Thursday 18 December 2014

22.) பேய்கள் பலவிதம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               நமது கடந்த பதிவில் ஆவிகள் மற்றும் அதன் வகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம், அதுபற்றிய மேலும் சில தகவல்களையும், விஞ்ஞானம் அதற்குத் தரும் விளக்கங்களையும் காண்போம்.

               நமது உடலில் நமது கண்களுக்கு (நுண்ணோக்கியில் காணுமளவிற்கு) புலப்படும் வண்ணம் செல்கள் (Cells) எவ்வாறு அமைந்துள்ளதோ, அதேபோல 'சைக்கான்கள்' (Psychons) என்கிற ஆற்றல் செல்களும் நமது உடலில் உண்டு என்கின்றனர் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் (Paranormal Researchers).


               சிலருக்கு அவ்வாற்றல் மூலமானது, தன்னிச்சையாகவோ, அவர்களையறியாத ஏதேனுமோர் விபத்திலோ விழிப்புற்று இயங்கத் தொடங்கும் (அவ்வாறு நடப்பது சாத்தியமா என்பதை வரும் பதிவுகளில் காண்போம்). அத்தகு கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒரு மனிதன் கற்றுக்கொண்டால், அவன் தற்போது அமானுஷ்யமாகக் கருதப்படும் பலவற்றையும், திறமையாகக் கற்றுக்கொண்ட ஒரு கலையைப் போல கையாள்வான். பலருக்கும் அது வசப்படும்போது, அது சக்தியாகத் தெரியாது, அறிவாகத் தெரியும், என்பதும் அவர்களது நம்பிக்கை. இதுநாள்வரையில் கற்பனையாகவும், மந்திரம் போலவும், அமானுஷ்யம் போலவும் தோன்றிய பல விஷயங்களும் பின்னாளில் அறிவியலால் நிரூபிக்கப்பட்டபின், சாத்தியமான ஒன்றாகவும், அறிவியலின் ஒரு கூறாகவும் மாறிய கதை அனைவரும் அறிந்ததே. உதாரணம், மனிதன் பறக்கக் கற்றது. ஆரம்பகாலத்தில் மந்திரவாதிகளால் மட்டுமே (சரி, சக்தி பெற்றவர்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்) சாத்தியம் எனக் கருதப்பட்ட மனிதனின் ஆழ்மன ஆசை, கைவந்த பின் அது அறிவியலயாகி, இன்று மனிதகுலத்தின் அத்தியாவசியத் தேவையுமாகிவிட்டது. (இவ்வாறான ஆற்றலை, தியானத்தின் மூலம் வெளிக்கொணர முடியுமென்றும், சித்தர்களும், ஜீவசமாதியடைந்த மகான்களும் இவ்வாறு செய்யவல்லவர்கள் என்பதும் ஆன்மீக நம்பிக்கையாளர்கள் கருத்து. எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தைக் கேட்டால், "எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், அது நம்மைப்போன்ற சக மனிதனுக்கும் கிடைக்கும் சாத்தியக்கூறுள்ள சக்தி/கலை என்கிற அளவில் மகிழ்ச்சியே!")


               மூளையின் பலகூறுகளை மனிதஇனம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதபோது, இவர்களின் கூற்று உண்மையாக இருந்தால், உண்மையில் நன்றாக இருக்கும். அவர்களுமேகூட இவ்வாறு நம்பக்காரணம், நமது மூளையிலுள்ள (ஏறத்தாழ) 200 கோடி செல்களில் (சராசரியாக) 3000 செல்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அந்த 200 கோடி செல்களையும் தூண்டிவிட்டால், மேற்கூறிய திறன்கள் கைவரப்பெறலாம் என்றும் நம்புகின்றனர். மேலும், இதுவரை உலகிலேயே மூளையின் அதிக பகுதிகளை உபயோகித்த மனிதர் என ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைக் (Albert Einstein) குறிப்பிடுகின்றனர். அத்துடன், ஐசக் நியூட்டனோடு (Isaac Newton) ஒப்பிட்டால் ஐன்ஸ்டீன் ஒன்றும் அவ்வளவு திறமையானவர் அல்ல என்றும் குறிப்பிடுகின்றனர். (இவைகுறித்த விரிவான விளக்கங்களை இனிவரும் பதிவுகளில் காண்போம், இப்போது நம் கதைக்கு வருவோம்.)


