஓரை). ஆங்கிலத்தில் நாம் உபயோகிக்கும், மணி நேரத்தைக் குறிக்கும், Hour எனும் வார்த்தையின் மூலம் இதிலிருந்து பிறந்ததே. இனி ஹோரை குறித்த சில விவரங்களைக் காண்போம். (தமிழில் நாம் உபயோகிக்கும் 'நாழிகை' எனும் பதம் தற்போது நாம் உபயோகிக்கும் அளவுகளில் 24 நிமிடங்களைக் குறிக்கும்.)

  • ஹோரை என்பது கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் உரிய நேரங்களாகும்.
  • மொத்தம் உள்ள ஒன்பது கிரகங்களில், ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களை தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஓரை உண்டு.
  • ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் சாயா கிரகங்கள் ஆகும். மேலும் இந்த இரு கிரகங்களுக்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தினாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.
  • சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் மற்றும் தொலைவில் இருக்கக்கூடிய கிரகங்கள், அவைகளின் ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
  • வானவியல் அறிஞர்கள் ஓரைகளை, சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு உருவாக்கினர். இந்த அடிப்படையில் தான் வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.
  • அதற்கு அடுத்து சுக்கிரன், அதற்கு அடுத்து புதன் ஓரை, 4-வது இடம் சந்திரனுக்கும், 5-வது இடம் சனிக்கும், 6-வது இடம் குருவுக்கும், 7-வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர்வீச்சு தான் காரணம்.
  • எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் அல்லது துவங்குவதற்கும் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது.
  • சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுவது தான் ஓரைகள் ஆகும். ஒவ்வொரு நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  • உதாரணமாக, ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.
  • இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 மணி வரை சந்திரன் ஓரை, 10-11 மணி வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதனை தொடர்ந்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.
  • இதேபோல் செவ்வாய்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.
  • பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.
  • 6-1-8-3 இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை, திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும், பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

        மேலே நான் பதிவிட்ட பதிவுகளில் சிலவும், நான் குறிப்பிடாத சிலவும் கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் விளக்கமாகவும், எளிமையாகவும் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தவறாமல் காணவும். 



        இதுவரை கண்ட விளக்கத்தின்படி, கணிதம் கணக்குகளையும், கணியம் கணிப்புகளையும் குறிக்கிறது எனக் கண்டோம். இவ்வாறாக அறிவியல் கணிதத்தை மையமாகக்கொண்டும், ஜோதிடவியல் கணியத்தை மையமாகக்கொண்டும் இயங்கத்தொடங்கின. விளைவு, ஜோதிடம் இருந்த இடத்திலிருந்தே கணக்கீடுகளின் மூலமாக கிரகங்களின் நகர்வுகளையும், அதனால் மனிதர்களுக்கும் பூமிக்கும் ஏற்படும் தாக்கங்களையும் கணிக்கத்தொடங்கியது. அறிவியல், செயற்கைகோள்களை ஏவியும், அதிநவீன தொலைநோக்கிகள் மற்றும் அலைதிரட்டிகளின் உதவியோடு கிரகங்களின் நகர்வுகளையும், அதனால் மனிதர்களுக்கும் பூமிக்கும் ஏற்படும் விளைவுகளையும், ஆபத்துகளையும், தக்கங்களையும் தர்க்கப்படுத்தத் தொடங்கியது. இருப்பினும், இரண்டின் பாதைகளும் வெவ்வேறுதான். ஜோதிடத்தின் இவ்வாறான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களைக் கணக்கிடும் கணிப்பீட்டின் மைல்கல்லாக உருவானதுதான் 'பஞ்சாங்கம்' (Almanac). (இதுகுறித்த தெளிவான விளக்கங்கள், மேலிணைக்கப்பட்டக் காணொளியில் உள்ளது.) எவ்வாறு ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் 'ஜாதகம்' (Horoscope) என்கிற பெயரில் எழுதப்படுகிறதோ, அதேபோல், ஒவ்வொரு நாளில் நிகழும் சம்பவங்கள் குறித்த கணிப்புகளின் தொகுப்பே பஞ்சாங்கம் என்பது ஜோதிடவியலாலர்களின் விளக்கம். அவ்வாறு குறிப்பிடப்படும் சம்பவங்கள் நடக்கிறதா என்றால், வழக்கமான பள்ளி மாணவனின் பதிலான "தெரியாது..!" என்பதே எனது பதிலாக இருக்கும். இருப்பினும் கடந்த வருடம் நம்மைக் கடந்து சென்ற "வர்தா" புயலின்போது 'வாட்சப்'-பில் சிறகடித்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


(புயல் மற்றும் இதர சீற்றங்கள் கணிக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்ட பஞ்சாங்கங்களின் பக்கங்கள்)


        சரி, இவ்வளவு தூரம் நம்மை அலைக்கழிக்கும் மர்மம்வாய்ந்த கணிப்புகளான ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஒருவர்கூடவா அணுகவில்லை, என்கிற ஐயத்தோடு துழாவினால், கையில் அகப்பட்டார் ஒரு விஞ்ஞானி. உண்மையில் அவரது கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகம் ஏற்காவிட்டாலும், திட்டவட்டமாக மறுக்க இயலவில்லை, இன்றளவிலும்! அவ்வாராய்ச்சி முடிவுகள் உண்மையில் உலகை உலுக்கின. யார் அவர்? என்ன கண்டறிந்தார்? அறிய, அடுத்த பதிவுவரை காத்திருங்கள்.

அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.



("இதத்தான் இவ்ளோ நாளா எழுதுனியா?" என்கிற உங்கள் கேள்வி நியாயமானதே. இருப்பினும், இதில் நான் கொடுத்துள்ள தகவல் திரட்டுகள், நம்பகமான தகவல்கள், அனைத்துக்கும் மேலாக அதற்கு ஏற்ற படங்கள் ஆகியவற்றைத் தேடிப் பெற வருடமாகி விட்டது. அன்பர்களுக்கு மேலுமோர் நற்செய்தி. ஒரு பதிவை, மூன்றாக உடைத்து, அதில் ஒன்றை தற்போது இங்கே பதிவிட்டுள்ளேன். மீதமுள்ள இரண்டும் காலதாமதமின்றி அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொன்றாக வெளியாகும். காத்திருங்கள், விரைந்து தருகிறேன்.   - அயலான்)



துணை நின்ற நூல்கள்:
  1. நாஸ்ட்ரடாமஸ் சொன்னார் நடந்தது  - டாக்டர். கிருஷ்ணகாந்த்.
  2. ஜோதிடக் கலைக் களஞ்சியம்.
இப்பதிவுத்தளத்தை ஆங்கிலத்தில் பார்வையிட: 
          www.charismaticenigma007.blogspot.in

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
          www.facebook.com/ayalaan007

மேலும் விவரங்களுக்கு, காண்க:
Astrology Types
Gregorian Calendar
Origin of Gregorian Calendar
Calendar
History of Months' & Days' Names
Calendar Months' Name History
Aloysius Lilius
History of Months.
Days & Months
Mayan Numbers
North Korean Calendar
Tamil Years
Tamil Months