Friday 2 January 2015

24.) விண்வெளியிலிருந்து ஓர் விண்ணப்பம் ...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               கடந்த பதிவில், தன்னிச்சை எழுத்துக்கள் எழுதும் ஒருவரின் எழுத்து விஞ்ஞானிகளைக் குழப்பியது, எனக் கூறி வாசகர்களைக் குழப்பியிருந்தேன். அதன் விளக்கங்கள் இப்பதிவில். (அதற்கு முன் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு. பதிவிடும் நேரம் இதுநாள் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும்  [சில தாமதங்களுடன்!] தொடர்ந்து கொண்டிருந்தது. வரும் புத்தாண்டு முதல், பதிவுகள் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதி ஆகிய இரு நாட்கள் மட்டுமே இருக்கும். பணிச்சுமையை சமாளிக்கவும், சரியான தருணத்தில் அதிக ஆதாரப்பூர்வமான விஷயங்களை ஆராய்ந்து பதிவிடவுமே இவ்வேற்பாடு. இதுநாள்வரை மாதம் 4-லிருந்து 5 வரை உங்களை வந்தடைந்த பதிவுகள், வரும் புத்தாண்டு முதல், மாதம் இருமுறை மட்டுமே இருக்கும். நிச்சயம் இதில் பலருக்கும் வருத்தம் இருக்கலாம். உங்களை வருத்தமுறச் செய்ததற்காக நானும் வருந்துகிறேன். வாழ்வின் எத்தருணத்திலும் நன்மையோ, தீமையோ, சந்தோஷமோ, துக்கமோ  தனித்து வருவதில்லை. அதுபோல மாதம் இரு பதிவு என்பது வருத்தமான விஷயமாக இருந்தாலும், நமது பதிவை எனது நண்பர் ஒருவரது உதவியுடன் ஆங்கிலத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். அப்பதிவுகள்  (http://charismaticenigma007.blogspot.in/ என்கிற தளத்தில்) CHARISMATIC-ENIGMA என்கிற பெயரில் (7-ம் தேதி மட்டும்) வெளியாகும். நமது முந்தைய பதிவுகளைத்தான் மீண்டும் மொழிபெயர்க்கிறோமே தவிர, புதிதாக எதையும் புகுத்தப் போவதில்லை (அறிமுகவுரையைத் தவிர). அப்படி ஏதேனும் ஒரு எண்ணம் வரும் காலங்களில் எழுந்தால், நிச்சயம் தெரிவிக்கிறேன். இது தமிழ் வாசிக்கத் தெரியாத நண்பர்களுக்கான ஏற்பாடு மட்டுமே. ஆங்கில மொழிபெயர்க்கப்பட்ட அயலானின் முதல் பதிவு, அறிவிக்கப்பட்டபடி அடுத்த மாதத்திலிருந்து வெளியாகும். நிச்சயம் இவைகளுக்கு ஆதரவு நல்குவீர்கள் என நம்புகிறேன்.இனி பதிவைத் தொடரலாம்.) 

               கடந்த பதிவில் நாம் கண்ட  கிறிஸ்டல் பந்து ஞானிகள் /ஆவித்தொடர்பியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்காவிலுள்ள சிகாகோ மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் டிலூயிஸ் (Joseph Delouise). 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி, ஒரு ஓட்டலின் பாரில் நுழைந்த ஜோசப், அங்கிருப்பவர்களிடம் பேப்பரில் ரயில் விபத்துகுறித்து ஏதேனும் செய்தி பிரசுரமாகியுள்ளதா எனக்  கேட்டார். அப்படியேதும்,வரவில்லை என அங்கிருப்பவர்கள் தெரிவிக்க அவர்களிருக்குமிடத்திலிருந்து தெற்கில் பனிமூட்டம் காரணமாக இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்தார். இருப்பினும், அவரைச் சூழ்ந்திருந்த வழக்கமான மக்கள், சற்று வித்தியாசமாகவே அவரை நோக்கினர். வானொலியை அலைவரிசைக்கிரமமாய்த் திருப்ப, இரவு பதினொரு மணியளவில் கூட அவ்விபத்துகுறித்து எத்தகவலும் இல்லை. இரண்டுமணிநேரம் கழித்து (அதாவது இரவு ஒரு மணிக்கு) 'சற்றுமுன் கிடைத்த செய்தி, சிகாகோவிற்குத் தெற்கே, இல்லினாய் சென்ட்ரல் ரயில்கள் இரண்டு, பனியில்  மோதிக்கொண்டன. 3 பேர் இறந்துபோனார்கள், 43 பேர் படுகாயமடைந்தார்கள்' என செய்தி வந்தது. அன்றிலிருந்து எதிர்வரப்போகும் விபத்துகள் பற்றி பேசினார்; அவற்றில் பல பலித்தன. இத்தகு சக்திவாய்ந்த ஜோசப், மாபெரும் மாந்த்ரீக வித்தைகளில் கைதேர்ந்த மந்திரவாதியாக இருப்பார் என்கிற  உங்களின் கற்பனைகளை சுக்குநூறாக உடைக்கும் வண்ணம் இவர் எட்டாவதிற்கு மேல் படிக்காத, ஒரு சாதாரண முடிதிருத்தும் கலைஞர்!