(நியூட்டனும், ஐன்ஸ்டீனும்)

                பொதுவாகவே ஆவிகள் அல்லது பேய்கள் குறித்து பல்வேறுவிதமான கருத்துகளும், அவற்றின் உருவமைவு குறித்த அனுமானங்களும் மனித இனம் பயத்தை உணர்ந்த காலந்தொட்டே பல்வேறு விதத்திலும் வளர்ந்து வருகிறது. அவற்றில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பொதுவான அம்சங்கள் என எடுத்துக்கொண்டால்,
  1. ஆவி என்பது முப்பரிமாண [3 Dimensional] தோற்றமுடைய, மங்கலான [Out-of-focused] ஒரு உருவம்.
  2. அவைகளுக்குக் கதவு, சுவர் போன்ற எவ்வித தடையும் ஒரு பொருட்டல்ல, எதனுள்ளும் புகுந்து வரும் சக்தியுடையவை/தன்மையுடையவை. (இருந்தாலும் ராத்திரி நேரத்துல பேய் பயம் வந்தா, போர்வையால முகத்த முழுசா மூடிகிட்டு ஏன் தூங்குறாங்கனு எனக்கு இன்னும் புரியல!)
  3. அதன் கால்கள் தரையில் படாது அல்லது அதற்கு கால்கள் கிடையாது என சொல்லப்பட்டாலும், சிலசமயங்களில் கால்கள் கண்களுக்குத் தெரியும்.
  4. சிலசமயங்களில் அவை பேசும். உதடுகளில் அசைவில்லாவிட்டாலும் நமது காதில் ஒலி கேட்கும்.
  5. மனிதனின் கண்களுக்குத் தெரியும் முன்பே, நாய், பூனை, குதிரை போன்ற விலங்கின் கண்களுக்குத் தெரியும். அவை எழுப்பும் வினோத ஒலி மற்றும் நிலைகொள்ளாமல் அலைவது போன்றவற்றின்மூலம் இதை அறியலாம்.
  6. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் தோன்றும். (சினிமாக்களில், அதை வெள்ளை உடையாகக் காட்சிப்படுத்தியிருப்பர்
  7. ஆவிகள் 'பெரும்பாலும்' பலரின் கண்களுக்கு ஒரே சமயத்தில் தோன்றுவதில்லை.
  8. சுற்றுப்புற வெப்பநிலை திடீரென குறைந்து, ஒருவித குளிர்ச்சி பரவும். (மல்லிகைப்பூ வாசனையெல்லாம் நம்ம ஊர்ல சொல்ற கதை.)

                    சரி, இனி அதன் கருத்து குறித்த இரு தரப்பு விவாதங்கள்.
  • அது என்ன பேய் ராத்திரில மட்டும் வருது? அதோட ஷிப்டு அப்போதான் ஸ்டார்ட் ஆகுதா?
  • மனிதனின் ஆதிபயம், "இருட்டு". எனவே, இருட்டில் பெரும்பாலும் நம்முள் ஏற்படும் பயத்தை பேயுடன் தொடர்புபடுத்தி இருட்டு இருந்தால் பேய் இருக்கும் என்கிற குழந்தைத்தனமான மனநிலையுடனும், நாம் கேட்டுவளர்ந்த கதைகளின் கற்பனையான விஷயங்களை நிஜவாழ்வில் உருவகப்படுத்தி நம்மை நாமே இரவில் அல்லது இருட்டில் பயமுறுத்திக்கொள்கிறோம். (நம்மளுக்கு இப்படிலாம் கதைசொல்லி [சாப்பிடுறதுக்கும்,தூங்குறதுக்கும்] பயமுறுத்தின கிழடுகள சொல்லணும்...!) ஒருவேளை ஆவிகள் இருந்தாலும், அவைகளை பகலில் கண்டதாகக் கூறப்படும் ஆதாரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும், நம் மனம் இரவில் மட்டும் சற்று உதறக் காரணம், நாம் நம்மைப் பகலுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டோம், அவ்வளவே.
  • அதெப்படி உதடு அசையலேனாலும் சத்தம் கேட்கும்?
  • இதை ஒரு 'தொலைவில் உணர்தல்' [Telepathy] போன்ற சக்தியாகக் கொள்ளலாம். (அதுபற்றி விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்.)
  • அதெப்படி விலங்குகள் கண்ணுக்கு மட்டும் (எப்பவும்) பேய் தெரியும்? இத்தனைக்கும் ஆந்தைய தவிர மத்த விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ நீல நிறம் தெரியாது. எல்லாமே கறுப்பு-வெள்ளை தான். அப்படி இருக்கும்போது, வெள்ளை நிறத்துல இருக்குற பேய, எல்லா நிறத்தையும் பாக்கமுடிஞ்ச மனுஷன் பாக்குறதுக்குள்ள, விலங்குகள் எப்படி பாக்குது?
  • மனிதனால் புறஊதாக் கதிர்களையோ, அகச்சிவப்புக் கதிர்களையோ வெறும் கண்களால் பார்க்க இயலாது. ஆனால், தேனீக்களால் புறஊதாக்கதிர்களைக் காண இயலும். அதேபோல் பேய்கள் என்கிற விஷயம் ஒருவேளை உண்மையாக இருந்து, அது மேற்கூறிய சைக்கான்களின் கட்டமைப்பாக இருந்து, அவற்றைக்காணும் திறனை விலங்குகள் பெற்றிருந்தால்? நமக்கும் கூட அத்தகு திறன்கள் இருந்திருந்து, நாமும் பரிணாம வளர்ச்சியின் பாதையில் அத்தகைய திறன்களை (அவசியப்படாததால்) தவறவிட்டிருக்கலாம். உதாரணம், விலங்குகளின் கண்களில் ஒளி பாய்ச்சும்போது தோன்றும் ஒருவித மினுமினுப்பு மனிதனின் கண்களில் தெரிவதில்லை. (புகைப்பட வெளிச்சத்தில் சில சமயம் சிவப்பு நிறத்தில் கண்கள் [Red Eye] தோன்றும்.) அவ்வாறான ஒளிர்தலுக்குக் காரணம், விலங்குகளின் விழித்திரையின் [Retina] பின்புறமுள்ள "டேப்பிடம் லூசிடம்" [Tapetum Lucidum] என்றழைக்கப்படும் ஒருவித சவ்வுப்படலம் ஆகும். மேலும் நிறக்குருடு [Colour-Blindness] குறைபாடுடைய மனிதர்களும் பேய்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளனரே. (அலெக்ஸாண்டரின் [Alexander The Great] ஆசிரியரான அரிஸ்டாட்டில் [Aristotle] நிறக்குருடு குறைபாடுடையவர். அலெக்ஸ்ண்டருக்கு வலது கண் நீல நிறத்திலும், இடது கண் கருப்பு நிறத்திலும் இருக்குமாம். [அதுபோன்ற மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். விலங்குகளுக்கும்கூட இவ்வாறு ஏற்படுமாம்.] மேலும், நீல நிறக் கண்களுடையவர்களுக்கு, கறுப்பு நிறக் கண்களுடையவர்களை விட இருளில் பார்க்கும் திறன் அதிகமாம்.) 


(இருளில் ஒளிரும் புலியின் கண்கள்)


(நீல நிற கண்கள்)


[Red-Eye]


(தனது குருவான பிளாட்டோவுடன், அரிஸ்டாட்டில்)


(அலெக்ஸாண்டரின் கண்கள்)

                 இவ்வாறு ஒரு கண் மட்டும் நிறம் மாறுவதை "ஹெட்டிரோக்ரோமியா" [Heterochromia] என்றழைக்கின்றனர். இது பிறவியிலேயே இருக்கவேண்டிய அவசியமில்லை. வளர்ந்தபின் ஏற்படும் விபத்துகளாலும் இவ்வாறாகலாம். மேலும், இது விலங்குகளுக்கும் கூட ஏற்படும்.


(ஹெட்டிரோக்ரோமியா கண்கள்)


(பிரபல ஆங்கில ராக் பாடகர், டேவிட் போவி)


(ஹெட்டிரோக்ரோமியா கண்களுடைய பூனை)
  • பேய் ஏன் வெள்ளை நிறத்துலேயே தெரியுது / திரியுது?
  • ஆவிகள் அல்லது பேய்களின் உருவத்தின் நிறமானது அதன் தன்மைக்கேற்ப வெண்மை, பழுப்பு, கருப்பு என மாறுபடுவதாக ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி இரவிச்சந்திரன் [Vikravandi Ravichandran] ஒரு பத்திரிகையில் பேட்டியளித்திருந்ததாக ஞாபகம். அவை புண்ணிய ஆத்மாக்களாய் இருப்பின் வெண்மை நிறமும், துர் ஆத்மாக்களாய் இருப்பின் கருமை நிறத்திலும், அதன் தன்மைக்கு ஏற்ப இவ்விரண்டின் பொதுவான நிறத்திலும் தோன்றுமெனவும் குறிப்பிடிருந்தார்.