              

(ஜோசப் டிலூயிஸ்)

             இவர் தனது ஆரூடங்கள் குறித்து பின்னாளில், "சைக்கிக் மிஷன்" (Psychic Mission) என்கிற பெயரில் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். (அவரது கணிப்புகளுள் சிலவற்றை பின்னிணைப்பில் (Link) இணைத்துள்ளேன்.) இவரைப் போன்ற கிறிஸ்டல் பந்து ஞானிகள் பலரும், தங்களை இயக்குவது ஒரு அமானுஷ்ய (நல்ல) ஆத்மாவே என்றே தெரிவிக்கின்றனர்.


              நமது முந்தைய பதிவில் கண்ட தன்னிச்சையான எழுத்துகள் மூலம் அவைகளைத் தொடர்புகொள்பவர்களுள் சற்று வினோதமானவர் ஹெலன் ஸ்மித் (Helen Smith) என்கிற பெண்மணி. தனது அனிச்சை எழுத்துகள் மூலம் செவ்வாய்க்கிரகவாசிகள் நம்மோடு தொடர்புகொள்கிறார்கள் என்கிற பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது எழுத்துகள் இதுவரையிலான உலக மொழிகள் எவற்றொடும் ஒத்துப்போகவில்லை. பண்டைய பிரெஞ்சு மொழியோடு ஓரளவிற்கு ஒத்துப்போனது. இவர் பிரெஞ்சுப் பிரஜையாக இருந்தாலும், முற்கால பிரெஞ்சின் எழுத்து வடிவத்தை காகிதத்தில் வடித்தது, இன்றுவரை விடைபகரவியலா மர்மமே...! (அப்போ செவ்வாய்க்கிரகவாசிங்க நம்மளோட பேச முயற்சி பண்றாங்களா?) எழுத்துகள் மட்டுமல்லாது சில படங்களையும் தன்னிச்சையாக வரைந்தார். மேலும் ஹெலன், மறுபிறப்பெடுத்துள்ள இந்து மதத்தைச் சார்ந்த ஒரு இளவரசியுடனும் (அவரின் பெயர் தெரியவில்லை. 5 நாட்களாகத் தேடுகிறேன்!), ஆஸ்திரியாவில் பிறந்த பிரெஞ்சு ராணியான மேரி அன்டௌனெட்டுடனும் (Marie Antoinette) (ஆவியுலகத்) தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


(ஹெலன் ஸ்மித்)


(ஹெலன் ஸ்மித்தின் அனிச்சை எழுத்துகள்)




('செவ்வாய்க்கிரகவாசிகளின் எழுத்துகளுக்கு இணையான ஆங்கில எழுத்துகள்' என ஹெலனால் விளக்கப்பட்ட எழுத்துகள்)


(ஹெலன் ஸ்மித்தின் அனிச்சை ஓவியம்)

               பின்னர், 'உளவியலின் தந்தை' என அழைக்கப்படும், சிக்மண்ட் பிராய்டின் (Sigmund Freud) சமகாலத்தவரான, தியோடர் ஃப்ளோர்னோய் (Theodore Flournoy) என்கிற உளவியல் பேராசிரியரால், 1899-ல், ஹெலனைக் குறித்து எழுதி வெளிவந்த "இந்தியாவிலிருந்து செவ்வாய்க்கிரகத்திற்கு" (From India to the planet Mars) என்கிற நூல், ஹெலனை மேலும் பிரபலமாக்கியது. (அது ஏன் குறிப்பாக இந்தியா, என்பதை அப்புத்தகத்தை வாசித்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.)


(தியோடர் ஃப்ளோர்னோய் )



              அதெப்படி செவ்வாய்க்கிரகவாசிகள் இப்படி தொடர்புகொள்ள இயலும்? ஒரு மனிதன் எவ்வாறு வருங்காலத்தைக் கணிக்க இயலும்? என பலவாறு குழம்பும் உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி என்னவெனில், இதைவிடவும் ஆச்சர்யமான நபரொருவர் இருக்கிறார். ஆவிகளின் துணையால் அறுவைசிகிச்சை செய்தவர், என உலகளவில் அறியப்பட்டவர். அவர் குறித்து அடுத்த பதிவில்.

அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.

(ஒருவழியாக, இதுநாள்வரை எனதுமடிக்கணினியின் நினைவகத்தில் மூச்சுமுட்ட நிரப்பி வைத்திருந்த தகவல்கள், எனது மடிக்கணினியை மொத்தமாக செயலிழக்கச் செய்துவிட்டன. ஆதலால் தான், எனது பதிவுகளில் இவ்வளவு தாமதம். என்று அம்முடக்கம் மீளுமெனத் தெரியவில்லை! இப்பதிவை மேலும் மேம்படுத்த முயற்சிக்கிறேன். அதுவரை விடைபெறுகிறேன். அன்பர்களுக்காக, பிரௌசிங் சென்டரிலிருந்து அயலான்!)

துணை நின்ற நூல்: கடவுள் - சுஜாதா.


இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=75604875
http://www.trivia-library.com/b/psychic-predictions-of-joseph-delouise.htm
http://en.wikipedia.org/wiki/H%C3%A9l%C3%A8ne_Smith
http://www.abovetopsecret.com/forum/thread276247/pg1
http://krisasard.deviantart.com/art/Helene-Smith-329001009
http://en.wikipedia.org/wiki/Marie_Antoinette
http://en.wikipedia.org/wiki/Th%C3%A9odore_Flournoy