(விக்கிரவாண்டி இரவிச்சந்திரன்)
(இதவிட பெரிய படம் கிடைக்கலங்க)
             

               ('என்ன இவன், பேய்-னு சொல்லிட்டு, யாரோ வாளோட நிக்குறமாதிரி படம் போட்டிருக்கானே! பேய் என்ன வாளோடயா நிக்கும்?' என உங்களுக்குத் தோன்றலாம். நாம் கடந்த பதிவில் பார்த்த, சாலமன்  மன்னன் விவரித்த பேய்களைப் பற்றிப்பார்க்கும்போது இதன் அர்த்தம் புரியும்.)
  • நான் ஒரு பேயைப் பாக்கணும்னு நினைக்குறேன். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன், மிரட்டிப் பார்த்தேன், சவால் விட்டேன், கேவலமா திட்டுனேன் எதுக்குமே வரல. அப்போ அப்படி ஒண்ணு இல்ல-னுதானே அர்த்தம். இருந்தா நான் கூப்பிட்டப்போ ஏன் வரல? என்னயப் பாத்து அது பயந்திடுச்சா?
  • பேயைப் பார்க்க நீங்கள் மட்டும் மனது வைத்தால் போதாது. அதுவும் மனதுவைக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களைவிட உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு அதிகாரியைப் பார்க்க, உங்கள் விருப்பத்தைவிட முக்கியமாக அவரின் விருப்பமும் அவசியம் என்பதுபோல. எனது நண்பன் அருண் குமார் என்பவனுடன் ஒரு முறை விவாதித்தபோது அவன் கூறிய ஒரு விஷயம். "இப்போ ஒரு எறும்ப எடுத்துக்கோ. அது பாதைல நீ நின்னாலும், உன் முகத்த அது பாக்கணும்னா, ஒண்ணு நீ அத உன் உயரத்துக்கு தூக்கணும், இல்லேனா நீ அது மட்டத்துக்கு இறங்கணும். பேய், கடவுள் எல்லாம் அப்டித்தான். ஒண்ணு அது உயரத்துக்கு நாம போகணும், இல்ல அத நம்ம உயரத்துக்கு இழுக்கணும். இங்க உயரம்னா Height இல்ல, நிலை-னு (Level / Stage) வச்சுக்கலாம்." என்றான். ஆவிகளுடன் பேசக்கூடியவர்களாக நம்பப்படும் மீடியம்களான (Medium) விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் போன்றோர் இவ்வாறுதான் செய்கின்றனர் என்பதும் ஆவியுலக நம்பிக்கையாளர்களின் கருத்து.
  • சரி செத்தவங்கதான் ஆவியா அலையுறாங்க. அவங்க போட்டிருந்த துணியுமா ஆவியா மாறும்? அப்போ நாம கிழிக்குற துணியெல்லாம் எங்க பேயா சுத்துது? ஏன் மனுஷன் மட்டும் பேயாகுறான்? விலங்குகள், பறவைகள், தாவரங்கள்-லாம் பேயாகுமா? (அப்படிமட்டும் ஆச்சு-னா ஒருத்தன் சாப்பிட முடியாது! யாரும் மரத்த வெட்டவோ, விலங்குகள பலி கொடுக்கவோ முடியாது!)
  • 'இப்படியெல்லாம் கேட்பது அபத்தம். ஆவிகள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதன் உண்மைத்தன்மை ஒருநாள் வெளிப்படும்' என முடிக்கின்றனர் நம்பிக்கையாளர்கள். (ஹ்ம்...பாப்போம்)

                சரி. உலகின் சில முக்கியமான மதத்திலும் இதுகுறித்த நம்பிக்கைகளைப் பற்றிப்பார்த்தால்,
  1. இந்து மதம் - ஆவிகள் உண்டு. துர்மரணத்தைத் தழுவியவர்கள் பேயாக அலைவர். சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் உண்டு. ஒருவரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறுஜென்மமும், மோட்சமும் கிட்டும். 
  2. கிறிஸ்தவ மதம் -  பரிசுத்த ஆவி (!) உண்டு. பேய்கள் சாத்தானின் வேலை. துர்மரணத்தைத் தழுவியவர்கள் பேயாக அலைவர். சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் கிடையாது. (இப்போதுள்ள பைபிளின் படி. 'அப்போ பழைய பைபிள்-னு ஒண்ணு இருக்கா?' அதுபற்றி வரும் பதிவுகளில்!) தீர்ப்புநாளில் இறந்தவர்களனைவரும் உயிர்ப்பிக்கப்படுவர்.
  3. இஸ்லாமிய மதம் - ஆவிகள் கிடையாது. சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் கிடையாது. இறந்தபின் ஒருவரின் உயிர் திரைமறைவிலுள்ள அல்லாவின் (இறைவனின்) கைகளுக்குச் சென்றுவிடும்; தீர்ப்புநாளில் இறந்தவர்களனைவரும் உயிர்ப்பிக்கப்படுவர். (கிறிஸ்தவத்திலும், இஸ்லாத்திலும் இறந்தவர்களைப் புதைக்க இந்நம்பிக்கையே காரணம்.)
  4. பௌத்த மதம் - சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் உண்டு. (தலாய் லாமாக்கள் இந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.) ஒருவரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறுஜென்மமும், மோட்சமும் கிட்டும்.

                இங்கு வேடிக்கை என்னவென்றால், ஆவிகள் குறித்த நம்பிக்கைகளை மறுக்கும் மதத்தினரும், ஆவிகள் குறித்து நம்புவதே. உண்மையோ பொய்யோ, வாழ்க்கையில் அனைவரும் ஒரு சுவாரஸ்யத்தையே விரும்புகிறோம். நேர்மின்முனைக்கு எதிரான எதிர்மின்முனை ஒரே மின்கலத்தில் இருப்பதுபோல்தான் இதுவும் என்கின்றனர்.

                சரி. உண்மையில் இறந்தவர்களின் ஆவிகளுடன் பேச முடியுமா? அவ்வாறு நடப்பது சாத்தியம் என வைத்துக்கொண்டாலும், அவை நமக்கு உதவுமா? அவ்வாறு உதவிய சம்பவங்கள் உண்டா? எனத் தேடும்போது சம்பவங்கள் நிறையக் கிடைத்தன. அதுவும் நமது பதிவின் அடிப்படை நோக்கமான, மறைமுக இணைப்புகளுடன்! அனைத்திற்கும் உச்சமாக, ஆவிகளுடன் பேசுவதற்கான கருவியை/இயந்திரத்தை கண்டுபிடிக்க முயன்ற ஒரு சம்பவமும் அடங்கும். மேலும் ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஒரு அறிவுரை, பேயை நீங்கள் நேரில் கண்டால், பயப்படாமல் இருக்கவேண்டும். காரணம், உங்கள் பயமே அதன் சக்தியையும், உங்களை மேலும் பயமுறுத்துவதற்கான நிலைப்பாட்டையும் அதிகரிக்கச்செய்யும் என்கின்றனர். தைரியமானவர்களை பேய்கள் தாக்குவதோ பீடிப்பதோ இல்லை எனக் கூறுகின்றனர். (இங்க அவன் அவன் வீட்டுக்கார அம்மாவ நேர்ல பார்த்தே பயப்படுறான். இதுல ஆவியா வேற வந்தாங்கன்னா வெளங்கிடும்!) அப்படியானால் பேய் பீடிப்பது, தாக்குவது எல்லாம் உண்மையா? 

                மேற்கூறிய கேள்விகளுடன் காத்திருங்கள் அடுத்தவாரம் வரை. (நண்பர்களே, சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பதிவில் இத்தனை தாமதம். உங்களை காக்கவைத்தற்காக மன்னிப்புக் கோருகிறேன். அநேகமாக, புத்தாண்டிலிருந்து பதிவிடும் காலத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதை உறுதிபடுத்தியபின் தெரிவிக்கிறேன். உங்களது காத்திருப்புக்கும், பொறுமைக்கும் தலைவணங்குகிறேன். தங்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி! உங்களுக்காகவே, இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பதிவு!)

அதுவரை நன்றிகளுடன்,
                        - அயலான்.



துணை நின்ற நூல்கள்:

  1. மனிதனும் மர்மங்களும் - மதன்.
  2. நாஸ்டர்டாமஸ் சொன்னார், நடந்தது - டாக்டர்.கிருஷ்ணகாந்த்.


இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

1 comment: